Saturday, August 30, 2025

திருமாணிக்குழி (திருமாணி)வாமனபுரீஸ்வரர் இங்கு பள்ளியறையே கருவறை

#பள்ளியறையே_கருவறையாக_இறைவன்_இறைவியை_விட்டு_இணைபிரியாமல் எப்போதும் சிவசக்தியாக இணைந்திருக்கும்  தேவாரம் மற்றும் திருப்புகழ் பெற்ற நடுநாட்டுத் தலமானதும், 
திருமால் 
வாமன அவதாரத்தில் சிவபெருமானை
வழிபட்ட இடமான கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள 
#கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#திருமாணிக்குழி (திருமாணி)
#வாமனபுரீஸ்வரர் என்ற #மாணிக்கவரதர்
(உதவி நாயகர்)
#மாணிக்கவல்லி என்ற #அம்புஜாட்சிஅம்மன் 
(உதவி நாயகி)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
திருமாணிக்குழி (திருமாணி) வாமனபுரீஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
இது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 17வது தலங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். 

*மூலவர்:
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர்.  

*அம்பாள்: அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.  

*தல மரம்:  கொன்றை மரம் -   

*தீர்த்தம் : சுவேத தீர்த்தம், கெடிலநதி.  

*வழிபட்டோர்: 
சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், திருமால்.

*பாடியவர்கள்:
அப்பர் ,சுந்தரர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் 

#திருஞானசம்பந்தர் பாடிய #திருமாணிக்குழி தேவாரப் பதிகம்:

"பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
  பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
  வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
  வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
  சேருதவி மாணிகுழியே.    

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
  தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி
  பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ
  வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில்
  நீடுதவி மாணிகுழியே. 

*அருணகிரிநாதர் அருளிய திருமாணிக்குழி திருப்புகழ்:

"மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
          மணத்த வார்குழல் மாமாத ராரிரு …… கொங்கைமூழ்கி 
மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
          வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் …… பண்டநாயேன் 
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் …… தங்குகாதும் 
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
          படைத்த வாகையு நாடாது பாழில்ம …… யங்கலாமோ 
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் …… வஞ்சவேலா 
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் …… கண்டவீரா 
குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் …… வஞ்சிதோயுங் 
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு …… தம்பிரானே.

#புராண வரலாறு: 

திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் “உதவி” என்றே குறிக்கப் பெறுகின்றது.

*இங்குள்ள நாக தேவர்களால் வழிபட்ட தட்சிணாமூர்த்தி:

இங்குள்ள தட்சிணாமூர்த்தியை நாக தேவர்களே வழிபட்டதாகவும், அவரது சொற்பொழிவுகளால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.

*மார்க்கண்டேயர் இங்கு 
 சிவனை வழிபட்டார்:

திருக்கடையூர் செல்வதற்கு முன்பு மார்க்கண்டேயர் இங்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

*ஸ்தல விருக்ஷம்:

இந்த கோயிலின் ஸ்தல விருக்ஷம், கொண்டரை மரம் மிகவும் பழமையானது மற்றும் முந்தைய யுகங்கள் மூலம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

*கோயில் கட்டமைப்பின் பின்னணியில் உள்ள புராணக் கதைகள்:

சிவபெருமானின் சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் (மண்டபம்) உள்ள நான்கு தூண்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன என்று ஸ்தல புராணம் கூறுகிறது. அடுத்த மண்டபத்தில், ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களைக் குறிக்கின்றன. தாழ்வாரங்களில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கின்றன.

*சிவபெருமானின் தரிசனத்தை 
சிவாச்சாரியார் உதவியுடன் செய்யலாம்:

இக்கோயிலில் சிவாச்சாரியார் உதவியின்றி இறைவனை தரிசனம் செய்ய முடியாத ஒரே சிவன் கோயில். பக்தர்கள் திரையை அகற்றியவுடன் 2 நிமிடங்கள் மட்டுமே இறைவனை வணங்கலாம். ஸ்தல புராணத்தின்படி, இந்த 2 நிமிட வழிபாடு 12 நாட்கள் சிவபூஜை செய்வதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இந்த தரிசனம் ஒரு பிரதோஷ நாளில் நடந்தால், அது சிதம்பரத்தில் 3 முறையும், திருவண்ணாமலையில் 8 முறையும், பனாரஸில் (காசி) 16 முறையும் வழிபடுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

*சூரியன் சிவபெருமானுக்கு பூஜை செய்தது இங்கே:

மற்றொரு புராணக்கதையின்படி, இந்தக் கோயில் சூரிய பகவான் (சூரியக் கடவுள்) சிவபெருமானுக்கு தனது பூஜைகளைச் செய்வதற்காக எழுப்பப்பட்டது.

*சங்கமம்:

கெடிலம் நதி மகாலட்சுமி தேவியின் அருளைக் குறிக்கிறது, சரஸ்வதி தேவி ஸ்வேதா நதியின் வடிவத்தில் பாய்கிறார். இந்த இரண்டு நதிகளின் சங்கமப் புள்ளி திருமாணிக்குழி என்று நம்பப்படுகிறது.

*பள்ளியறையாக கருவறை சன்னதி:

சிவன் எப்போதும் அம்பாளுடன் இருப்பதாகவும், சிவகண பீமருத்திரரால் (முன் திரையில் அச்சிடப்பட்ட பீமங்காரன் என்றும் அழைக்கப்படுகிறது) பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே ஆரத்தி முதலில் பீமருத்திரருக்கு அனுமதி பெறவும், பின்னர் சிவனுக்கும் காட்டப்படும். ஆரத்திக்குப் பிறகு திரை மூடப்படும். சிவன் எப்போதும் அம்பாளுடன் இருப்பதால், இந்த கோவிலில் பள்ளியாறை இல்லை. 

*வழிபாட்டுத் தலம்:

மேலும், இந்த கோவிலில் சிவனை வழிபடுவது 16 முறை காசியையும், 3 முறை திருவண்ணாமலையையும், 3 முறை சிதம்பரத்தையும் வழிபட்டதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. 

*திருமாணிக்குழி:

திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.) இந்தத் திரைக்கே அர்ச்சனை, பூஜை வழிபாடு மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது. இதனால் 'உதவி ' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)

வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் இறைவன் 'உதவிநாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது

அசுர மன்னனாக மகாபலி சக்கரவர்த்தி நல்லாட்சி புரிந்து நற்பெயரைப் பெற்றவனாகவும், அதிக வலிமை வாய்ந்த அரசனாகவும் இருந்தான். வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனாக அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்கிறார். மகாபலி தனது குருவான சுக்ராச்சாரியாரின் எச்சரிக்கையையும் மீறி அதற்கு சம்மதிக்கிறான். குட்டையாக இருந்த வாமனன் விசுபரூபம் எடுத்து நிற்கிறார். அவர் முதல் அடியை வானத்திலிருந்து பூமிக்கு வைக்கிறார், இரண்டாவது அடியை பூமியிலிருந்து பாதாள உலகத்திற்கு வைக்கிறார். மன்னன் மகாபலி, தன் வாக்கை நிறைவேற்ற முடியாமல், மூன்றாவது அடிக்கு தன் தலையைக் கொடுக்கிறான். வாமனன் அவன் தலையில் தன் காலை வைத்து அவனை பாதாளத்திற்கு அனுப்புகிறார். இருந்தாலும் தீராப் பழியாலும் தோசத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். 
தனது துயர் நீங்க கெடில ஆற்றங்கரையான இத்ததலத்தில் ஈசனைப் பூசித்து தோசம் நீங்கப் பெற்றார் என்று நம்பப்படுகிறது. பிரம்மச்சாரியாக வாமன அவதாரம் எடுத்த நாராயணன் சிவனை பூசித்ததால் இத்தலம் திருமணிக்குழி (மணி என்றால் பிரம்மச்சாரி என்று பொருள்) என பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.

தனக்கு ஏற்பட்ட தோசத்தை இங்கு வந்து சிவனை வழிபட்டு வாமனன் நீக்கிக் கொண்டதல், இத்தலத்திலேயே எத்தடையும் இல்லாமல் எப்போதும் பூசித்தபடி இருக்க விரும்புவதாக சிவனிடம் வாமனன் வேண்டினார். சிவனும் அவருக்கு அவ்வரத்தை அளித்தார். மேலும் வாமனன் வழிபடும்போது அவருக்கு இடைஞ்சல் நேராமல் இருந்து திரையாக காக்குமாறு பதினொரு ருத்திர்களில் ஒருவரான குபேர பீம ருத்திரரை பணித்தார். அதன்படி இத்தலத்தில் கருவறையை குபேர பீம ருத்திரர் திரையாக இருந்து மறைத்து வருகிறார் என்பது ஐதீகம். இதனால் கருவறை எப்போதும் குபேர பீம ருத்திரர் உருவம் கொண்ட திரையால் மூடப்பட்டிருக்கும். சிவனை வழிபட விரும்புபம் அடியார்கள் குபேர பீம ருத்திரரை வழிபட்டு அவரின் அனுமதி பெற்ற பின்பே திரையை நீக்கி தரிசனம் செய்ய முடியும். எனவே அவருக்கே முதல் பூசை செய்யபடும். அதுவும் ஒருசில நொடிகளுக்கு மட்டுமே ஆகும். பின்னர் மீண்டும் திரை மூடப்படும். இதனால் இங்குள்ள நந்திகூட பிற கோயில்களில் உள்ளதுபோல தலையை சாய்த்துக் கொண்டிருப்பது போல இல்லாமல் திரை நீங்கினால் உடனே பார்க்க ஏதுவாக தலையை நேராக வைத்திருப்பார்.

இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது.

திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனாங் இங்கு உரோகினி நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

*கோவிலின் அமைப்பு: 

தலமும் கோயிலும் கெடில ந்தியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம். இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

தல சிறப்புகள்:

பெரிய புராணத்தில், சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப் பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது.சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில்.இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாங் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னரில், விக்கிரம பாண்டியன் காலத்திலும், விசயநகர வேந்தரில் பிரதாபதேவ மகாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவற்றுள் இறைவர், திருமாணிகுழிமகாதேவர், உதவித் திருமாணி குழி ஆளுடையார், உதவித் திருமாணிகுழி மகாதேவர், திருமாணிகுழி உடையநாயனார், ஊர்செறி உதவி நாயகர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். தேவாரத்தைப் போலவே, கல்வெட்டிலும் உதவித் திருமாணிகுழி என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இறைவரின் பெயர்களில் மேற்குறித்த ஊர்செறி உதவி நாயகர் என்பது விஜயநகர வேந்தனாகிய ஸ்ரீ பிரதாபதேவமகாராயரின் (சகாப்தம் 1357) கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் இத்திருமாணிகுழி, விருதராசபயங்கர வளநாட்டு, மேற்காநாட்டு உதவித் திருமாணிக்குழி என்றும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், குறிக்கப்பெற்றுள்ளது. எனவே முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு விருதராச பயங்கரவளநாடு என்னும் பெயரையும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்ட சோழ வளநாடு என்னும் பெயரையும், மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாடு என்னும் பெயரையும் பெற்றிருந்த செய்தி புலனாகிறது.

இக்கோயிலிலுள்ள ``பூமாலை மிடைந்து`` என்று தொடங்கும் விக்கிரம சோழனுடைய மெய்க்கீர்த்தி மாத்திரம் அடங்கிய கல்வெட்டு சோழ மன்னர்களுக்குத் தில்லைச் சிற்றம்பலத்து இறைவன் குலதெய்வம் என்று குறிப்பிடுகின்றது. ``தன்குல நாயகம் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ் சூழ்ந்த திருமாளிகையும் கோபுரவாசலில் கூடகசாலமும்..... பசும்பொன் மேய்ந்து`` என்பது இதை உணர்த்தும் கல்வெட்டுப் பகுதியாகும். (திருமழபாடியில் உள்ள விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தியிலும் இச்செய்தி கூறப்பெற்றுள்ளது.)தில்லையம்பதி, சோழமன்னர்களுக்கு முடிசூட்டும் பதிகளுள் ஒன்றாகும். இப்பதியில் இரண்டாம் குலோத்துங்கசோழன் முடிசூட்டிக் கொண்டான் என்று இவ்வூரிலுள்ள (மாணிகுழியில் உள்ள) அம்மன்னனுடைய கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. ``ஸ்வஸ்தி ஸ்ரீ ராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு அ (எட்டு) ஆவது ஜயங் கொண்ட சோழவளநாட்டு உதவித் திருமாணிகுழி உடையநாயனார் கோயில் தானத்தாற்கு மகனார் திருநட்சத்திரமான உத்திரட்டாதி நாள் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற சித்திரைத் திருநாளைக்கும், விக்கிரம சோழன் சந்திக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்த நிவந்தங்களுக்கு விட்ட....`` என்பதாகும்.உதவித் திருமாணிகுழி உடையார் திருமடை விளாகத்தில், ஸ்ரீ காழிநாடுடையான் திருமடம் என்று ஒரு திருமடம் இருந்ததை முதற்குலோத்துங்க சோழனது 49 ஆம் ஆண்டுக் 1கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அதற்கு மடப்புறமாக வானவன்மாதேவி நகரத்தார் நிலம் விட்டிருந்தனர்.

தியாகசமுத்திரக்கூடம் பெரும்பற்றப் புலியூர்க்கோயிலினுள் இருந்ததை விக்கிரம சோழனின் 12 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக்கூடத்தில் பள்ளிச்சோட்டை சோழகோனிலிருந்து, ஆறுவேலி நிலத்தைத் திருமாணிகுழி கோயிலில் எழுந்தருளு வித்த விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருக்கும்படி விக்கிரம சோழன் கட்டளையிட்டிருந்தான்.இக்கோயில் கல்வெட்டில் மூன்றாங்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராசேந்திர சோழதேவன், இராசாக்கள் நாயகன் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளான். வீர பாண்டியன் கல்வெட்டு, இவ்வூரை நடுவில் மண்டலத்து திருமாணிகுழி எனக்குறிப்பிடுகின்றது. சோழமண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் உள்ளது ஆகையால் நடுவில் மண்டலம் (நடுநாடு) எனப்பெயர்.

சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்.திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர், உதவிநாயகர் , உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது.

இக்கோயில் பூலோக கைலாயம் என்றும், பூலோக வைகுண்டம் எனவும் தேவர்களாலும், ரிஷிகளாலும் போற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பாள் சன்னதியில் காவல் தெய்வமாகக் கால பைரவர் வீற்றிருக்கின்றார். அம்பிகைக்குத் தனியாகக் கொடிமரம் விசேஷமாக இவ்விடம் காணப்படுகிறது.

அம்பிகை ஆலயத்தை வரகுண பாண்டியன் என்ற அரசரின் முன்னோர் வழியில் கடாவர்ம சுந்தர பாண்டியன் என்ற அரசன் திருப்பணி செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பார்க்கையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முற்பட்ட சன்னதியாக இச்சன்னதி கருதப்படுகின்றது.

பால சாஸ்தா பக்தர்களுக்குக் காட்சி தருகின்றார். இது பஞ்சபூத தலத்தில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நிகரான தலமாகவும், தமிழகத்திலேயே இரண்டாவது மலை தீபக் ஏற்றக்கூடிய திருத்தலமாகவும் விளங்குகிறது. தீர்த்தமானது கெடிலடி என்று சொல்லக்கூடிய கருடன் நதியாகும். இக்கோயிலில் கார்த்திகை மாத ரோகிணி தீப பெருவிழா பத்து நாட்கள் விசேஷமாக நடைபெறுகின்றது.

*கல்வெட்டுகள்:

7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த அசல் கோயில்  , பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கலாம், மேலும் சோழர்கள், விஜயநகரர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. கல்வெட்டுகளின்படி, இத்தலம் "உதவி" என்றும், சிவபெருமான் "உதவி நாயகர்", "உதவிமணிக்குழி மகாதேவர்", திருமாணிக்குழி மகாதேவர், உதவித்திருமாணிக்குழி உடைய நாயனார், ஊசேரி உத்தவி நாயக்கர் (விஜயநகர காலம்) என்றும் அழைக்கப்படுகிறார். பதிவுசெய்யப்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் குலோத்துங்க சோழ-I, II & III, இராஜராஜன்-III, விக்ரம சோழன், பாண்டிய மன்னர் விக்ரம பாண்டியன், விஜயநகர மன்னர் பிரதபதேவ மஹாராயர் ஆகியோருக்கு சொந்தமானது. இத்தலம் விருத்தபயங்க வளநாட்டு மேற்கு நாடு உதவி திருமணிக்குழி, ராஜரவலநாட்டு மேற்கநாட்டு உதவி திருமணிக்குழி, ஜயங்கொண்ட சோழ மண்டலத்து சோழவள நாடு ஆகியவற்றின் கீழ் இருந்தது. 

விக்ரம சோழனின் 15-ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 148 of 1902 SII Volume VII- 772)  ஆதிசண்டேஸ்வர நாயனாரின் வழிபாட்டிற்கு 6 மா நிலம் காணிக்கையாகக் காணப்பட்டது, அதற்காக வானவன் மஹாதேவிபுர நகரத்தா வேலன், மோவோவில்லா சோழன், முடிகொண்ட சோழன் ஆகியோர் 200 கலம் நெல்களை வழங்கினர். வெள்ளாளன்.

விக்ரம சோழனின்  10 ஆம் ஆண்டு  ஆட்சிக் கல்வெட்டு அவரது மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது (AR149 of 1902 SII தொகுதி VII- 773) நடராஜர் சன்னதிக்கான தங்கத் தகட்டின் உறையைப் பதிவு செய்கிறது. 3 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு (AR 150 of 1902 SII தொகுதி VII- 774) நிலங்களையும் தங்கத்தையும் கொடையாகக் குறிப்பிடுகிறது. 4 ஆம் ஆண்டு  ஆட்சிக் கல்வெட்டு (AR 151 of 1902 SII தொகுதி VII- 775) 2 நிரந்தர விளக்குகளை எரிப்பதற்கான நன்கொடையைப் பதிவு செய்கிறது, அதற்காக 5 காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

ராஜாதி ராஜன் காலக் கல்வெட்டு (AR 153A of 1902 SII Volume VII- 778 ) இந்தக் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்ட நைவேத்தியம் பற்றி பதிவு செய்கிறது.

குலோத்துங்க சோழன்-II இன் 8ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (155 of 1902 SII தொகுதி VII- 780) தில்லை / சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது மகன் ராஜராஜன்-II முடிசூட்டு விழாவைப் பதிவு செய்கிறது. பிறந்த நட்சத்திரத்தை உத்திரட்டாதி என்றும், அவரது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள், விக்ரம சோழனின் சாந்திக்கு நைவேத்தியம் செய்தல் மற்றும்  62 மா நிலம் வாங்கிய பிறகு இந்த கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட வழிபாடுகள் என்றும் அது பதிவு செய்கிறது. 4 சுற்று எல்லைகளில் சூலக்கல் அமைத்து நிலம் தானமாக வழங்கப்பட்டது.

விக்ரம சோழாவின் 6ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 158 of 1902 SII Volume VII- 783) 12 ஆடுகள்/செம்மறியாடுகள் மற்றும் அதுவே சாவா மூவா பேராடு என்று மாற்றப்பட்ட ஒரு நிரந்தர விளக்கு எரிவதைப் பதிவு செய்கிறது. அதை சாத்தன் அரங்கன் பெற்றுக் கொண்டார். ஒரு ஆட்டுக்கு ஒரு நாழி நெய், மொத்தம் 12 நாழி நெய் கோவிலுக்கு சப்ளை செய்யப்படும்.  

குலோத்துங்க சோழாவின் 49 வது ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டுகள் (AR 160 of 1902 SII Volume VII- 785) ஸ்ரீ காழி நாட்டுடையான் திருமடத்தின் இருப்பை பதிவு செய்கிறது. இதற்காக 40 காசு கடனாகவும், வட்டியாகவும் இந்த மடத்துக்கு கொடுக்கப்பட்டது.

வீர ராஜேந்திரனின் 7ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 164 of 1902 SII Volume VII- 791) திருநாட்டப்பெருமாளால் 4 பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட ஒரு சாந்தி தீபத்தின் கொடையைப் பதிவு செய்கிறது. 

பாண்டிய மன்னர் கோனேரிமை கொண்டனின் (விக்ரம பாண்டியன்) காலக் கல்வெட்டு (AR 168 of 1902 SII Volume VII- 795)  ராஜாவின் பெயரில் நிறுவப்பட்ட ராசக்கனாயன் சந்தி மற்றும் பிறந்தநாளுக்கு நைவேத்தியம் வழங்கியதைப் பதிவு செய்கிறது.

*அகத்தியர் சுயம்பு லிங்ககோவில்:

வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் வழிபாடு செய்துள்ளார். இந்த திருத்தலத்திற்கு வந்தபோது, அகத்தியரால் உடனடியாக இறைவனைக் காண முடியவில்லை. இறைவனைக் காண்பதற்காக அவர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இதனால் கோபம் அடைந்த அகத்தியர், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின் அடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்பு லிங்கக் கோவில் அமைந்துள்ளது.

அமைவிடம்:

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள 
திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருமாணிக்குழி (திருமாணி)வாமனபுரீஸ்வரர் இங்கு பள்ளியறையே கருவறை

#பள்ளியறையே_கருவறையாக_இறைவன்_இறைவியை_விட்டு_இணைபிரியாமல் எப்போதும் சிவசக்தியாக இணைந்திருக்கும்  தேவாரம் மற்றும் திருப்புகழ் பெற்ற நடுநாட்டுத...