பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆழ்ந்த பக்தியில் ஈடுபட்டிருந்த முதலாழ்வார்கள் மூவரும் ஒரே இடத்தில் தங்காமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊரில் தங்கி, ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இந்த அடியார்கள் மூவரையும் கொண்டு திவ்யப் பிரபந்தங்களை உலகம் உய்வதற்காகத் தோற்றுவிக்க வேண்டும் என்று திருமால் திருவுள்ளம் கொண்டார்.
ஒருநாள் பொய்கை ஆழ்வார் பெண்ணையாற்றின் கரையில் இருக்கும் திருக்கோவலூர் என்ற ஊருக்குச் சென்றார். அந்த ஊரில் உலகளந்த பெருமாளாக மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ளார். பெருமாளின் வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இவருடைய இடது கையில் உள்ளது. அவரது திருவடியின் கீழ் பிரகலாதனும், மகாபலி சக்கரவர்த்தியின் மகனான நமுசி என்ற அசுரனும் உள்ளனர்.
பொய்கை ஆழ்வார் இந்த ஊரை அடைந்தபொழுது பலத்தமழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் செல்ல முடியாத நிலையில், அவர் அருகிலிருந்த மிருகண்டு முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மழைச்சாரல் அடிக்காமல் இருக்கவேண்டிக் கதவை அடைத்துவிட்டு ஆசிரமத்தின் முன்பகுதியில் படுத்து திருமாலைப் பற்றி எண்ணலானார்.
சிறிது நேரத்தில் திருமாலின் திருவிளையாடலால் அதே இடத்திற்கு பூதத்தாழ்வாரும் வந்து சேர்ந்தார். இருட்டில் கதவைத் தட்டி, 'உள்ளே வரலாமா?' என்று கேட்டார். 'தாங்கள் யார்?' என்று பொய்கை ஆழ்வார் கேட்டார். அதற்கு பூதத்தாழ்வார், 'சுவாமி! அடியேன் திருமாலின் அன்பர்' என்று பதில் அளித்தார். 'ஆ! தாங்கள் திருமால் அடியவரா! இதோ வருகிறேன்` என்று சொல்லி, படுத்திருந்த பொய்கையார் எழுந்து கதவைத் திறந்தார்.
உள்ளே இருந்த இடம் ஒருவர் மட்டுமே படுக்கப் போதுமானதாக இருந்தது. ஒருவர் படுக்கும் இடத்தில் இருவர் அமரலாம் என்று இருவரும் அமர்ந்துகொண்டு, திருமாலின் திருவருளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர்.
சற்று நேரத்தில் மூன்றாவதாகப் பேயாழ்வார் அதே இடத்திற்கு வந்துசேர்ந்தார். கதவை மெதுவாகத் தட்டி, 'அடியேன் தங்க இடமுண்டா?' என்று கனிவாகக் கேட்டார். இதைக்கேட்ட பொய்கை ஆழ்வார், திருமாலின் திருவிளையாட்டை எண்ணி வியந்தார். முதலில் அடியேன் உடலை ஒடுக்கிப் படுத்திருந்தேன். பின்னர் பூதத்தார் வந்தார். நாங்கள் இருவரும் உட்கார முடிந்தது. இப்போது தாங்கள் வந்துள்ளீர்கள். மூவரும் இருள் நீங்கிப் பொழுது புலரும் வரை நின்று கொண்டிருப்போம்' என்று கூறினார். மூவரும், உலகளந்த பெருமாளின் திருவடிச் சிறப்பைப் போற்றியவாறு நின்றுகொண்டிருந்தனர்.
திடீரென்று அவர்கள் தங்களுக்கிடையே மேலும் யாரோ ஒருவர் புதிதாக வந்து விட்டதுபோல் உ உணர்ந்தனர். இடம் சிறிதும் இல்லை என்பதால் அவர்களுக்கு மூச்சுவிட முடியவில்லை. திருக்கோவலூர் பெருமானே பிராட்டியுடன் வந்து நின்றதால்தான் இவர்கள் நெருக்கப்பட்டனர். இதை அறியாத அவர்கள், 'இங்குப் புதிதாக வந்தவர் யார்? யார் இப்படி நெருக்குவது?' என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர். இருளில் எதுவும் தென்படவில்லை.
அப்பொழுது பொய்கை ஆழ்வார் புறஇருள் நீங்கவேண்டும் என்று திருமாலிடம் வேண்டி முதல் திருவந்தாதியைப் பாட முற்பட்டு பின்வரும் முதல் பாசுரத்தைப் பாடினார்.
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக-செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று.
பூதத்தாழ்வார் இறைவனைக் காணத் தடையாக இருக்கும் அகஇருள் விலகுவதற்காக, ஞானம் என்னும் அக விளக்கு ஏற்றுவதற்காக பின்வரும் இரண்டாம் திருவந்தாதி முதற் பாசுரத்தைப் பாடினார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா-நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
இவ்வாறு இந்த இரண்டு விளக்குகளாலும் அக இருளும் புற இருளும் விலகின. அவர்களுக்குத் திருமாலின் காட்சி கிடைத்தது. அப்போது மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வார், அவர்கள் பெற்ற காட்சியை விவரித்துப் பின்வரும் மூன்றாம் திருவந்தாதிப் பாடலைப் பாடினார்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன் பால் இன்று.
அப்போது திருமால் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் முதலிய ஐந்து ஆயுதங்களைக் கைகளில் கொண்டு, ஸ்ரீலட்சுமி தேவியுடன் சோதி வடிவமாகக் காட்சி அளித்து, 'எமது பக்தர்களாகிய உங்கள் மூவரையும் சேர்த்து வைக்கவே இப்படிச் செய்தோம்' என்று கூறி மறைந்தார்.
முதலாழ்வார் மூவரும் பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்றனர். பின்னர் திருமழிசைக்குச் சென்று திருமழிசை ஆழ்வாரைக் கண்டு எம்பெருமானின் கல்யாண குணங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.
அவர்கள் மூவரும் யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து முடிவில் திருக்கோவலூரை அடைந்து அங்கு பரமபதம் எய்தினர்.
மற்ற ஆழ்வார்களுக்கு முன் அவதரித்து அவர்களுக்கு வழிகாட்டியாக திவ்யப் பிரபந்தங்களை முதலில் அருளியதால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று போற்றப் படுகிறார்கள். இந்த மூன்று யோகிகளும் பாலேய் தமிழர் என்று வழங்கப் பெறும் நற்றமிழர் ஆவர். இந்த முதலாழ்வார்கள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!
ஆழ்வார் அருளிய பாசுரம்
🌼🌼🌼🌼🌼🌼🌼
உய்த்துணர்வு என்னும் ஒளிகொள் விளக்கேற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் - மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என்நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து.
பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி, 94)
அப்பிள்ளை இயற்றிய வாழித் திருநாமம்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
செய்ய துலா ஓணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையம் தகளி நூறும் வருந்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன் முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே !
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் !
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக் கடன்மல்லை நாதனார் வாழியே இன்புருகு சிந்தைதிரி இட்ட பிரான் வாழியே
எழில்ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே.
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம் !
திருக்கண்டேன் எனும் நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே.
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!
பகவன் நாமமே பலம் நாமமே முக்திக்கு சாதனம்
ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment