Thursday, August 7, 2025

சின்னமனூர் அரிகேசநல்லூர் பூலாநந்தீஸ்வரர்

 தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
சிவ தலமான 
உலகப் புகழ்பெற்ற 
செப்பேடு கண்ட #சின்னமனூர் என்ற #அரிகேசநல்லூர் 
சுரபி நதிக் கரையில் அமைந்துள்ள 
#பூலாநந்தீஸ்வரர் 
#சிவகாமிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

                 

திருமால்,  பிரம்மா, இந்திரன் வழிபட்டுப்  பேறு  பெற்ற தலம் –  சிவகாமி  சுயம்புவாக  கிடைத்த கோயில்-  காமதேனு,  கற்பக விருட்சம்   சாபம் நீங்கிய தலம் –  கந்தபுராணத்தில் புகழப்படும் தலம் – சிவகங்கை  தீர்த்தம்  கொண்ட  கோயில் –  கங்கைத் துளி சிந்திய பூமி –  பாண்டிய, சோழ மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம் – பாண்டிய மன்னனுக்காகத் தன் உருவத்தைக் குறைத்துக் கொண்ட இறைவன் – பகைவர்களை வெல்ல உதவிய சிவபெருமான் –  கேட்ட வரம் அருளும் பூலா மரம் கொண்ட கோயில்  என பல்வேறு சிறப்புக்கள் கெண்ட தலமாக விளங்குவது  தேனி மாவட்டம்  சின்னமனூர் சிவாலயம் ஆகும்.

தலபுராணம்

                சிவபெருமானுக்கு  எதிராக நடந்த   தக்கன் யாகத்தில்  பங்கேற்றதால்,  கற்பக விருட்சமும்,  காமதேனுவும்  சாபம் பெற்று,   முட்பூலா மரமாகவும்,  நாட்டுப் பசுவாகவும்  மாறி, பூமியில் தோன்றின.
                தங்கள் தவறை நினைந்து சாப விமோசனம்  கேட்டபோது,  இடையன் மூலம்  கற்பகத் தருவிற்கும்,  புலி மூலம்   காமதேனுவுக்கும் வழி பிறக்கும் என்ற வாக்கு கிடைத்தது.

                காசியில்  தவமிருந்த  அந்தணனிடம் புலியாக மாறி  அவன் தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன்  சாபம் பெற்றுப் புலியானான்.   சாப விமோசனம் வேண்டி நின்ற போது சிவ நாமம் ஒலிக்கும் போது  இயல்பு நிலை திரும்பும்  என்ற பதில் கிடைத்தது.    சதுரகிரிக்கும் வராக மலைக்கும்  அருகே அமைந்துள்ள  திருமலையில், காமதேனு பசுவாகப் பிறந்து  வாழ்ந்து வந்தது.

                இதே போல,   வராக மலைக்குத் தெற்கே,  சுரபி நதிக்குக் கிழக்கே,  சிவபெருமான் தோன்றியிருந்தார்.   இந்த லிங்கத்தின்  இடதுபுறம் முட்பூலா மரமாக கற்பக விருட்சம்  தோன்றி  லிங்கத்திற்கு நிழல் தந்து வந்தது.

                திருமலையில்   மேய்ந்துகொண்டிருந்த பசு மீது  பாய புலி முயன்றது.  அதைக் கண்ட பசு, “என் கன்று பசியோடு காத்திருக்கிறது.  நான் பால் தந்துவிட்டு உன்னிடம் சரணடைகிறேன். அதன்பின் நீ  என்னைப் புசிக்கலாம், இது சத்தியம்”. என்றது. இதைக் கேட்ட புலி அதிர்ச்சி அடைந்தது.  பிறகு  சம்மதித்தது.  பசு சொன்னபடியே தன்  கன்றுக்குப் பால்  கொடுத்து பசியாற்றி,   மீண்டும் புலியின் முன் வந்து நின்றது.  ஆனால்  அதைக் கொல்ல விரும்பாத புலி தயங்கி நிற்க,  பசு  தன் வாக்குப்படி பாறையில் மோதி  இறந்தது. புலியும் தன் தவறை உணர்ந்து தன்  உயிரை மாய்த்துக்கொண்டது. 

                அப்போது அங்கே  காளை வாகனத்தில் சிவபெருமான் பார்வதியோடு  காட்சி தந்து அவர்களை  உயிர்ப்பித்தான். பசு  காமதேனுவாகவும்,  புலி  கந்தர்வனாகவும் மீண்டும் மாறினர்.

                இதன்பின், காமதேனுவின் வேண்டுதல்படி,  திருமலை, சுரபிமலை என அழைக்கப் பட்டது. சிவனின்  தலையில் உள்ள கங்கையின் நீர்த்துளி அம்மலையில் சிதறியது. அதுமுதல் சுரபி நதியாகத் தோன்றி பாவம் தீர்க்கும்   நதியாக  விளங்குகிறது.

திருமால்  தரிசித்தது

                துவாபர யுகத்தில்  திருமால், நாரதரின் வழிகாட்டுதல்படி பூலாவனம்  வந்து சிவனை  வணங்கிய போது தில்லை நடனத்தின்  காட்சியைக் கண்டு களித்தார். உடனே  திருமாலின் வேண்டுதல்படி சிவகங்கைத்  தடாகம் ஒன்று  உருவாக்கப்பட்டது.

                இதுபோல இந்திரன்,  இந்திராணியோடு வந்து தரிசித்து சென்றார். அது முதல்  இப்பகுதி அரிகேசரி நல்லூர்  என்றும்,  இறைவன் அரிகேசரி நாதன் என்றும் வழங்கலானது.           அரி-திருமால், க- பிரம்மா,  ஈசர் – உருத்திரர், அரி – இந்திரன்  என்பது  இதன் பொருளாகும்.

இராஜேந்திரன் ஆட்சி

                 பாண்டிய நாட்டை குலபூடண பாண்டியன்  ஆட்சி செய்த போது, அவனுக்கு  இராஜேந்திரன்,  இராஜ சிங்கன்,  என்ற  இரு மகன்கள்  தோன்றினர்.   தந்தைக்குப் பின் மூத்தவன்  இராஜேந்திரன்  அரசாளத் தொடங்கினான்.   இதைக் கண்டு பொறாமை கொண்ட  தம்பி  இராஜசிங்கன், சோழ மன்னனை அணுகி, தனக்கு  அதிக  படைபலம் தந்தால் அவனை வீழ்த்தி நீயே அரசாளலாம் என்று கூறினான்.  சூழ்ச்சியை அறியாது  சம்மதித்து,   போரிட சோழன் ஆயத்தமானான்.

                 அண்ணன் இராஜேந்திரன்  சிவபெருமானிடம் அழுது  முறையிடலானான்.  அப்போது உன் குறைவான சேனையே வெல்லும் என அசரீரி கேட்டது. அதன்படி போரிட்ட அவனுக்கு மிகப்பெரிய  வெற்றி கிடைத்தது.  என்றாலும், தன் தம்பியை மன்னித்து,   தன் நாட்டில்  ஒரு பகுதியைத் தந்து  அரசாள அனுமதித்தான்.

                இதே போல,  இராஜசிங்கன்,  வீரபாண்டியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது, கொடிய மிருகங்களால் மக்கள் துயர் தீர்க்க  பூலாவனம் வந்து சேர்ந்த போது, அங்கே மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியன்  நிறுவிய  சிவாலயத்தைக் கண்டறிந்து அதற்கு அங்கே ஒரு கோயில்  அமைத்து  நகரை உருவாக்கினான்  என  தலபுராணம் கூறுகிறது.

  கற்பக விருட்சம்

பூலாவனப் பகுதியில்  சுவை மிகுந்த  பால் கிடைக்கும் என கேள்விப்பட்ட மன்னன், ஒரு  இடையன் மூலம்  தினமும் பால் கொண்டு வருமாறு ஆணையிட்டான்.  ஒரு சமயம் பால் கொண்டு வரும் போது  பூலாமர வேர் இடறி பால் கீழே கொட்டியது.  மூன்றாம் நாளும்  இவ்வாறே நடக்க,இடையன் அந்த வேரை வெட்டி அப்புறப்படுத்தினான்.  உடனே அங்கு  ரத்த வெள்ளம் ஓடியது. பூலா  மரமாக நின்ற  கற்பகவிருட்சத்தின் சாபம்  இடையன் மூலம் நீங்கியது.  காமதேனு மீண்டும்  தேவலோகம்  சென்றது.

                இதற்கிடையில் இச்சம்பவத்தை அறிந்த மன்னன், அவன் காட்டிய இடம்  வந்த போது,  அங்கே  இரத்த வெள்ளம்  மறைந்தது.  ஜோதி வடிவ மலையாக இறைவன் உருவம் தோன்றியது.

                உடனே  மன்னன் எங்களுக்குத் தெரியும் வகையில் எளிய உருவில் காட்சி தரவேண்டும்  என வேண்டினர். அதன்படியே சிறிய வடிவில் இறைவன்  காட்சி தந்தார். இறைவன் பூலா வனத்தில் தோன்றியதால், பூலாவனேசர் என்றும், பால் உண்டதால் பாலுண்ட நாதர் என்றும், அளவு குறைந்து  காட்சி தந்ததால்,  தழுவக் குழைந்தார் அளவுக்களவானவர்  என்றும்  போற்றப்படலானார்.  மன்னன் தழுவிய போது  அவனது ஆபரணங்களால் ஏற்பட்ட அழுத்தங்கள் இன்றளவும்  லிங்கத் திருமேனியில்   அடையாளங்களாகக் காணப்படுகின்றன.

                அதன்பின்  இராஜசிங்க பாண்டியன் அவருக்குப் பெரிய ஆலயம் எழுப்பி, வழிபாட்டுக்கு வகை செய்தான் என  தலவரலாறு கூறுகிறது.

                மேலும், அம்மனுக்குத் தனி  சிலைவடிக்க முயன்ற போது, அன்று கனவில் தோன்றிய இறைவன், தேவி கூப வடிவில் கிணற்றில் வாழ்ந்து வருகின்றாள். பிரார்த்தனை  செய்யுங்கள்  உங்களுக்குத்  தென்படுவாள்  என்று கூறியது.

                அதன்படியே  கிணற்றில் இருந்து அன்னை வெளிப்பட்டு, அன்னை சிவகாமி என திருப்பெயரும்  பெற்றாள். 

சுர தேவர்

                ஒரு சமயம் நாட்டு மக்களைக்  காய்ச்சல்  வாட்டி வதைத்தது.  இறைவன் அருளியவாறு சிவாலயத்திற்குள் சுர தேவரை நிறுவினான்.  அதனை அனைவரும்  பூஜிக்க  காய்ச்சல்  அந்த நாட்டை விட்டே அகன்றது.         

                இதுபோல,  வடபுலத்து  யவன மன்னன்   பெருஞ்சேனையோடு போரிட வந்தபோது,   பாண்டிய மன்னன்  தனக்கு உதவுமாறு இறைவனிடம்  வேண்டி நின்றான்.  அதற்குச் செவிமடுத்த இத்தலத்து  இறைவன்,  கடும் மழை பொழிந்து  எதிரியின் படைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்ல உதவினான். இறைவன் துணையோடு  பாண்டிய மன்னனும்  அப்படைகளைத் தோல்வியுறச் செய்தான். 

கல்வெட்டு, செப்பேடுகள்

                கி.பி.1907ஆம்  ஆண்டு  இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கையின்படி,  மொத்தம் 29 கல்வெட்டுகள்  மற்றும்  செப்பேடுகள்  கண்டறியப்பட்டுள்ளன.  இதன்மூலம்  வரகுண பாண்டியன் (கி.பி.768)  சடைய மாறன் ( .கி.பி.913), இரண்டாம் இராஜசிம்மன் (கி.பி.921), முதலாம் குலசேகரன் (கி.பி.1230),  சுந்தர பாண்டியன் ( கி.பி.1226)  என பாண்டிய மன்னர்களும்,  பரகேசரி வர்மன் எனும்  முதலாம் பராந்தக சோழன் (கி.பி.943),  முதலாம் இராசேந்திரன் (கி.பி.1017)  என சோழமன்னர்கள் காலத்தில் கொடைகள் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.   இவற்றில்,  பெரும்பாலானவை  லஷ்மி நாராயண பெருமாள் ஆலயத்திலும் மற்றவை ராஜசிம்மேஸ்வரர் (சின்னமனூர் சிவன்) திருக்கோயிலிலும்  கண்டறியப்பட்டவை ஆகும்.

இலக்கியம்

                சின்னமனூர்  எனும் அரிகேச நல்லூர் தலபுராணம், 300 ஆண்டுகளுக்கு முன் பூலா நந்தக் கவிராயர் மூலம் வடமொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.  30 படலம்,  945 பாடல்களில்  கொண்ட  இந்நூல்  ஓலைச்சுவடிகளாக இருந்தது.  இதைக் கண்டமனூர்   செல்லமையா,  சிலையம்பட்டி பொன்னையாப்பிளை, சின்னமனூர்  மருதமுத்துப் பிள்ளை ஆகியோர் கூடி,  காகித ஏட்டில் எழுதினர்.  கி.பி.1954 ஆம் ஆண்டில்  அச்சு வடிவில்  அண்ணாமலைப் பிள்ளை,  இரத்தினம் பிள்ளையும் கொண்டு வந்தனர்.  இதன் மூலம்  தல புராணத்தை இன்று நாம்  அறிய முடிகிறது.

சின்னமனூர்

                இராணி மங்கம்மாள்  ஆட்சியில்  சின்னம நாயக்கர் என்ற  அதிகாரி இவ்வூரை  உருவாக்கியதால்  சின்னமனூர் என இவ்வூர் வழங்கப்படுகிறது.

இறைவன்

                திருமால், பிரம்மா,  வழிபட்டதால், அரிகேசரி நாதர் என்றும்,  பூலா மரத்தில்  தோன்றியதால்,  பூலாநாதீசுவரர், பூலாநந்தீஸ்வரர்  என்றும்,  ஆயன் பாலை உண்டதால் பால் உண்ட நாதர் என்றும்,   பாண்டிய மன்னன்  வேண்டுகோளை ஏற்று குறுகிய அளவிற்கு  ஆனதால், அளவுக்கு அளவானவன் என்றும்,  தன் அளவில் குறுகிக் காட்சியளித்த இறைவனைப் பாண்டியன்  ஆரத் தழுவியதால் தழுவக் குழைந்தீசர் என்றும் இராஜசிம்மன் பூஜித்ததால்  இராஜசிம்மேசுவரர் என்றும்  பலவாறு அழைக்கப்படுகின்றான்.  இறைவனின் தற்காலப் பெயர் பூலாநந்தீஸ்வரர்  என்பதாகும்.

தலமரம் – தீர்த்தம்

                தலமரமாக பூலா மரம்  திகழ்கிறது.   தீர்த்தமாக சுரபி நதி,  அம்மையின் வடபாகம் உள்ள சிவகாமி கூபம், இறைவன் நிறுவிய சிவகங்கைத்   தீர்த்தம் என  மூவகைத் தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

விழாக்கள்

                சித்திரைத் தீர்த்தவாரிப் பெருவிழா  15 நாட்கள் நடைபெறும்.  வைகாசி விசாகம்,  முருகன் பால்குட விழா, ஆனித் திருமஞ்சனம்,  ஆடி  முளைக்கட்டு  திருநாள்.  ஆவணி புட்டுத் திருவிழா, புரட்டாசி  நவராத்திரி,  ஐப்பசி சஷ்டி,   கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா,  ஐப்பசியில் தெப்பத் திருவிழா,  மாசி மகா சிவராத்திரி,  பங்குனி உத்திரம், அறுபத்துமூவர் திருநட்சத்திர நன்னாள் சிறப்பு வழிபாடுகள்  போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

நிர்வாகம்

                இந்து சமய அறநிலையத்துறையின் கீழ்  இத்திருக்கோயில்  இயங்கி வருகிறது.

தரிசன நேரம்

                காலை  7.00 மணி முதல்  நண்பகல் 12.00 மணி  வரையிலும்,   மாலை 5.00   மணி முதல்   இரவு 8.00  மணி வரையிலும்   சுவாமி தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்:

                தேனி மாவட்டம்,  உத்தமபாளையம்  வட்டத்தில், சின்னமனூர் அமைந்துள்ளது.   தேனியிலிருந்து தெற்கே 23 கி.மீ, உத்தமபாளையத்திலிருந்து வடமேற்கே 6 கி.மீ, கம்பத்திலிருந்து  வடமேற்கே 17 கி.மீ, போடிநாயக்கனூரில் இருந்து தெற்கே 27 கி.மீ,  மதுரையிலிருந்து தெற்கே 105 கி.மீ, சென்னையிலிருந்து தெற்கே  450 கி.மீ     தொலைவில்  சின்னமனூர் திருத்தலம்  அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சின்னமனூர் அரிகேசநல்லூர் பூலாநந்தீஸ்வரர்

 தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ தலமான  உலகப் புகழ்பெற்ற  செப்பேடு கண்ட #சின்னமனூர் என்ற #அரிகேசநல்லூர்  சுரபி நதிக் கரையி...