*ஆவணி அவிட்டம் திருநாள்* *பூணூலின் உண்மையான மகிமை*
ஆவணி அவிட்டம்*
‘புது பூணூல் போட்டாச்சா?’ என்று கேட்கையிலேயே, அது ஆவணி அவிட்டப் பண்டிகையென்று சிறு குழந்தைகள் கூட சொல்லிவிடும். பூணூல் அணியும் வழக்கமுள்ள இந்துக்களான அந்தணர், வைசியர்கள், சமணரௌகள், விஸ்வகர்மா போன்றவர்கள் ஆவணி அவிட்டப் பண்டிகையன்று, பழைய பூணூலை மாற்றி புதுப் பூணூல் அணிவார்கள். ஆவணி அவிட்ட பண்டிகை கிராமப்புறங்களில் ஆற்றங்கரைப் பக்கத்திலும், நகரங்களில் கோயில்கள், பொது மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும்.
ஆவணி அவிட்டம் கொண்டாடும் காலம்: ரிக் வேதம் பின்பற்றுவர்கள், ஆவணி மாத திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதத்தினர் ஆவணி மாத பௌர்ணமியிலும், சாம வேதக்காரர்கள், ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்திலும் ஆவணி அவிட்டம் கொண்டாடுவார்கள். கேரளாவிலும், குஜராத்திலும் அதர்வண வேதத்தினர் இதனைக் கொண்டாடுகின்றனர்.
சாம வேதத்தைப் பொறுத்தவரை மந்திரங்கள் அதிகம். எருக்க இலையில் அரிசி வைத்து நீரில் தர்ப்பணம் செய்வார்கள். தேவ, ரிஷி, பிதுர் ஆகிய பல்வேறு தர்ப்பணங்கள் செய்து, வேள்வி வளர்த்து, கும்பம் வைத்து பூஜை செய்வார்கள். வடமொழியில் ‘அத்யயனம்’ என்றால் கல்வி. வேதம் பற்றிய கல்வியை உபகர்மா அல்லது ஆவணி அவிட்டம் என்பார்கள். உபகர்மா எனும் வேதத்தைத் தொடர்ந்து சொல்லி வந்தால், மந்திரத்திற்கு பலன் அதிகமாகும்.
தலை ஆவணி அவிட்டம்: சிறு வயதில், முதன் முதலில் பூணூல் அணிவித்து பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சிறுவர்களுக்கு, அதன் பிறகு வரும் ஆவணி அவிட்டம் ‘தலை ஆவணி அவிட்ட’மாகும். அன்று சிறுவர்களுக்கு பட்டம் கட்டி விசேஷ மந்திரங்களைக் கூறி ஆசீர்வதிப்பது வழக்கம்.
காஞ்சி பெரியவர் பூணூல் மாற்றுவது குறித்து கூறிய சில செய்திகள்:
பூணூலை வருடம் ஒரு முறை ஆவணி அவிட்டம் அன்று மட்டும் மாற்றுவது சரி கிடையாது. மாதந்தோறும் பூணூலை மாற்றுவது அவசியம். அதாவது, அமாவாசை தர்ப்பணம் செய்கையில் மாற்றி விடவேண்டும். தீட்டுப் பட்டால் மாற்ற வேண்டும். அதேபோல், வீட்டில் குழந்தை பிறந்து 11ம் நாள் புண்ணியாஜனமன்று பூணூல் மாற்றுதல் அவசியம். துக்கம் விசாரிக்க சென்று வந்தால் பூணூலை மாற்ற வேண்டும். பூணூல் என்பது காயத்ரி மந்திரம் செய்தது. வெறும் நூல் கிடையாது. உடம்பை ரட்சிக்கும் புனித நூலாகிய பூணூலை, மறந்தும்கூட முதுகு சொறியப் பயன்படுத்துவது கூடாது.
ஆவணி அவிட்டம் தர்ப்பண பலன்கள்: ரிஷிகள், தேவர்கள் மற்றும் முன்னோர்களது ஆசிகள் கிடைக்கும். சரஸ்வதி கடாட்சம் ஏற்படும். தீய சக்திகள் அண்டாது. உடல் தேஜஸுடன் விளங்கும். முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
காயத்ரி ஜபம் (மந்திரம்) விபரங்கள்:
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வருவது காயத்ரி ஜபம். வேதங்களின் தாய் காயத்ரி எனக் கூறப்படுகிறது.
‘ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்’
என்கிற சக்தி வாய்ந்த மந்திரமாகிய காயத்ரி ஜபத்தை, சங்கல்பம் செய்த பின்னர் 108 அல்லது 1008 முறைகள் உச்சரித்து ஜபம் செய்ய வேண்டும். மேலும், இதை தினமும் சூரிய நமஸ்காரத்திற்குப் பின்னும் செய்யலாம்.
அசல்பதிவேற்றியவருக்கு நன்றி.
காயத்ரி ஜபம் செய்கையில், மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ் நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணு வரை மேல் நோக்கி சென்று, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வந்தால் பத்து எண்ணிக்கை வரும். ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 எனச் செய்யலாம். முத்து, பவளம் போன்ற மாலைகளை கைகளால் உருட்டியவாறும் எண்ணலாம்.
காயத்ரி மந்திரத்தில் சக்தி வாய்ந்த பத்து பதங்கள் உள்ளன. அவை: 1. தத், 2. ஸவிது, 3. வரேண்யம், 4. பர்கோ, 5. தேவஸ்ய, 6. தீமஹி, 7. தியோ, 8. யோ, 9. த:, 10. ப்ரசோதயாத் ஆகியவையாகும்.
காயத்ரி ஜபம் செய்வதின் மூலம் முகத்தில் அமைதி தவழும், எடுத்த காரியத்தை தடங்கலின்றி முடிக்க முடியும், நோய்கள் நம்மை அண்டாது, நினைத்தது நடக்கும். ஆவணி அவிட்டமும், காயத்ரி ஜபமும் ஆண்களுக்குரிய பண்டிகைகள் என்றாலும், வீட்டுப் பெண்களும் இதில் ஈடுபாட்டுடன் அமர்க்களமாக ஸத்தி விருந்து தயாரித்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment