Wednesday, June 16, 2021

Aadhinatha perumal



தினம் ஒரு திருத்தலம்... தண்ணீரை காய்ச்ச காய்ச்ச தோன்றிய விக்கிரகம்... குருதலம்.!!*

ஆதிநாத பெருமாள் கோவில் :

அமைவிடம் :

ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் இது 89வது திவ்ய தேசம். நவதிருப்பதியில் இது 5வது திருப்பதி. இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். நவகிரகத்தில் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.

மாவட்டம் :

அருள்மிகு ஆதிநாத பெருமாள் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்.

எப்படி செல்வது?

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள இவ்வூருக்கு திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அடிக்கடி பேருந்துவசதி உள்ளது.

கோயில் சிறப்பு :

இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

'கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்" என்றொரு பழமொழி உண்டு.

ஐயாயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் காட்சியளிக்கிறது. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை.

நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்ச காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து 'நவதிருப்பதி" எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவகிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.

சங்குமோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.

கோயில் திருவிழா :

மாசிமாத உற்சவம், குரு பெயர்ச்சி, வைகாசி திருவிழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பிரார்த்தனை :

நவகிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

பிரசாதம் :

இக்கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் வங்கார தோசை மிகவும் பிரசித்தி பெற்றது.

💫🌷🌷

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...