திருமண வரம் அருளும் மாடம்பாக்கம் லட்சுமி நாராயணர்
பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது.
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. சூராடிமங்கலம், பள்ளஈகை, நென்மேலி, துஞ்சம், பரனூர், பள்ளிக்கரணை, குன்னத்தூர், அம்மணம்பாக்கம், எச்சூர், அருங்குன்றம், குழிப்பாந்தண்டலம், திருநிலை முதலான ஊர்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே மிகப் பழமையான திருத்தலங்களாகும்.
இத்தகைய பழம்பெருமை வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்தலம் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
கோவிலுக்கு வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்த இத்தலம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒரு பக்கம் தும்பிக்கையாழ்வாரும், மற்றொரு பக்கம் காளிங்க நர்த்தனரும் வீற்றிருக்கிறார்கள்.
அவர்களை வணங்கி உள்ளே நுழைந்ததும், ராஜகோபுரத்தின் உட்புறத்தில் ஒரு புறம் சுதர்சனப் பெருமாளும், மற்றொருபுறம் நரசிம்மரும் பிரமாண்டமான சுதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். சக்கரத்தாழ்வாரை வணங்கி உள்ளே நுழைந்ததும், பலிபீடமும், கருடாழ்வார் சன்னிதியும் இருக்கிறது.
வெளித்திருச்சுற்றில் இடதுபுறத்தில் பக்த ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். வலது புறத்தில் விஷேசமான நவக்கிரக சன்னிதி ஒன்று அமைந்துள்ளது. நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனத்தோடு காட்சி தந்து அருள்பாலிப்பது, விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை சக்கரத் தேரில், தனது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவியரோடு காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.
கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்தோடு இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்மண்டபத்தில் ஒரு சிறிய மாடத்தில் உடையவரும், அவருக்கு அருகில் காளிங்க நர்த்தனரும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள், கிழக்கு திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
லட்சுமிதேவியை தனது இடது தொடையில் அமர்த்தி இடது கரத்தால் அணைத்தவாறும், வலது திருக்கரத்தினை பக்தர்களைக் காக்கும் அபயஹஸ்த நிலையில் வைத்தபடியும், திருமுகத்தில் புன்னகை தவழ மிக அழகிய திருக்கோலத்தில் இந்த பெருமாள் காட்சி தருகிறார்.
மேலும் மூலவர் சன்னிதியில் நவநீதகிருஷ்ணனும் இருக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம்.
லட்சுமிதேவியோடு இணைந்து காட்சி தரும் லட்சுமி நாராயணப் பெருமாளை தரிசிப்பதன் மூலம், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பதும், கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும் என்பதும் ஐதீகம்.
மேலும் பலவிதமான காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளும், இந்த ஆலயத்திற்கு வந்து மூலவரை தரிசிப்பதன் மூலமாக நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக, வில்வ மரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திரு பவித்ர உற்சவம், திருப்பாவாடை மஹோத்சவம், தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரதம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், உறியடித் திருவிழா, திருக்கார்த்திகை தீப விழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம், ஒய்யாளி சேவை மற்றும் பல வைணவ விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.
ஜனவரி முதல் வாரம் மற்றும் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தில் பெருமாள் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கார்த்திகை தீப விழாவில் 1008 திருவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.
இந்த கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கு திசை நோக்கி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மாடம்பாக்கம் திருத்தலம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment