புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள *எட்டியத்தளி* 
*அகத்தீஸ்வரர்* கோவிலைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.... 
*சனி தோஷம், ராகு தோஷம் நீங்க இந்த தலத்தின் இறைவனை வழிபடுங்கள்* .....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் எட்டியத்தளி அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி, ‘கல்யாண தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். திருமணம் தடைப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது. *இக்கோவில் நவக்கிரகத்தின் அருகில் ஜாதகத்தை வைத்து பூஜை செய்யும் வழக்கம் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.* 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு அருகில் அமைந்துள்ளது, எட்டியத்தளி அகத்தீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் என்றும், இறைவி அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஒரு சமயம் அகத்திய முனிவர் ராமேஸ்வரம் சென்றுவிட்டு இத்தலத்துக்கு வந்தார். அப்போது இங்கே ஒரு குளமும், சுயம்பு லிங்கமும் இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டார். அச்சமயம் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன், ராமேஸ்வரம் சென்று நீராடிவிட்டு திருநள்ளாறு செல்வதற்காக இவ்வழியாக வந்தான். அப்போது அவன் அகத்திய முனிவரை சந்தித்தான்.
அகத்தியர், மன்னரிடம் அஷ்டம சனி தோஷம் நீங்க, ஆலயம் ஒன்றை எழுப்ப சொன்னார். பின்பு, தான் வழிபட்ட லிங்க மூர்த்தத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார். அதன்படியே காளிங்கராயன் ஆலயம் ஒன்றை எழுப்பி, அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றான். அகத்தியர் வழிபட்டதால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
கோவில் கருவறையில் உள்ள இறைவன் ஈசான்யத்தை பார்ப்பது போல அமைந்திருப்பது சிறப்பாகும். பொதுவாக கோவில்களில் சனி பகவானுக்கு இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் அமைந்திருப்பார்கள். ஆனால், இங்கு வலப்பக்கத்தில் ராகு பகவானும், இடப்பக்கத்தில் கேது பகவானும் அருள்புரிகிறார்கள். அதனால் ராகு பகவானின் பார்வை சனி பகவான் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால் சனி தோஷம், ராகு தோஷம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 
No comments:
Post a Comment