12 ராசிக்காரர்களும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலம் - ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோவில்
இரண்டு தட்சிணாமூர்த்தி அருளும் தலம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்
சென்னையில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது என்னும் காவேரிப்பாக்கம். இந்த ஊரின் ஒரு பகுதியாக விளங்கும் கொண்டாபுரம் ஆதியில் சைவபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்தக் கொண்டாபுரத்தில்தான் அன்னை பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது.
ராசிகளுள் மேஷம், சிம்மம், தனுசு ஆகியன அக்னியின் ஆதிக்கத்துக்குட்பட்ட ராசிகள். எனவே இந்த ராசிக்காரர்கள் அக்னி ரூபமான இறைவனை வழிபடுதல் சிறப்பு. பொதுவாகத் திருவண்ணா மலையையே அக்னித் தலமாக வழிபடுவோம். சிவபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் அக்னி லிங்கத்தையும் தரிசித்து வழிபடலாம். 
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பஞ்சபூதங்களுள் நிலத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரே பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்கு உரிய தலம்.  பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்துள் கோயில் கொண்டுள்ள பிருதிவி லிங்கத்தை வழிபடுவதன் மூலம் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்ட பலன் கிட்டும்.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் வாயுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். காளகஸ்தியில் உள்ள சிவனை வழிபடுவதால் கிடைக்கும் புண்ணிய பலனை இங்கே சந்நிதி கொண்டிருக்கும் வாயுலிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம். 
கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூதங்களுள்  நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். ஆனைக்காவில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலயமே நீர்தலம். அதற்கு இணையான பலனை இங்கிருக்கும் அப்பு லிங்கத்தை வழிபடுவதன் மூலம் பெறலாம்.
பன்னிரண்டு ராசிகளுக்கு உகந்த நான்கு லிங்கங்கள் தவிர்த்து மூலவரான பஞ்சலிங்கேஸ்வரர் ஆகாய லிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். சிதம்பரமே ஆகாயத் தலம். இங்கு மூலவரை வழிபடுவதன் மூலம் சிதம்பரத்தில் வழிபாடு செய்த புண்ணிய பலனைப் பெறலாம். மேலும் தங்களுடைய ராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும் இந்த மூலவரை வழிபடுவதன் மூலம் அவரவரது ஆதிக்கத்துக்குட்பட்ட பஞ்சபூதங்களை வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது ஐதிகம்.
இந்த ஆலயத்தில் இருக்கும் சந்நிதிகளில் 27 நட்சத்திரங்களை அடையாளப்படுத்தும் வகையில் 27 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதே போன்று பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினத்தில் வந்து வழிபட்டால் விசேஷித்த பலன்களைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சனி மஹா பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  
இந்த ஆலயத்தில் இரண்டு தட்சிணாமூர்த்தி மூர்த்தங்கள் அமைந்துள்ளன. ஒரே ஆலயத்தில் இரு தட்சிணாமூர்த்திகள் அமைந்திருப்பது விசேஷம்.  நடனமிடும் இறைவனின் திருக்கோல புடைப்புச் சிற்பமும் சிறப்பானது. இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபடக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.
கயிலாயத்தில் அன்னை சிவனுடன் தனித்திருந்தபோது விளையாட்டாக ஈசனின் கண்களை மூட அண்ட சராசரங்களும் இருண்டன. அந்த இருளின் தன்மை அன்னையின் மேனியிலும் கருமையெனப் படிந்தது. தனது பிழையினை நொடியில் உணர்ந்து கை விலக்கினாள் அன்னை. ஆயினும் இறைவனின் திருவுளம் மாற்றவும் முடியுமா. அன்னையைப் பூவுலகில் சென்று தவம் செய்யுமாறு பணித்தார். அதை ஏற்ற அன்னை பூமிக்கு வந்தாள். வடக்கே காசியில் இருந்து பக்தி செய்து வந்த அன்னை குறிப்பிட்ட காலத்தில் தென்திசை வந்தாள். மாங்காட்டிற்கு வந்து பஞ்சாக்னி நடுவில் ஊசிமுனையில் தவமியற்றினாள்.
பின்னர் காஞ்சியிலும் தவமியற்றி இறைவனின் தரிசனம் பெற்று, ஈசனுடன் இணைந்தாள். இறைவன் அன்னையை தர்மபுரி நோக்கிச் செல்லக் கட்டளையிட்டார். அதை ஏற்றுச் சென்ற அன்னை, வழியில் இந்தத் தலத்தில் தங்கியிருந்து பஞ்சபூதங்களின் நாயகனாம் சிவபெருமானை ஐந்து சிவலிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். காட்சி கொடுத்த இறைவனிடம், அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு கடன், நோய் போன்ற துன்பங்கள் எதுவும் நேராமல், சகல செல்வங்களுடன் வளமான வாழ்க்கை அடையவேண்டும் என்று வரமும் பெற்றாள்.
சென்னை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 1 கி.மீ. முன்னதாகவே நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்திருக்கிறது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 
No comments:
Post a Comment