சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
#திருஇரும்பை_மாகாளம்
#மகாகாளேஸ்வரர்
#குயில்மொழிநாயகி திருக்கோயில் வரலாறு:
சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளுமில்லை என்பது தமிழ் சித்தாந்தம் ஆகும். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்களைத் தான் சித்தர்கள் என்பார்கள். அப்படிப்பட்ட தமிழ் சித்தர்கள் பரம்பரையில் வந்தவர் தான் “கடுவெளி சித்தர்”. இந்த சித்தர் தங்கியிருந்த இரும்பை எனும் ஊரில் இருக்கும் “அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்” பற்றியும், அக்கோயிலில் கடுவெளி சித்தர் புரிந்த அற்புதத்தைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
திருஅரசிலியிலிந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றில் ஒன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலவர்:மகாகாளேஸ்வரர்
உற்சவர்:சந்திரசேகரர்
அம்மன்:குயில்மொழி நாயகி, மதுர சுந்தர நாயகி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:மாகாள தீர்த்தம்
ஆகமம் :சிவாகமம்
புராண பெயர்:திருஇரும்பைமாகாளம்
ஊர்:இரும்பை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்
#தேவாரப்பதிகம்:
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள் மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 32வது தலம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இரும்பை மகாகாளேஸ்வரரர் திருக்கோயில். சோழ மன்னர்கள் காலத்தில் நன்கு சீரமைத்துக் கட்டப்பட்ட கோயில் இது.
புராண காலத்தில் இந்த ஊர் திருஇரும்பைமாகாளம் என அழைக்கப்பட்டது.
#தல_வரலாறு:
சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.
பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் “மகாகாளநாதர்’ என்ற பெயர் பெற்றார்.
#தலபெருமை:
மூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான்.
சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான்.
மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார்.
தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, “”தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!” என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.
#குயில்மொழி_நாயகி:
அம்மனின் திருநாமம் குயில்மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.
கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு “குயில்மொழி நாயகி’ என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
#கலா_சந்திரன் :
இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு “கலா சந்திரனாக’ காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் அருளுகிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது.
#பொது_தகவல்:
இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார். அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள்.
நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன் மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும், கால பைரவர் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர்.
#தல_சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 267 வது தேவாரத்தலம் ஆகும்.
#பிரார்த்தனை
ஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
#நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
#திருவிழா:
சிவராத்திரி, மாசிமகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.
#சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
#அமைவிடம் :
டவுன்ஷிப் அருகே உள்ள இரும்பை கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருச்சிற்றம்பலம் கூட் சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ, மொரட்டாண்டியில் இருந்து 4 கி.மீ, மொரட்டாண்டி பிரத்தியங்கரா தேவி கோயிலில் இருந்து 5 கி.மீ, பஞ்சவதி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து 4 கி.மீ, ஆரோவில்லில் இருந்து 4 கி.மீ, திரு அரசிலியில் இருந்து 9 கி.மீ, சேதராபேட்டையில் இருந்து 6 கி.மீ, வானூரில் இருந்து 9 கி.மீ, கிளியனூர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து 14 கி.மீ, பாண்டிச்சேரியில் இருந்து 12 கி.மீ, மைலத்திலிருந்து 26 கி.மீ, மைல முருகன் கோயிலில் இருந்து 27 கி.மீ, திண்டிவனத்தில் இருந்து 33 கி.மீ மற்றும் சென்னையில் இருந்து 158 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலை திண்டிவனம் அல்லது புதுச்சேரியிலிருந்து அடையலாம். இந்த கோயில் திருச்சிற்றம்பலம் கூட் சாலை பேருந்து நிறுத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரி பேருந்து பிரதான நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும், திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 33 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
#திறந்திருக்கும்_நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.
#கோயில்_முகவரி:
அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில்
இரும்பை
விழுப்புரம் மாவட்டம் – 605 010
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment