Sunday, August 31, 2025

சேலம் மாநகர் சுகவனேசுவரர் கோயில்.

_சுகங்களை அள்ளிதரும் சுகவனேஸ்வரர் கோயில்..
சேலம் மாநகரின் மத்தியப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலம் சுகவனேசுவரர் கோயில்.
12ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் மன்னர் காலத்தில் சுயம்புமூர்த்திக்கு கோயில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கிறது. கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வாயில் வளைவு தெற்கு திசையை நோக்கியபடி உள்ளது. கோயில் முன்புறம் நந்தி மண்டபமும், வடபாகத்தில் வாகனமண்டபமும் உள்ளது. இதற்கெலாம் சிகரமாக மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

https://maps.app.goo.gl/nqq3cbDfKQrg6FGa6

பிரம்மதேவன் தன் படைப்பில் ஓவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறதென்பதன் ரகசியத்தை சொல்ல , அதை கேட்டு கொண்டிருந்த சிவநெறிகளில் சிறந்த சுகர்முனிவர் பிரம்மனின் ரகசியத்தை சரஸ்வதியிடம் சொல்ல , கோபம் கொண்ட பிரம்மன் சுகர்முனிவரை கிளியாக்கி சாபம் கொடுத்தார். சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட சாபம் நீங்கும் என்பதால் எண்ணற்ற கிளிகளோடு சிவபெருமானை வழிபடும் வேளையில் வேடன் ஓருவன் கிளிகளை விரட்டியடிக்க , அவை புற்றின் மீது பதுங்கியது. கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்ட கிளிகள் எல்லாம் மடிந்தது. அந்நேரம் ராசகிளி (சுகர்முனிவர்) சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து காத்தது. வேடனால் வெட்டப்பட்டு கிளி இறக்க சுயம்புமூர்த்தியின் தலையில் இரத்தம் பீறிட்டது. சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் அக்கணமே தன் வாளால் தன்னை தானே வெட்டி மாய்த்து கொண்டான்.

சிவனடி சேர்ந்த சுகர்முனிவர் கிளியுருவம் மறையப்பெற்று
 " பெருமானே நீங்கள் இந்த வனத்தில் சுகவனேஸ்வரராக இருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும்" என்ற வரத்தை கேட்டதனால் , இப்படி உருவானவர் சுகவனேஸ்வரர் என்கிறது தலவரலாறு .

வடக்கு பிரகாரத்தில் சண்டேசுவரர், சுவர்ணதுர்க்கா, வடகிழக்கில் பைரவர், சூரிய சந்நிதிகள் உள்ளன.
நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் இடம்மாறி உள்ளதால் இவர்களை வழிபட நல்ல வரனும், உத்தியோகமும் கைகூடும்.
நவக்கிரக சக்தி மேல்தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளதால் இதனை வழிபட பல்லி விழும் உபாதைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம்
இங்குள்ள விகடச் சக்கர விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் நீங்கும் என்பது ஜதீகம்.

சோமாஸ்கந்தர், சந்திரசேகர், நாகர், விகடசக்ரவிநாயகர், வேதவியாசகர், சிவபக்த ஆஞ்சநேயர் சுகப்ரம்மரிஷி , சப்த மாதாக்கள், என எண்ணற்ற தெய்வங்கள் காட்சியளிப்பது சிறப்பாகும். மகாமண்டபத்தின் கீழ்கோபுர வாயிலை அடுத்து சுவர்ணாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. தவளைகள் இல்லாத தீர்த்த கிணறு இருப்பது வியப்பு. இது அமண்டு தீர்த்தம் ஆகும். கோயிலில் 5 காலபூஜைகளும் , பிரதோஷ காலத்திலும் நந்தி சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகமும், சனி மஹா பிரதோசத்தில் சிறப்பு யாகங்களும், விசேச அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.
கருவறையில் மூலவர் லிங்க உருவத்தில் அருள்பாளிக்கிறார்.
வைகாசி மாதத்தில் திருத்தேரோட்டம் களை கட்டும். கார்த்திகை தீப விழா, நவராத்திரி உள்பட அனைத்து விழாக்களும் கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடப்பது தனிச்சிறப்பு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும்

நரசிம்மரும், சுவாதி நட்சத்திரமும் நரசிம்மரை வழிபட்டால் பரமேஸ்வரன்-பார்வதியை வழிபட்டது போன்ற உயர்ந்த பலன் கிடைக்கிறது. சுவாதி நட்...