Friday, August 26, 2022

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

இதைவிடச் சுருக்கமாக மகாபாரதம் சொல்ல முடியுமா?  இது, என் மனதை தொட்ட ஒரு பதிவு
 
பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? 
 
பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாகக் கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். 
 
‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட இரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? 
 
கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்குப் பார்த்தசாரதியாகத் தேர் ஒட்டினாரா?’  
 
பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. 
 
அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், 
 
“உன்னால் ஒரு போதும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். 
 
புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே 
காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது. 
 
“குருக்ஷேத்திரப்  போரைப்  பற்றித் தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்தப்  போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்து கொள்ளாமல் நீ அந்தப்  போரை அறிந்து கொள்ளமுடியாது.” 
 
“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண். 
 
“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம்.  
 
அதைத் தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்

அந்தக் காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார். 
 
“அது என்ன தத்துவம் ஐயா?  
 
எனக்குக் கொஞ்சம் விளக்குங்களேன்…” 
 
“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்” 
 
“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!  
 
கௌரவர்கள் யார் தெரியுமா?” 
 
“இந்த ஐந்துபுலன்களைத் தினந்தோறும் தாக்கித் தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்!!!” 
 
“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா? 
 
“முடியும்…! எப்போது தெரியுமா?” 
 
வருண் மலங்க மலங்க விழித்தான். 
 
“கிருஷ்ண பரமாத்மா உன் தேரைச் செலுத்துவதன் மூலம்.” 
 
வருண் சற்றுப் பெருமூச்சு விட்டான். 
 
பெரியவர் தொடர்ந்தார். 
 
“கிருஷ்ணர் தான் உன் மனச்சாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.” 
 
வருண் பெரியவர் சொல்வதைக் கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்குத் தோன்றியது. 
 
“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காகப் போரிடுகிறார்கள்?” 
 
“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.  
 
நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படிக் கிடையாது. 
 
அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய். 
 
எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்குத் தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.” 
 
“மேலும் அவர்கள் உன் நன்மைக்காகப் போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.  
 
இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.  
 
கீதையின் பாடமும் இது தான்.” 
 
வருண் உடனே மண்டியிட்டுத் தரையில் அமர்ந்தான்.  
 
களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால். 
 
“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது. 
 
“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே. 
 
உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். 
 
ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.” 
 
“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்குத் துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?” 
 
வருண் “ஆம்…” என்பது போலத் தலையசைத்தான். 
 
இப்போது தரையைப் பார்த்தான். 
 
அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கித் தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.  
 
அந்த காவிப்பெரியவரைக் காணவில்லை. 
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார். 
 
மிகப் பெரிய உண்மை.

💐💐🙏🙏 
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல
யோசிக்க வைத்ததும் கூட 🙏

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...