பிள்ளையார்பாளையம்,
காஞ்சிபுரம் - 631501.
காஞ்சிபுரம் மாவட்டம்.
*மூலவர்: கச்சி அனேகதங்காவதேஸ்வரர்.
*அம்மன்/தாயார்: காமாட்சி.
*தீர்த்தம்: தாணு தீர்த்தம்.
*சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.
*இந்தக் கோயில் காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
*விநாயகப்பெருமானால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்ட திருத்தலம் என்ற பொருளில் 'அனேகதங்காவதம்' என்றும்,
வட நாட்டுத் திருக்கோயிலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'கச்சி' சேர்க்கப்பட்டு 'கச்சி அனேகதங்காவதம்' என்றும் அழைக்கப்படுகிறது.
*பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார். சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள்.
சிவன், இத்தலத்தில் விநாயகன் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார்.
விநாயகரும் அசுரர்களை அழிக்கச் செல்லும் முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.
*இத்தலத்து இறைவன் தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்து அவர்களைக் காக்கின்ற அற்புதப் பதி.
*விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேஸ்வரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.
*திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் சாத்தி, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.
*குபேரன் தான் செய்த வழிபாட்டுப் பலனாக அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுக்க, குபேரன் இங்கு சிவபெருமானைத் தன்னைக் காக்கும்படி வேண்டினான். சிவபெருமான் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி சுக்கிரனின் கர்வத்தை அடக்கினார். குபேரனைக் காத்தார்.
*மூன்று கல்வெட்டுக்கள் இருக்கின்றன. முதற் குலோத்துங்க சோழனின் முப்பத்து நான்காம் ஆட்சியாண்டில் தோன்றிய கல்வெட்டு, திருக்கோயிலுக்கு இரண்டுவேலி நிலம் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது. இந்நிலம் காஞ்சீபுரத்தில் இராஜ சிம்மேஸ்வரம் அல்லது கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கில் உள்ளது.
குலோத்துங்க சோழனின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டு, தாமர்க்கோட்டத்து தாமர்நாட்டுத் தாமர் (தாமல்) அல்லது நித்தவிநோதநல்லூரில், அரசன் மூன்றுவேலி நிலத்தை இறைவர்க்குக் கொடுத்ததைக் குறிப்பிடுகின்றது.
மூன்றாவது கல்வெட்டு அநேகதங்காபதக்கோயில் அதிகாரிகள், கோயிலுக்குரிய கைக்கோளர்களுக்கு 1400 குழி நிலத்தைக் கொடுத்ததைக் குறிப்பதாகும்.
*அமைவிடம்:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, புத்தேரித் தெரு வழியாகக் கயிலாயநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சென்று இக்கோயிலை அடையலாம்.
*இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே. கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 8.30 to 11.30 am.
மற்ற நேரங்களில் மெய்க்காப்பாளரை தொடர்புகொண்டு கோயிலுக்குள் செல்லலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment