Friday, August 29, 2025

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்,திருக்கானூர், மணல்மேடு, விஷ்ணம்பேட்டை – 613 105

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்,
திருக்கானூர், மணல்மேடு, விஷ்ணம்பேட்டை – 613 105
தஞ்சாவூர் மாவட்டம். 
*இறைவன்: செம்மேனிநாதர்/ கரும்பீஸ்வரர். 
*அம்மன்: சவுந்தரநாயகி/சிவயோகநாயகி அம்பாள்.            *தீர்த்தம்: கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம். 
*தலவிருட்சம்:    வில்வ மரம்.    

*திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற் பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர். இக்கூற்று உண்மை என்பது போல் தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. 

*ஒரு சமயம் கொள்ளிடம் ஆற்றில்      பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது இக்கோயில் முழுவதும் மூழ்கி, மணலால் மூடப்பட்ட நிலையில் ஒரு கரும்பு மட்டுமே அங்கு முளைத்திருக்க அங்கு தோண்டியபோது மணலில் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

*இது பரசுராமரின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். ஒரு முறை பரசுராமர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றான்.  திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு “சத்திரிய தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார். 

*இத்தல இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன.         

*அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில் இத்தலத்தை தேர்வு செய்து தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் இருந்த அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். 
இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.   
கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.  
*அம்பாள் திருமேனி சாளக்கிராமக் கல்லினால் ஆனது. 

*ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3-ந் தேதிகளில் சூரிய உதயத்தில், சூரியனின் ஒளி மூலஸ்தான இறைவன் மீது படும். 
இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழா நடைபெறுகிறது. 

*இது மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை  நடக்கும் தலம்.                                

 *கணவனும், மனைவியும் இணைந்து இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

*திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், 
சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

*மேலும் சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

*இக்கோயில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.   

*பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி  தெரிவிக்கிறது. 
மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.   

*இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.  

*தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோயிலை அடையலாம்.           

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் .              

No comments:

Post a Comment

Followers

திருமாணிக்குழி (திருமாணி)வாமனபுரீஸ்வரர் இங்கு பள்ளியறையே கருவறை

#பள்ளியறையே_கருவறையாக_இறைவன்_இறைவியை_விட்டு_இணைபிரியாமல் எப்போதும் சிவசக்தியாக இணைந்திருக்கும்  தேவாரம் மற்றும் திருப்புகழ் பெற்ற நடுநாட்டுத...