தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு சிவன்கோயில்
தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஒரத்தநாடு 20 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரத்தநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ½கி.மீ தொலைவில் உள்ளது இந்த சிவாலயம். இப்பகுதி முத்தம்மாள்புரம் எனப்படுகிறது.
ஒரத்தநாடு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் 1802-ல் இரண்டாம் சரபோஜி மன்னர் (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832),காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மன்னர் காசி சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்டது என ஒரு தகவல்.
இறைவன் - காசி விஸ்வநாதர்
இறைவி – காசி விசாலாட்சி
கிழக்கு நோக்கிய திருக்கோயில் மிகப்பெரிய வளாகத்தில் இரண்டு சுற்றுகள் கொண்டதாக அமைந்துள்ளது. கிழக்கில் 5 நிலை ராஜகோபுரமும் மற்றும் தெற்கில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடியதாக உள்ளது. ராஜகோபுரத்தின் முன்புறத்தில் சன்னதி தெருவினை ஒட்டி பெரிய குளம் ஒன்றும் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தாண்டி சென்றால் பலிபீடம், துவஜஸ்தம்பம் மற்றும் நந்தி மண்டபம், உள்ளன. வலதுபுறம் பெரிய உருளை வடிவ தூண்களுடன் வசந்த மண்டபம் உள்ளது. அதனை ஒட்டி அம்பிகைக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.
கருவறை இடைநாழி, அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது அம்மன் கோயில். அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறார்.
பிரஸ்தரம் எனப்படும் மேல் தளம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அம்பிகையின் முன்னே ஒரு நந்தி மண்டபம் கொடிமரம் ராஜகோபுரம் உள்ளன. கருவறையின் சுற்றில் கோஷ்ட மூர்த்திகளாக இச்சா ஞான கிரியாசக்தி அம்மன்கள் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் இருந்து மற்றொரு மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் நாற்புறமும் திருமாளிகைபத்தி கொண்டு பிரம்மாண்ட காட்சியை தருகிறது. முதல் திருச்சுற்று.
முதல் பிரகாரத்தில் நால்வர், சேக்கிழார் கணபதி, ஐயனார் ஐயப்பன், ஆறுமுகன் இரு துணைவியாருடன் மிகப்பெரிய உருவாக உள்ளார். பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் ஆயுதம் ஏந்திய கோலம் கொண்டுள்ளார்.
சிறிதாக மூன்று லிங்கங்கள், கஜலட்சுமி, சொக்கநாதர்-மீனாட்சி, சரஸ்வதி, வடகிழக்கில் நவகிரகங்கள், சூரியன், சனி, தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி, காலபைரவர், என சன்னதிகள் உள்ளன.
இறைவனின் கருவறை இடைநாழி, நீண்ட அர்த்தமண்டபம் பெரிய உருளை தூண்களை கொண்ட நாயக்கர் பாணி கூம்பு வடிவ விதானம் கொண்ட முக மண்டபம் பார்க்க பிரமிப்பை ஊட்டுகிறது.
கோஷ்டவிநாயகர், தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார்.
கோயில் காலை 07.00 மணி முதல் உச்சி காலம் வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
வைகாசி விசாகம் பத்து நாட்கள் உற்சவம் தேர் என களை கட்டுகிறது.
காசி விஸ்வநாதர் கோயில் இவ்வளவு பெரிய அளவில் வேறெங்கும் தமிழகத்தில் பார்த்திருக்க இயலாது. அப்படியே முத்தம்மாள் சத்திரத்தினையும் கண்டு செல்வீர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment