*ஈசனால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார் பெருமையைப் போற்றும் மாங்கனி திருவிழா!*
அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்ற காரைக்கால் அம்மையார் 3ம் நூற்றாண்டில் அவதரித்தவர். தாய், தந்தையற்ற இறைவனால் ‘அம்மையே’ என்று அன்புடன் அழைக்கப்பெற்ற பெருமையுடையவர். திருக்கோயில்களில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பவரும் இந்த அம்மையார் ஒருவரே.
சோழ வள நாட்டில் காரைக்கால் ஒரு அழகிய துறைமுக நகரம். மூன்றாம் நூற்றாண்டில் தனதத்தர் எனும் வணிகர் வணிகக் குலத் தலைவராக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு பிறந்த மகளுக்கு புனிதவதி என பெயர் சூட்டி மகிழ்ந்தார் தனதத்தர்.
புனிதவதியார் சிறு வயதிலிருந்தே சிவ பூஜை செய்து வந்தார். புனிதவதியார் பருவமடைந்ததும் மணமுடித்து வைத்தனர் பெற்றோர். ஒரு நாள் பரமதத்தரைக் காண வந்த அவரது நண்பர்கள் இரு மாங்கனிகளை அவரிடம் கொடுத்துச் சென்றனர்.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.
அவர் அவற்றை தனது வீட்டுக்குக் கொடுத்தனுப்பினார். அன்று நண்பகல் சிவனடியார் ஒருவர் புனிதவதியாரின் வீட்டுக்கு வந்தார். அவரின் பசித்த நிலைக்கண்டு புனிதவதியார் அவருக்கு அமுது படைத்து மாங்கனிகளில் ஒன்றை சாதத்தோடு அவரது இலையில் இட்டார். அதை உண்ட அவர், புனிதவதியாரை வாழ்த்திச் சென்றார். பிறகு வீட்டுக்கு வந்த பரமதத்தருக்கு உணவு பரிமாறி மாங்கனியையும் உணவோடு வைத்தார்.
அந்த மாங்கனி சுவையாய் இருந்ததால் மற்றொரு கனியையும் அவர் கொண்டுவரும்படி கேட்டார் கணவர். புனிதவதியார் செய்வதறியாமல் இறைவனிடம் சென்று முறையிட, அவர் கையில் மாங்கனி ஒன்று வந்தது. அது முதலில் சாப்பிட்டதை விட சுவையாக இருப்பதை அறிந்து, ‘இக்கனியை எங்கு பெற்றாய்’ எனக் கேட்க அதற்கு அம்மையார், ‘இது இறைவன் கொடுத்தது’ எனச் சொன்னதை அவர் நம்பவில்லை.
‘அப்படியெனில் அந்த இறைவனிடம் இன்னொன்று பெற்றுக் கொடு’ எனக் கேட்க, மற்றொரு கனி வந்தது. அதை கணவர் கையில் கொடுக்க, அந்த மாங்கனி மறைந்தது. இதைக் கண்டதும் தனது மனைவி மனிதப் பிறவி அல்ல, தெய்வம் எனக் கருதி பொருளீட்டுவதாகச் சொல்லி பாண்டி நாடு சென்றார். அங்கு வாணிபம் சிறந்ததும் மறுமணம் புரிந்து கொண்டார்.
அவருக்கு ஒரு மகள் பிறந்து அதற்கு புனிதவதி எனப் பெயர் சூட்டி, கூப்பிடும் போதெல்லாம் திருமந்திரம் ஓதுவதாக எண்ணி மகிழ்ந்தார். அம்மையாரோடு உறவினர்கள் அவரைக் காணச் சென்றபோது மனைவி, மகளுடன் அம்மையாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.
‘இனி, தனக்கு அழகு மேனி தேவையில்லை. பேய் உருவம் தந்தருள வேண்டுமென வேண்டி, ஈசனை தரிசிக்க தரையில் கால் வைக்காமல் தலையாலேயே நடந்து சென்றார். இதனைக் கண்ட ஈசன், ‘அம்மையே, நம்மிடம் நீ வேண்டுவது யாது?’ எனக் கேட்க, அம்மையார் இறைவனை, ‘அப்பா’ என்றழைத்து, இறவாத அன்பு வேண்டும், பிறவாமை வேண்டும், பிறப்புண்டேல் உம்மை மறவாமை வேண்டும்’ என்று வேண்டினார். அதற்கேற்ப இறைவன், ‘அம்மையே நீ திருவாலங்காடு அடைந்து எமைப் பாடு’ என்று பணித்தார். திருவாலங்காட்டில் ‘கொங்கைதிரங்கி’ எனவும், ‘எட்டி இலம் ஈகை’ எனத் தொடங்கும் மூத்தத் திருப்பதிகங்களை அம்மையார் பாடி அருளினார். திருவாலங்காட்டில் இறைவனின் பொற்பாத நிழலில் அம்மையார் என்றும் வீற்றிருக்கும் பெறற்கரிய பேறு பெற்றார்.
மாங்கனியை வைத்துத் திருவிளையாடல் புரிந்த ஈசனின் பேரருளைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இத்திருத்தலத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment