Friday, July 25, 2025

தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?..

அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?..
இந்த ஆன்மிக மாதத்தில் பெண் தெய்வங்களுக்கு நாம் செய்யும் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நிச்சயம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் அரியலூர் மாவட்டம் அருகே கோயில் கொண்டிருக்கும் தையல் நாயகி அம்மன் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

🙏தையல் நாயகியாக அம்மன்.

இந்த கோயிலானது அம்மாவட்டத்தில் பொய்யாத நல்லூர் என்ற ஊரில் உள்ளது. இந்த கோயில் நடையானது காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். மயிலாடுதுறையில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் அம்பாள் தையல் நாயகியின் சகோதரி தான் இக்கோயிலில் தையல் நாயகியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

🙏கோயிலின் அற்புத வரலாறு.

முன்பு காலத்தில் இரு சகோதரிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நடந்தே பயணம் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இருவருக்கும் தையல் நாயகி என பெயர் இருந்தது. வெகு தூரம் இருவரும் நடந்து வந்த நிலையில் களைப்பில் மூத்த பெண் கரிசல் மண் நிறைந்த பகுதியில் அயர்ந்து தூங்கினாள். சகோதரி அமர்ந்ததை அறியாமல் தொடர்ச்சியாக நடந்த தங்கை வளம் பொருந்திய நஞ்சை மண்ணை அடைந்தாள். 

பின்னால் திரும்பிப் பார்க்கும்போது தனது சகோதரி இல்லாததை கண்டு இந்தப் பெண் கூவி அழைத்தாள். ஆனால் தனக்கு இந்த கரிசல் மண் பிடித்து போய் விட்டதால் இங்கேயே கோயில் கொள்கிறேன் என அந்த சகோதரி கூறினார். அதற்கு இந்த பெண்ணும் சம்மதம் சொல்ல, எனக்கு ஊரில் மக்கள் விழா எடுத்தால் நீ அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டாள். அதற்கு கரிசல் மண்ணில் இருந்த சகோதரியும் இசைந்தாள். 

இப்படியாக மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் விழா நடைபெறும் போது பொய்யாத நல்லூர் கோயிலில் உள்ள உற்சவ அம்மனை மக்கள் தோளில் சுமந்து சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்புவது வழக்கமாக உள்ளது.

🙏கோயிலின் மகிமைகள்..

பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் இந்த ஊருக்கு பொய்யாத நல்லூர் என பெயர் ஏற்பட்டதாக கூறுவார்கள். எப்படி வைத்தீஸ்வரன் கோயிலில் வீற்றிருக்கும் தையல்நாயகி அம்மனுக்கு பேரும் புகழும் உள்ளதோ அதேபோல் இங்கு உள்ள தையல்நாயகி அம்மனுக்கும் எதற்கும் குறைவில்லாத புகழ் உள்ளது. இந்தக் கோயிலின் அருகிலேயே வைத்தீஸ்வரன் குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அய்யனார், காமாட்சியம்மன், பொன்னியம்மன், சாமுண்டீஸ்வரர், வீரமுத்தையா, மருதையன் ஆகியோரும் இந்தக் கோயிலில் காட்சி கொடுக்கின்றனர். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆடி பூர நட்சத்திரத்தில் அம்மன் தோன்றினாள்.

#ஆடிமாதம்_பூர_நட்சத்திரத்தில்தான்_அம்மன்_தோன்றினாள்.  பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்...