Friday, September 19, 2025

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், 
திங்களூர், 
திருப்பழனம் அஞ்சல்,  
திருவையாறு வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.         
*இறைவன் : கைலாசநாதர் 

*இறைவி : பெரியநாயகி  

*தீர்த்தம் : சந்திர தீர்த்தம்           

*இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமுமாகும். திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.   

*திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக உயிர்களைக் காத்தார். இருந்தாலும் அப்பகுதியில் பரவிய நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். அத்தகைய சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டார்.   

*தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். 

இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான்.              
ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து அருளினார். தட்சனின் சாபத்தால் நாள்தோறும் சிறிது சிறிதாக தேய்ந்து ஒருநாள் முழுமையாக மறையவேண்டிய (அமாவாசை) சாபத்திற்கு ஆளான சந்திரன், சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்ந்து ஒருநாள் பிரகாசிக்கும் (பவுர்ணமி) விமோசனத்தைப் பெற்ற தலமே திங்களூர் திருத்தலம்.      

*இத்தலத்தின் ஷேத்திர பாலகராக சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.  

*ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.                 
 கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.         

*ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள் இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால், ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.        

"மனக்குழப்பம், தேவையற்ற பயம், தெளிவற்ற நிலை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள்,  ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள், மனநிலை கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி பெற இங்கு வழிபடுவது சிறப்பு.  

*இது 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம். திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள்  திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, வாழை இலை கொண்டுவரச் சென்ற, சிறுவனான அப்பூதி அடிகளின் மகன்  வாழைத்தோப்பில் பாம்பு கடித்து  இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். 

*திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது.  

*சண்டிகேஸ்வரர்  இங்கு தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது அரிய காட்சியாகும்.      

*குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு (அன்னப்பிரசன்னம்) தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 

*திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.                            

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...