*தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் ..
திருக்கோயில்
அமைவிடம்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மூலவர் சங்கர ராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.
தல வரலாறு
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ்வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தைப்பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் “பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா" என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.
கோவில் அமைப்பு
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக்கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக்கிறார்.
இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது. அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி என பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment