மூன்று கருட சேவை.. சூரிய தலம்..!!
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்...!!
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி என்னும் ஊரில் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சென்னையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் பூந்தமல்லி என்னும் ஊர் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல வரதராஜப்பெருமாளின் தலைக்கு பின்புறம் சூரிய பகவான் அருள்வதால் இது சூரிய தலமாகக் கருதப்படுகிறது. இவர் புண்ணிய கோடி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான இங்கு திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன.
இக்கோயிலில் மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடப்பது சிறப்பம்சமாகும். அந்த பிரம்மோற்சவத்தின் போது அவர்கள் மூவரும் திருக்கச்சி நம்பிகளுக்கு கருட சேவை காட்சி தருவர்.
பொதுவாக மற்ற கோயில்களில் ஒரு கருட சேவை மட்டும் நடைபெறும். இக்கோயிலில் மூன்று கருட சேவைகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார்.
ஆனி மாத மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று 108 கலச பூஜை செய்து வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சி நம்பிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும்.
வேறென்ன சிறப்பு?
இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்ததால் இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள்.
இக்கோயிலில் புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகின்றனர். இந்த தாயாருக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின் போது புஷ்ப யாகம் நடப்பது சிறப்பம்சமாகும்.
இவ்விழாவின் போது சுவாமி பள்ளியறையில் சயன கோலத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவார்.
இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி என ஆகிவிட்டது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடியில் திருநட்சத்திர விழா மற்றும் வைகாசியில் பிரம்மோற்சவம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்தும், திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
No comments:
Post a Comment