Sunday, October 19, 2025

அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிடய வீரபத்திரர்.

_வீரபத்திரர்_
சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர்.

தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம்.

அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி, தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது.

ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது.

கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்

பிரம்ம தேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரை வார்த்துத் தந்த போதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான்.

நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான்.

தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல் பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான்.

பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள்.

தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர்.

சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர்.

தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னி தேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்ம தேவன் தலை இழந்தான்.

வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார். திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக் கொண்டது.

தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார்.

வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன்.

தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம் தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாள்,மகா அஷ்டமி எனப்படுகிறது. தட்சனின் யாகத்தை அழித்த வீரபத்திரரைக் குறித்து நோற்கப்படும் விரதம் அது.

புண்ணிய நதிகளின் காவலராக வீரபத்திரர் உள்ளார். கும்பகோணம் மகாமகக் குளத்தருகே அவரது சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமர்ந்த கோலத்தில், யோக நிஷ்டையில், சப்தமாதர்கள் திருமேனிகளுக்கு அருகில், வீரபத்திரரை தரிசிக்கலாம்.

வீரபத்திரருக்குரிய அலங்காரங்களில் வெற்றிலை மாலை அணிவிப்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கில் வெற்றிலையை அடுக்கடுக்காகத் தைத்து, மாலையாக அணிவிப்பது, ஆடிப்பூர நாட்களில் நடைபெறும்.


ஆலயங்கள்

வீரபத்திரருக்கு, வடக்குத் திசை நோக்கியபடி தனிக்கோவில் அமைவதோடு, சிவாலயங்களில் உள்சுற்றில் தென்திசையில், சப்தமாதர்களுக்கு அருகில் வீரபத்திரரைக் காணலாம். அது தவிர தென் தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் எழுப்பப்பட்டுள்ள மகா மண்டபங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் மற்றும் நாட்டியமாடும் நிலையில் வீரபத்திரர் சிலைகளைக் காணலாம். வீரபத்திரரை மூலவராகக் கொண்ட தனி ஆலயங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. அரன்மைந்தன்புரம் என்ற அழகுப் பெயரை, தற்போது அனுமந்தபுரம் என்று ஆக்கிய தலம். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவிலுக்குச் தென்கிழக்கே 7கி.மீ. தொலைவில் உள்ளது. எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருவுருவமாக வீரபத்திரர் விளங்குகிறார். தலைமுடியில் சிவலிங்கம் உள்ளது.வலது கால் அருகே ஆட்டுத் தலையுடன் தட்சன் கரங் கூப்பியபடி நிற்பதைக் காணலாம்.மேற்கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தியபடி,கீழ்க்கரங்களில் கத்தியும் கேடயமும் தாங்கிய கோலம்.வெண்ணெய் சாற்றுவதும்,வீரபத்திரருக்கு வெற்றிலைப் படல் அமைத்து வெற்றிலை மாலை அணிவிப்பதும் தனிச்சிறப்பாகும்.
வீராவாடி-திருவாரூருக்கு வடக்கே மயிலாடுதுறை செல்லும் சாலையில்,20 கி.மீ.தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்னும் ஊருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. 3 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய கோவில். அம்பன், அம்பாசுரனைக் கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிட, அதனை விரட்டிடவே சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பியதாகத் தல வரலாறு கூறுகிறது. மூலவராக நான்கு கரங்களோடு நின்ற கோலத்தில் வீரபத்திரர் காட்சி தருகிறார். வீரபத்திரர் அடிபதித்த தலம் என்பதால் வீராவடி என்று அழைக்கப்படுகிறது.

ஆணவம் அழிந்து ஞானம் பிறந்த கதையே வீரபத்திரரின் அருட்கோலம்.திக்கெட்டும் வெற்றிகள் குவித்திட வீரபத்திரரைப் வணங்கி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...