Thursday, October 16, 2025

கரிகாலன் கட்டிய திவ்ய தேசம் கோவிலடி திருப்பேர்நகர் அப்பாலரங்கநாதர்.


108 வைணவத் 
திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் ஒன்றானதும்,
கரிகால சோழனால் கட்டப்பட்ட தலமானதும்,
பஞ்சரங்க தலங்களில் ஒன்றான 
காவிரிஆற்றங்கரையில் 
அப்பக்குடத்துடன் 
புஜங்க 
சயன கோலத்தில் ரங்கநாதர் காட்சி தரும் தலமான 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#கோவிலடி என்ற #திருப்பேர்நகர் (#அப்பாலரங்கம்)
#அப்பக்குடத்தான் என்ற 
#அப்பால_ரங்கநாதர் 
#கமலவல்லி_தாயார் திவ்யதேச திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 
கங்கையினும் புனிதமாய காவிரியின் புதுப்புனலால், செந்நெல்லும் செங்கரும்பும் செழித்து பூத்துக் குலுங் கும் பசுஞ்சோலைகளும், தாமரை பூத்த தடாகங்களும் நிறைந்த புனித பூமி சோழ வளநாடு!

இப்புண்ணிய பூமியில் காவிரியின் இரு மருங்கிலும் விண்ணளந்து நிற்கும் சைவ, வைணவத் திருத்தலங்கள் தமிழ்த்திருநாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுக்குச் சான்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சிறப்புகள் வாய்ந்த சோழவள நாட்டில் பக்தி நெறியைப் பரப்பும் விதமாக அலைமகள் உறைமாா்பன் அா்ச்சாவதாரத் திருக்கோலம் கொண்டு எழுந்தருளிய, ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் பல உள்ளன. கலியுகத்தில் நலம் தரும் நாயகனான ஶ்ரீமந் நாராயணன் தன் பக்தா்கள் எளிதாகத் தன்னைச் சரணடைவதற்காக அமைத்துக் கொண்ட உன்னதமான நிலையே அா்ச்சா ரூபமாகும்.

“தமா் உகந்தது எவ்வுருவம் அவ்வு ருவம் தானே தமா் உகந்தது எப்போ் மற்றப்போ்” என்று அா்ச்சாவதாரத் திருமேனியின் மேன்மையைப் பாடிப் பரவசப்பட்டுள்ளாா் பொய்கை ஆழ்வாா்.

கலியுகத்தில் அா்ச்சாவதாரத் திருமேனியின் மேன்மையை உணா்ந்த மகரிஷிகளும் மன்னா்களும் நமது வழிபாட்டிற்காகப் பல திருக் கோயில்களை நிா்மாணித்து அா்ப்பணித் துள்ளனா்.

இவ்வாறு “அனந்தனின் மலர ணையில் பள்ளி கொண்டு” பேரழகனாக பரந்தாமன் காவிரி நதிக்கரையில் ஶ்ரீஅப்பக்குடத்தான் எனும் திருநாமத்தோடு கோடி சூரியப்பிர காசனாக அருள்புரியும் தெய்வீகத் திருத்தலமே, தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகிலுள்ள கோவிலடி என்னும் திருத்தலமாகும்.

கோவிலடி 
அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. 
இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. இக்கோவில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. 
திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார்.
கொள்ளிடத்தின் தெற்குக்  கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசம்,
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அன்பிலுக்குக் கிட்டத்தட்ட நேர் எதிரே அமைந்துள்ளது கொள்ளிடம் ஆற்றைக் கடந்து சென்றால்  இந்த இரு திவ்யதேசங்களுக்கும் இடையே உள்ள தூரம் 1 கிலோமீட்டர்தான். ஆனால், சாலை வழியே கோவிலடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி, பூண்டி, அரியூர் இவற்றைத் தாண்டி அன்பில் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோவிலுக்குத் தென்புறம் சற்றுத் தொலைவில் காவிரி  ஓடுகிறது.   கொள்ளிடம், காவிரிக்கு இடையே அமைந்திருக்கும் விதத்தில், இந்தக் கோவிலும் ஸ்ரீரங்கத்தை ஒத்திருக்கிறது. இங்கே எழுந்தருளியிருப்பவர் ரங்கநாதர். இவர் ஸ்ரீரங்கத்திலிருயிருந்து தள்ளி - ஸ்ரீரங்கத்துக்கு அப்பால்- அமைந்திருப்பதால், அப்பால ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

21 படிகள் எறி மேலே செல்ல வேண்டும். இந்திரகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது இந்தக் கோவில்.

சோழர் காலத்தில் பேர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்

பிற்காலத்தில் திருப்பேர் நகர் என்று பெயர் பெற்றது. ஆழ்வார்கள் தங்கள் பாசுரத்தில் இந்த திவ்யதேசத்தை 'பேர் என்றும் 'திருப்பேர் நகர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

வைணவ மரபில் கோவில் என்றால் திருவரங்கம் கோவிலைத்தான் குறிக்கும். திருவரங்கம் கோவிலுக்குச் சற்றுத் தள்ளி அமைந்திருப்பதால், இந்தத் திருத்தலத்துக்கு கோவிலடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பால ரங்கநாதர் என்ற பெயரும் கிட்டத்தட்ட இதே பொருளைத்தான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மங்களாசாசனம்
இத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.

நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது கோவிலடியில் உள்ள அப்பால ரெங்கநாதர் கோவில்.

கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.

சோழ மன்னா்கள் நிா்மாணித்த மாடக்கோயிலுக்கு எடுத்துக்காட்டாக காவிரி நதி தீரத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்தலம் ஶ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக (முந்தியதாக) அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று வழங்கப்படுவதாக இத்தலத்தின் வரலாறு தொிவிக்கின்றது.

புராணங்களிலும் ஆழ்வாா்களின் பாசுரங்களிலும் திருப்போ் நகா் என்று போற்றி வணங்கப்படும் இத் திவ்யதேசத்தில் இன்றும் பெருமானுக்கு இரவில் அப்பம் செய்து நைவேத்தியம் செய்வது வழக்கமாகப் பின்பற்றப்படுகின்றது.

ஶ்ரீதேவியான திருமகள் திருப்பேர் நகருக்கு வந்து பெருமானை நினைத்து தவமியற்றி, அவரது திருமாா்பில் சேரும் பேறினைப் பெற்ற தலம் என்பதால் இத்தலத்தை “ஶ்ரீ ஆகிய மஹாலக்ஷ்மி உறையும் நகா்” என்ற பொருளில் “ஶ்ரீநகா்” என்றும் போற்றி வணங்குகின்றனா்.

*பஞ்சரங்கத் தலம்!

திருமகள் கேள்வன், ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்டு ஶ்ரீரங்க நாதராக சேவை சாதிக்கும் கீழ்க்கண்ட திருத்தலங்கள் பஞ்சரங்கத் தலங்கள் என்று போற்றி வணங்கப்படுகின்றன. அவை,

1. ஆதிரங்கம்: ஶ்ரீரங்கப்பட்டினம், ஶ்ரீஆதிரங்கன்.

2. அப்பாலரங்கம்: திருப்போ் நகா் (கோவிலடி) ஶ்ரீஅப்பாலரங்கன்.

3. மத்திய ரங்கம்: ஶ்ரீரங்கம், ஶ்ரீகஸ்தூரி ரங்கன்.

4. சதுா்த்தரங்கம்: கும்பகோணம், ஶ்ரீசாரங்கபாணி (ஆராஅமுதன்)

5. பஞ்சரங்கம்: திருஇந்தளூா் (மயி லாடுதுறை), ஶ்ரீபரிமளரங்கன்.

இந்த பஞ்சரங்கத் தலவரிசைகளில் அப்பாலரங்கம் என்று போற்றப்படும் திருப்போ்நகா் (கோவிலடி) ஶ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என்று வணங்கப்படும் தனிச் சிறப்பினைப் பெற்று விளங்கும் திருத்தலமாகும்.

*மூலவர்: அப்பக்குடத்தான்,புஜங்க சயனம், மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

உற்சவர்: அப்பால ரங்கநாதர்,அப்பக்குடத்தான், கனகவல்லி, பூமாதேவித் தாயார், ஆண்டாள், நர்த்தனமாடும் கிருஷ்ணர்  ஆகியோருடன் சேவை  சாதிக்கிறார்.

தாயார்: இந்திரா தேவி, கமல வல்லி

தலவிருட்சம்: புரச மரம்,

*தீர்த்தம்: காவிரி, இந்திர புஷ்கரணி. கோவிலுக்கு சற்றுத்  தொலைவில் உள்ள புஷ்கரணியில் செடிகள் மண்டி, பயன்படுத்தப்பட்ட முடியாத நிலையில் இருப்பதாக, கோவிலில் மேளம் வாசிப்பவர் கூறினார்.   .

விமானம் : இந்திர விமானம்

பெருமாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் சந்நிதிக்கு வலப்புறமாக விஷ்வக்சேனர் ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. பிரகாரத்தின் முடிவில் ஒரு விநாயகர் சந்நிதி இருக்கிறது. இவர் வழிகாட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

*#நம்மாழ்வார் பாசுரம்:

"பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்

ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.

புராண வரலாறு:

ஒரு காலத்தில் துர்வாச முனிவரின் கடும் கோபத்திற்கு ஆளான உபமன்யு என்ற மன்னன் தன் நாடு நகரங்களை இழந்தான். செய்வது அறியாமல் திண்டாடிய உபமன்யுதன் சாபம் தீர தனக்கு சாபம் அளித்த துர்வாச முனிவரிடமே சரண் அடைந்து சாபம் தீர வழி வேண்டினார். துர்வாச முனிவர் உபமன்யு வின் சாபம் தீர அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதன்படி அன்னதானம் செய்ய கோவிலடி பகுதியில் தங்கியிருந்து அன்னதானம் செய்து வந்தார். அன்னதானம் செய்து வந்த ஒரு நாளில் வயதான அந்தணர் ஒருவர் மன்னன்முன் தோன்றி அன்னம் கேட்டார். தயாரித்து இருந்த உணவு அனைத்தையும் ஒருசேர உண்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார்.

இதை கண்டு வியப்படைந்த மன்னர் முதியவரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பசியாற இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க. முதியவர் ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் வந்திருக்கும் முதியவர் பெருமாளே என்று எண்ணி விரைந்து அப்பம் தயாரித்து குடத்தில் இட்டு முதியவரிடம் அளித்தார். அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். இதனால் உபமன்யு சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த இந்த இடமே கோவிலடி ஆகும்.

#அப்பக்குடத்தான்:

உபமன்யு மன்னனிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக் குடத்தான் என்று அழைக்கப்படு கிறார்.
மூலஸ்தானத் தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் புஜங்க சயனத்தில் மேல்நோக்கி உள்ளார் அப்பக்குடத்தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தி அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று பெயர் வழங்கப்படு வதாகவும் கூறப் படுகிறது. புராணங்களில் திருப்பேர்நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு தினமும் அப்பம் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.

கோவிலடி பெருமாளுக்கு திருமண தடை உள்ளவர்கள்இரண்டு துளசி மாலையை கொண்டு வந்து பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு ஒரு மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அப்பக்குடத்தான் சேவடி யில் பூமிதேவி தவம் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடர்பாக தீராத பிரச்சினைகள் உள்ள வர்கள் கோவிலடிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டால் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

நோய் வாய்ப்பட்டவர்கள் மூன்று சனிக்கிழமைகள் கோவிலடி பெருமாள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் பெறுவார்கள். தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் கணவன்- மனைவி களுக்கிடையே மன மாச்சர்யம் உள்ள தம்பதிகள் வெள்ளிக் கிழமைகளிலும். திருவோண நட்சத்திர நாளிலும் கோவிலடிக்கு வந்து பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கி ஏற்றம் பெறுவார்கள்.

இத்திருக் கோவிலில் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளர்பிறை நாட்களில் கற்கண்டு நைவேத்யம் செய்து 10 குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தாங்களும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். கோவிலடி திருக்கோவிலில் மூலவர் அப்பக்குடத் தான். தாயார் கமலவள்ளி தாயார். இத்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராபத்து நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமி பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். பங்குனி மாதத்தில் பெரிய தேரில் பெருமாள் வீதியுலா வருவார். இத்திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது.

இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். இக்கோயிலில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ் வார்கள், கருடன், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவில் 10- நாட்களும் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் உண்டாகும்.

*புரட்டாசி மாத வழிபாடுகள்:

கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கமலவள்ளி தாயார் கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். இக்கோவிலில் அப்பம் நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தலச்சிறப்பு
இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் “திவ்ய தேசங்கள்” என்றும், “திருப்பதிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு “அப்பக்குடத்தான்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.

பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை உடைய திவ்ய தேசம், தற்போது “கோயிலடி” என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு “வைகுண்ட வாசம் நிச்சயம்” என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது. இந்த பஞ்ச ரங்க தலங்கள், உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன. அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.

1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
3. மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும். ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும், ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், “ஆதி ரங்கம்” என்னும் பொருள்பட “அப்பால ரங்கம்” என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

*தல வரலாறு:

ஒரு காலத்தில் இந்த ஊர் பலாச மரங்கள் நிறைந்த புரசமரக் காடாக இருந்தது. இதனால் இத்தலம் பலாச வன ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்டு வந்த உபரி சர்வசு என்ற மன்னன், வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது யானை ஒன்றை அம்பு கொண்டு தாக்கினான். அந்த யானையோ பயத்தில் வேதம் ஓதும் அந்தணர் ஒருவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷ நிவர்த்திக்காக பெற துர்வாச முனிவரிடம் சென்று வேண்டினான்.

அவரோ, ‘பலாச வனத்தில் அமைந்துள்ள ரெங்கநாதர் கோவிலுக்குச் சென்று ‘ஓம் பத்மநாபாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து அன்னதானம் செய்தால் தோஷ நிவர்த்தியாகும்’ என்று அருளாசி கூறினார். அதன்படியே மன்னன் இந்த ஊரில் அரண்மனைக் கட்டி தினமும் அன்னதானம் செய்து வந்தான். அப்போது பெருமாள் அசரீரியாக, ‘மன்னா! நீ கார்த்திகை மாதம் துவாதசியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும்’ என்றார். உபரிசர்வசுவும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தான்.

அப்போது பெருமாள், வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவுக்கேட்டார். சமைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான் மன்னன். உடனடியாக உணவு தயார் செய்து தருவதாக கூறினான்.

ஆனால் அந்தணர் உருவில் இருந்த பெருமாளோ, ‘சமையல் செய்ய அதிக நேரம் ஆகும். எனக்கு பசி அதிகமாக உள்ளது. எனவே உடனடியாக அப்பம் செய்து கொடு’ என்றார்.

மன்னன் பக்தி சிரத்தையுடன் நெய்யினால் வெந்ததும், வெல்லம் கலந்ததும், அதிக ருசியுடன் தயாரித்த அப்பங்களை ஓர் குடம் நிறைய நிரப்பிக் கொண்டு அந்தணரிடம் கொடுத்தான். பேரானந்தம் அடைந்த பெருமாள், அப்பக் குடத்தில் வலது கரம் வைத்து ஆசி கூறிவிட்டு, மன்னனுக்கு திவ்ய தரிசனம் கொடுத்தார். இதையடுத்து மன்னனின் சாபமும் நீங்கியது.

இந்த நிகழ்வின் காரணமாகவே இத்தல பெருமாளுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற சிறப்பு பெயரும் வந்தது. இத்தல இறைவனுக்கு அப்பமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. பெருமாள் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. திருக்கோவில் ஒரு மேட்டின் மீது உள்ளது. 20 படிகள் ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படிகள் ஏறும் போதே நடுவில் கொடி மரம் உள்ளது. ஆலய விமானத்தின் பெயர் இந்திர விமானம். தீர்த்தம் இந்திர புஷ்கரணி. தாயாரின் பெயர் இந்திராதேவி எனும் ஸ்ரீகமல வல்லி.

பெருமாளின் தலைமாட்டில் அப்பக்குடம் உள்ளது. இக்குடத்திற்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு அதன்மேல் தட்டில் வைத்து அப்பம் நிவேதனம் செய்யப்படுவது தற்போதைய வழக்கமாக உள்ளது. மேலும் இத்திருத்தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாள் தனது ஒரு கரத்தால் மார்க்கண்டேயருக்கு ஆசி கூறுகிறார். திருக்கடையூரில் சிவபெருமானால் என்றும் 16 வயதுடன் இருக்க வரம் பெற்ற மார்க்கண்டேயன் இந்த யுகம் முடிந்ததும் மீண்டும் பிறவாமல், மோட்சநிலை அடைய வேண்டி இக்கோவிலுக்கு வந்து தவம் இருந்தார்.

பெருமாள் அவருக்கு மோட்ச நிலையை வழங்கினார். எனவே எமபயம் போக்கும் பெருமாளாகவும் இவர் விளங்குகிறார். கோவில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வார் என்னும் சிறிய பிள்ளையார் சன்னிதி உள்ளது. சாபம் நீங்க இந்திரனுக்கு வழிகாட்டியதால் இவரை வழிகாட்டி விநாயகர் என்றும் அழைக்கிறார்கள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அதன் பிறகு மோட்சம் பெற்றுவிட்டார். இத்தல அப்பக் குடத்தானை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும், சாபவிமோசனம் பெறலாம்.

ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை காரணமாக கடுமையான நிதி நெருக்கடி மற்றும் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மை ஆகியவற்றினால் கஷ்டப்படும் அன்பா்கள் வெள்ளிக்கிழமைகளிலும் திருவோண நட்சத்திர நாள்களிலும் ஶ்ரீ அப்பக்குடத்தான் மற்றும் ஶ்ரீகமலவ ல்லித் தாயாா் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட தோஷம் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் நிலவும்.

ஶ்ரீமாா்க்கண்டேய மகரிஷிக்கு எமபயம் போக்கி அருளியது இத்தல எம்பெருமான் என்பதால் நோயின் தீவிரம் காரணமாக அவதியுறுபவா்கள் அல்லது அவா்களது உறவினா்கள் மூன்று சனிக்கிழமைகளில் இத் தலத்திற்கு வருகை தந்து நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் சீரடையும்.

“மாவலியின் வேள்வியில் மூவடி தா” என்று கேட்டு இத்தரணியை அளந்த எம்பெருமானின் திருவடி அருகில் பூமிதேவி தபஸ் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடா்பான வழக்குகளில் சிக்கித் தவிப்பவா்கள் இத்தலத்திற்கு வந்து அரங்கனைப் பணிந்து வணங்கிட அவா்களது சிக்கல்கள் அகன்று சுமூக நிலை ஏற்படும்.

கோபியா்கள் கொஞ்சும் குழந்தை யாகவும் தோழனாகவும் விளங்கும் அஞ்சனவண்ணன், ஆயா்குலத் திலகம் கண்ணன் கோவிலடி திருத்தலத்தில் “சந்தான கோபால கிருஷ்ணனாக” அருள்பாலிக்கின்றாா். தன் குமுத வாயால் குவலயம் காட்டியருளிய கண்ணனின் தெய்வீக அழகில் நம் மனதைப் பறிகொடுத்து விடுகின்றோம்.

மழலைப் பேறு இல்லாத தம்பதியினா் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளா்பிறை நாட்களில் வெண்ணெய் மற்றும் கற்கண்டு நிவேதனம் செய்து, அதனைப் பத்து குழந்தைகளுக்குப் பிரசாதமாக வழங்கிய பின் மீதமுள்ள பிரசாதத்தை அருந்தி வர மழலை பாக்கியம் ஏற்படுகின்றது என்பதைப் பலன் பெற்ற அன்பா்கள் தொிவிக்கின்றனா்.

அப்பக்குடத்தானைப் பாடிய ஆழ்வாா்கள்!

சா்வ மந்திரங்களாகவும், மந்திரங் களின் பலனாகவும் இருக்கின்ற ஶ்ரீமந் நாராயணனிடம் ஆத்ம சமா்ப்பணம் செய்த ஆழ்வாா்கள், அவரது அவதாரப் பெருமைகளை பக்திரசம் சொட்டும் பாமாலைகளால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தனா்.

அரங்கனைப் பாடும் வாயால் அரசனைப் பாடமறுத்த திருமழிசை யாழ்வாரும், விஷ்வக்சேனரின் அம்ச மாக கலியுகம் பிறந்த உடன் அவதரித்த நம்மாழ்வாரும், குன்றமேந்திக் குவலயம் காத்த கண்ணனின் மழலை அமுதத்தைப் பருகி தன்னை கண்ணனின் தாயான யசோதையாகவே நினைத்து மகிழ்ந்த பெரியாழ்வாரும், திருமாலின் திருக்கரத்தில் அணி செய்யும் “சாா்ங்கம்” என்னும் வில்லின் அம்சமாக அவதரித்து நலம் தரும் சொல்லை திருமந்திரமாக அளித்த திருமங்கையாழ்வாரும், அப்பக்குடத்தானை 33 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளனா்.

புளியமரத்து நன்னிழலில் அமா்ந்து ஞானத்தைப் போதித்த “நம்மாழ்வாரிடம்” 108 திவ்யதேச எம்பெருமான்களும் எழுந்தருளி, சேவை சாதித்து, திருவாய்மொழிகளை அவரிடமிருந்து கேட்டுப் பெற்றனா் என்பது வைணவம் கூறும் வரலாறு.

அவ்வாறு திருப்போ் நகரில் (கோவிலடி) அருள்புரியும் அப்பக்கு டத்தானும், திருமாலிருஞ்சோலை கள்ளழகரும், நம்மாழ்வாருக்கு ஒரு சேர சேவை சாதிக்கத் திருவுள்ளம் கொண்டபோது, நம்மாழ்வாா் யாரைப் பாடுவது எனத் திகைக்க, அப்பக் குடத்தான் ஆழ்வாரிடம் உரிமையோடு தன்னைப் பாடவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுள்ளாா்.

“பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடலேழ் மலையேழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே”

−என்று உள்ளம் உருக மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளாா் வேதம் தமிழ் செய்த மாறன்.

ஆழ்வாா்களிடத்தில் அப்படி ஒரு உரிமை−அன்பு−பாசம் எம்பெருமானுக்கு! அடியவா்களான ஆழ்வாா்களின் மீது பக்தவத்ஸலன் கொண்ட வாத்ஸல்யத்தின் காரணத்தால் பக்திப் பரவசமூட்டும் பைந்தமிழ்ப் பாசுரங்கள் நமக்குக் கிடைத்தன.

ஶ்ரீஅப்பக்குடத்தானைப் பாடிய திருமங்கையாழ்வாா், திருவெள்ளறைப் பெருமானைத் தரிசிக்கச் சென்றுள்ளாா். அப்பாலரங்கனின் நினைவலை களிலிருந்து மீள முடியாத ஆழ்வாா் திருவெள்ளறைப் பாசுரத்திலும் திருப்போ்நகா் என்ற கோவிலடியில் அருள்பாலிக்கும் எம்பெருமானை நினைத்துப் பாசுரம் பாடியுள்ளாா்.

“துளக்கமில் சுடரை, அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்-
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே”

−திருமங்கையாழ்வாா்

"போமானை யெய்து பொருமானைக் கொம்புபறித்
தாமானை மேய்த்துவந்த வம்மானைத்--தாமச்
செழுந்திருப்பே ரானைச் சிறுகாலைச் சிந்தித்
தெழுந்திருப்பேற் குண்டோ விடர். (8) 
   - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

*கோவிலடி தலத்தின் பெருமைகள்!

நம்மாழ்வாா் கோவிலடி தலத்தில் அருள்பாலிக்கும் அப்பக் குடத்தானைப் பாடிய பின் நேராக திருநாட்டுக்கு எழுந்தருளினாா். இதனால் நம்மாழ்வாரால் கடைசியாகப் பாடப்பெற்ற திருத்தலம் இத்தலம் தான். அதனால் கோவிலடி தலத்தின் அரங்கனே நம்மாழ்வாரை வைகுண்ட பதவி அளித்து அவரை அழைத்துச் சென்றாா் என்பது ஐதீகமாக உள்ளது.

ஶ்ரீரெங்கராஜசரிதபாணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய சிறப்புகள் கூறப்பட்டுள்ளது.

பூமித்தாய் பச்சை நிறப் பட்டு உடுத்திய வண்ணம் எங்கும் பசுமை போா்த்திக் காணப்படும் காவிரி நதியின் தீரத்தில் அமைந்துள்ள இத் தலத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சூழலை தனது பாசுரங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளாா் திருமங்கையாழ்வாா்.

காவிரிக் கரையின் மேடான பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலை தூரத்திலிருந்து பாா்க்கும் போது பேரழகுடன் திகழ்வது கண்ணுக்கு இனிய திருக்காட்சியாகும்.

இந்திரா தேவி, கமலவல்லி நாச்சியாா் என இரு தாயாா்கள் இத்தல த்தில் அருள்பாலிக்கின்றனா். இந்திரா தேவி பூமி தேவியாக பெருமானின் கருவறையில் தபஸ் செய்யும் கோலத்தில் எழுந்தருளியுள்ளாா். கமலவல்லித் தாயாா் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாா். இத் தலத்தின் புனித தீா்த்தம் இந்திர தீா்த்தம் என வழங்கப்படுகின்றது.

பராசர மகரிஷியும் மாா்க்கண்டேய மகரிஷியும் உபமன்யு மன்னனும் அப்பக்குடத்தானின் தரிசனம் கண்டு மகிழ்ந்துள்ளனா்.

*திருவிழாக்கள்:

புரட்டாசி மாதம் கிருஷ்ணனுக்கு உரியடி உற்சவம், நவராத்திரி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி உத்திர உற்சவத்தில் திருத்தேர் விழா, தீர்த்தவாரி தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபத்தில் இருந்து விமோசனம் பெற, தீராத பிரச்சினைகள் விட்டுச் செல்ல, குழந்தை பாக்கியம் பெற, திருமண வரம் அருளப் பெற இத்தல பெருமாளை வழிபடுவது வழக்கம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

*அமைவிடம்: 

திருச்சியிலிருந்து 25 கி.மீ. தூரத் திலும் கல்லணையிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது கோவிலடி திருக்கோயில். தஞ்சாவூரிலிருந்து
திருக்காட்டுப்பள்ளி சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் பேருந்திலும் கோவிலடி திருத்தலம் செல்லலாம்.

தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.

ஆபத்துக் காலங்களில் மட்டுமல் லாது அனைத்து நேரங்களிலும் அப் பாலரங்கனின் திருவடிச் சிந்தனை அரும்பெரும் துணையாக நம்மைக் காத்து நிற்கும். நான்கு ஆழ்வாராதிகள் பாடித் துதித்த இப்பெருமானின் திருச்சந்நிதிக்கு நமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வணங்க வேண்டும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் ஏன்?

அன்னாபிஷேகம்...! ஐப்பசிமாத முழுநிலவு நாளில்      உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு. ஒவ்வொரு மா...