Thursday, August 7, 2025

தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம்

_தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம்.. (08-08-2025 வெள்ளிக்கிழமை)_
மகாலட்சுமியை போற்ற அனைத்து வளமும், நலமும் வீட்டில் குடியேறும். செல்வ வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியை விரதமிருந்து அவள் அருளை பெறும் நன்னாளே வரலட்சுமி விரதம்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்களும், கன்னி பெண்களும், மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமிதேவியை அனுஷ்டித்து வழிபடும் மிக சிறப்பான விரதமாகும்.

ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறையில் பௌர்ணமி வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


பூஜைக்கு வேண்டிய பொருட்கள்:

மஞ்சளால் பிடித்த பிள்ளையார் 
வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு 
கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம் 
குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு 
நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் 


பூஜை செய்யும் முறை..

ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலச கும்பத்தை வைத்து தீர்த்தம் அல்லது அரிசி அல்லது தங்கம் ஆகியவற்றை கொண்டு கும்பத்தை நிரப்பவும். கும்பத்தின் மேலே மாவிலைக் கொத்தும், தேங்காயும் வைத்து அலங்கரிக்கவும்.

அதன்பின் புதிய வஸ்திரம் சாற்றி மகாலட்சுமியின் உருவமுடைய பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். வெற்றிலை, பாக்கு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.

அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்.

மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹனம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

*நிவேதனம்:

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.


விரதத்தின் பலன்கள்:

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குழந்தை பாக்கிய தடைகள் நீங்கும்.
ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.
கணவன்-மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,மேலஉளூர் அஞ்சல்,தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், மேலஉளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.                     *மூலவர்: பரிதியப்பர், பாஸ...