Friday, June 18, 2021

பெருமாளின் பஞ்சரங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

இன்றைய கோபுர தரிசனம் 
கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 108 திவ்யதேசங்கள் - பதிவு 6 

பெருமாளின் பஞ்சரங்கத் தலங்களில் இது மூன்றாவது தலம்.

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோவில் - 
கோவிலடி (எ) திருப்போர்.

மூலவர்: அப்பக்குடத்தான்

தாயார்: இந்திராதேவி, கமலவல்லி 

உற்சவர்: அப்பால் ரங்கநாதர்

கோலம்: சயனத் திருக்கோலம்

விமானம்: இந்திர விமானம்

தீர்த்தம்: இந்திர தீர்த்தம்

மங்களாசாசனம்: பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்.

நாமாவளி: ஸ்ரீ கமலவல்லீ (இந்திராதேவி) சமேத அப்பக்குடத்தான் ஸ்வாமிநே நமஹ

ஊர்: கோவிலடி என்ற திருப்போர் நகர்

 தலவரலாறு:-

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். 
ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும்

ஒருமுறை உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானான்.  சாபவிமோசனம் கேட்டு துர்வாச முனிவரிடம் வேண்டிய போது பலாசவனத்தில் இருந்த இத்திருக்கோவிலில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் சாப நிவர்த்தியாகும் என்று சாபவிமோசனம் அளித்தார்.

எனவே, மன்னன் இவ்வூரிலேயே தங்கி சாபவிமோசனம் பெற தினமும் அன்னதானம் செய்து வந்தான்.  அவனது தொண்டிற்கு மனம் மகிழ்ந்த "அரங்கநாதப் பெருமாள்" வயதான அந்தணர் வேடத்தில் வந்து உணவு வேண்டும் என்று யாசித்தார்.

அதற்கு உபமன்யு சமைத்த உணவெல்லாம் தீர்ந்து விட்டதால் உடனே உணவு தயாரிக்கும் வரை பொறுத்திருக்குமாறு வேண்டினான்.

அதற்கு இறைவன் அச்சமயத்தில் உலை வைத்து சமைத்தால் அதிக நேரம் ஆகும். எனக்குப் பசிக்கிறது.  எனவே, எளிமையாக அப்பம் செய்து தயாரித்து "ஒரு குடம் நிறைய கொடு" என்றும், வயதான அந்தணராண பெருமாள் யாசித்தார்.

எளிய முறையில் அப்பம் உடனே தயாரிக்கப்பட்டு குடம் நிறைய அப்பம் முதியவருக்குத் தரப்பட்டது.  எனவே, சூழ்நிலை இல்லாத சமயத்திலும் தன் பக்தி நிலையிலும் வழுவாமல் நின்ற உபமன்யுவின் பக்திக்கு மனமகிழ்ந்து போனார் அனந்த மூர்த்தியான அரங்கநாதப் பெருமாள்.

அந்தணர் அரங்கநாதராகக் காட்சி தந்து உபமன்யுவிற்கு சாபவிமோசனம் அளித்தார். அன்று முதல் இத்தல பெருமானுக்கு அப்பம் தான் சிறப்பு நிவேதனமாக படைக்கப்படுகிறது.  

இதனால், இத்தல பெருமானுக்கு "அப்பக்குடத்தான்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.  இத்தலம் திருவரங்கத்திற்கு அப்பால் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளதால் "அப்பால் அரங்கநாதர்" என்ற திருநாமம் பெற்றார்.

பெருமாள் காவிரி - கொள்ளிடம் ஆற்றிற்கு நடுவே மேற்கு நோக்கிக் காட்சி தருவது சிறப்பாகும். தாயாருக்கு "கமலவல்லீ" என்பது திருநாமம்.

 மூலவர்   :-

பெருமாள் மேற்கு நோக்கிய திசையில், புஜங்க சயனத்தில் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் இருப்பது சிறப்பு. இப்பெருமாள் பாதங்களில் கொலுசு, கட்டை விரல், நடுவிரல், சுண்டு விரல்களில் மெட்டி அணிந்து மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 சிறப்புகள் :-

அப்பம் செய்து படைக்கப்படும் ஒரே திவ்யதேசம்.   நம்மாழ்வார் முக்தியடைந்த தலம்.  

108 திருப்பதிகளுள் இரவில் அப்பம் செய்து படைக்கப்படும் ஒரே தலம்.

திருமகள் கமலவல்லீ என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
நான்கு ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசம்.

 இந்திரன் வழிபட்ட தலம் :-

இந்திரன் அப்பக்குடத்தாற் பெருமாளை வழிபட்டு சாபம் நீங்கிய தலம்.  அதனால் தான் இத்திருக்கோவிலின் விமானம் "இந்திர விமானம்",  தீர்த்தத்தின் பெயர் "இந்திர புஷ்கரணி", தாயார் பெயர் "இந்திரமா தேவி".

 கோவிலடி :-

திருப்பேர் நகர் எனும் கோவிலடி மிகவும் பழமை வாய்ந்தது.  திருவரங்கம் கோவிலுக்கு ஆதியாக அடியெடுத்தோக் கொடுத்த தலம் என்பதால் "கோவிலடி" என்று பெயர் பெற்றது.

 பாசுரங்கள் :-

பெரியாழ்வார் - 2,  நம்மாழ்வார் - 11, திருமழிசை ஆழ்வார் - 1, திருமங்கை ஆழ்வார் - 19 என மொத்தம் 33 பாசுரங்கள் இத்தல இறைவனைப் பற்றிப் பாடியுள்ளனர்.

 வழித்தடம் :-

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 10 கி.மீ தொலைவில் கல்லணை செல்லும் சாலையில் உள்ளது. 

 நாளைய பதிவில் :-

அருள்மிகு அரசாப விமோசன பெருமாள் திருக்கோவில் - திருக்கண்டியூர் திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.

"ஒம் நமோ நாராயணாய நமஹ" 

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே   

ராமானுச நூற்றந்தாதி

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...