Friday, September 5, 2025

அக்னீஸ்வரர் தீயாடியப்பர் திருக்காட்டுப்பள்ளி.

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், 
திருக்காட்டுப்பள்ளி 613104,                  தஞ்சை மாவட்டம்.    
*மூலவர்:
தீயாடியப்பர்
*அம்பாள்: செளந்தரநாயகி
*தல விருட்சம்:
வன்னி, வில்வம்
*தீர்த்தம்:
சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி ஆறு                        
*பாடல் பெற்ற தலம்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரப் பதிகம் பாடியுள்ளனர்.   

*அக்கினி வழிபட்ட தலமாதலால் இக்கோயிலுக்கு 'அக்னீஸ்வரம்' என்று பெயர்.                    
அக்னி பகவானுக்கு யாகங்களால் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க வேண்டி திருக்காட்டுப்பள்ளியில் எழுந்தருளி உள்ள இறைவனை வேண்டியுள்ளார்.
இறைவன் கட்டளைப்படி அக்னி தீர்த்தம் என்ற தீர்த்தக் குளத்தை ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும், பாவங்களும் நீங்க பெற்றுள்ளார். மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்துக்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார்.             
அன்று முதல் திருக்காட்டுப்பள்ளி சிவன் கோவில் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கினால் நோயில் இருந்து விடுபடலாம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.            

*மூலவர் அக்கினீசுவரர், அழலாடியப்பர், தீயாடியப்பர், வன்னிவனநாதர், திருக்காட்டுப்பள்ளி உடையார் என்றும் அழைக்கப்படுகிறாா். 

 *மூலவர் அக்னீசுவரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு தாழ்வான  பகுதியில் இருக்கிறது.      நான்கு  படிகள் இறங்கி தரிசிக்கவேண்டும். கருவறையை சுற்றி வலம் வரலாம்.  

*பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. அக்கினீசுவரர் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. 

*மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். சிவபெருமான் கயிலாயத்தில் அம்பிகைக்கு சிவாகமங்களை உபதேசித்த போது இருந்த அதே கோலத்தில், இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக எழுந்து அருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.   இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி, ருத்ராட்சம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, தன் கையில் சிவாகம நூல் ஏந்தி யோக குருவாகக் காட்சி தருவது சிறப்பு.  

*இவரை வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஐந்து  நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றி பெறலாம். 

*இரண்டாம் பிராகாரத்திலும் ஒரு தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் அருள்புரிகிறார்.   இரண்டு குரு பகவான்கள் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

*அம்பாள் சௌந்தரநாயகி என்றும் அழகமர்மங்கை என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் கொடிமரத்தருகே தனி சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். 

*ரோமரிஷி சித்தர்:
 சித்தர்களில் ஒருவரான ரோமரிஷி என்பவர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரரை வழிபட்டு சித்தி அடைந்துள்ளார். கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ரோமரிஷி சித்தர் இறைவனை மலர் கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரகம் அமைந்துள்ளது.  

*இதைப்போல பிரம்மதேவன் மகா சிவராத்திரி தினத்தன்று மூன்றாம் காலத்தில் எழுந்தருளி அக்னீஸ்வரரை வழிபட்டு இறையருள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

*இந்த கோயில் தீர்த்தமாக தற்போது திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மிகச் சிறிய அளவில் ஒரு கிணறாக அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. 
அக்னிதீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், மாசி மாத மக நட்சத்திரம், பங்குனி மாத உத்திராட நட்சத்திரம், வைகாசி மாத பவுர்ணமி திதி ஆகிய நாட்களில் நீராடி அகனீஸ்வரரை வழிபடுபவர்கள் இந்த பிறப்பில் எல்லா செல்வங்களும், மறு பிறப்பில் நற்பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் தீர்ந்து பெருமையுடன் வாழ்வார்கள் என்பது அக்னி தீர்த்த சிறப்பாக குறிப்பிடப்படுகிறது.

*இக்கோயிலிலுள்ள நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.

*உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த மன்னன்,  நந்தவனத்தில் இறைவனது பூசைக்காக பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர அவற்றைத் தன் இரு மனைவியருக்கும் தந்தான். 
மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள், இளைய மனைவி தான் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் (மழை) அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது என்று சொல்லப் பட்டுவருகிறது.

*முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். 

*பள்ளி என்ற சொல் இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருந்ததற்கான சான்று என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப 24-ஆவது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது.

*இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது. 
(காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும் தலம். இது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.)

*திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை முதலிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன. திருவையாறு - கல்லணை சாலையில் இத்திருக்காட்டுப்பள்ளி உள்ளது. தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து  பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

அக்னீஸ்வரர் தீயாடியப்பர் திருக்காட்டுப்பள்ளி.

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,  திருக்காட்டுப்பள்ளி 613104,                  தஞ்சை மாவட்டம்.     *மூலவர்: தீயாடியப்பர் *அம்...