Monday, November 24, 2025

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள்.

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள் !   சித்தர் திருமூலருக்குச் சிஷ்யனாக இருந்தவர்தான் காலங்கிநாதர் என அழைக்கப்பட்ட கஞ்சமலை சித்தர்.
 தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை பல பிரசித்தி பெற்ற கோயில்கள், சித்தர்கள் சித்தியடைந்த தலமாக இருக்கின்றன. ஆனால், சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு சித்தர்கோயிலுக்கு உள்ளது.

 கஞ்சமலை சித்தர் கோவில் கட்டிய மன்னர் தாரமங்கலமத்தை ஆட்சி செய்த மன்னர் ( பூவாணிய நாடு ) கெட்டிமுதலி மன்னர் ஆவார். இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும். இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.

 மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர்.

 இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். அமாவாசை கோயில் என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.

 மிகுந்த மூலிகை வளம் கொண்டது கஞ்சமலை.  

 தங்கம், இரும்பு, தாமரை ஆகியவற்றின் பெயர் கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. 

 நான் மலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 20 மாணவர்கள் இந்த மலைக்கு வந்திருந்தார்கள். 

 அனைவரது கையிலும் சுத்தி வைத்துக் கொண்டு இந்த மலையில் கிடைக்கும் வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறம் போன்ற சிறிய கல்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

 நான் விசாரித்த பொழுது project சம்பந்தமாக வந்துள்ளோம் என்று சொன்னார்கள் நான் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது. ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1 சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

 சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ள.

 இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை இராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

 இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். 

 மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். இராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப்படும் என்று அங்கு இருப்பவர்கள் சொன்னார்கள்.

 இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

 ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.

 சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று நம்பபடுகிறது.

இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. 

 சுமார் காலை 6:30 மணி அளவில் சித்தர் கோவில் இருந்து மலை உச்சிக்கு போவதற்கு பயணத்தை தொடங்கலாம். 

மலை அடிவாரத்தில் அங்கு ஒரு சிறிய ஓலை குடிசையில் மேற்கு திசையை நோக்கி சிவருமான் லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அங்கிருந்து தான் மலை உச்சிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் தொடங்குகிறது. ஆனால் கொஞ்ச தூரம் தான் அந்தப் படிக்கட்டுகள் உள்ளது அதிலும் பாதி சேதமடைந்து விட்டது. 
 அடிவாரத்திலிருந்து மலை உச்சியை அடைவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் . போகும் வழியில் எங்கும் தண்ணீர் வசதிகள் கிடையாது. 

 அங்கங்கே சிறிய ஓடைகள் இரண்டு மூன்று தென்பட்டாலும் எதிலும் தண்ணீர் இல்லை. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது. 

 சதுரகிரி, பருவதமலை போன்ற மலைகளில் நமக்கு சில இடங்களில் கடினமான ஏற்றம் வரும் பின்பு சமமான பாதை வரும் ஆனால் இந்த மலையில் அதுபோன்ற ஏற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் சிறு ஏற்றம் சிறு இறக்கம் வந்து கொண்டே இருக்கும் பாதையானது மலையை சுற்றிப் போய்க் கொண்டே இருக்கும்.

 இரண்டு மணி நேரம் பயணங்களுக்கு பிறகு ஒரு வழியாக மலை உச்சியை அடையலாம் . அங்கு ஒரு சிறிய கோவிலில் 18 சித்தர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். 

 காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு. 

 திருமந்திரம் எழுதிய திருமூலரின் சீடர். இவர் இங்குள்ள மூலிகை மரபில் உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தனவின்படி இங்கேயே இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும். இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.

 இந்த இடத்தில் தான் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார். ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

 இன்றும் சித்தர்களின் அருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு மலை உச்சிக்கு வந்து முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மலை உச்சியில் வடக்கு புறத்தில் தியானமேடை போல ஒரு இடம் உள்ளது. இரவில் பல இடங்களினூடே 'விசுவிசு'-வென நுழைந்து வந்து அந்த இடத்தில் வீசும் காற்று, 'ஓம்' எனும் ஒலியோடு வெளியாகும். அந்த அனுபவம் கேட்டுணர்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

 அந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வைப்பிராட்டி கருநெல்லி மரத்திலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் கருநெல்லியை பறித்துச் சென்று தகடூரை ஆண்ட மன்னன் அதியமானுக்கு தந்தாக வரலாறு.

 அது விளைந்த இடமும் , இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்துதான் பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், அவரே குறிப்பிடுகிறார்.

சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். சுழுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது.

 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். நான் அடுத்த முறை இரவில் சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

 இத்தனை சக்திவாய்ந்த இந்த சித்தர் கோவிலை அனைவரும் வந்து தரிசிக்க வேண்டும்.

 சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் கோயில் திறந்திருக்கும். அமாவாசை நாளன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்தரை வழிபடுகின்றனர். பவுர்ணமி கிரிவலமும் உண்டு.

 சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும். 

 அமைவிடம்: சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...