Sunday, September 25, 2022

. காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற இடத்தில் சிவன் கோவில்.

இரண்டு தலைகளுடன் பசு.. 63 நாயன்மார்கள்..!!
                அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்...!!


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி என்னும் ஊரில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

ஈரோட்டில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் பவானி என்னும் ஊர் உள்ளது. பவானியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. காவிரியுடன், பவானி மற்றும் அமுதநதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன.

மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலம், தென் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. எனவே இத்தல இறைவன் சங்கமேஸ்வரர் எனப்படுகிறார்.

இக்கோயிலில் பெருமாள் ஆதிகேசவப்பெருமாள் என்ற திருநாமத்துடனும், தாயார் சௌந்திரவல்லி என்ற திருநாமத்துடனும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலத்தில் வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன் பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு பசு ஒரே உடல், இரண்டு தலைகளுடன் காட்சியளிப்பது இத்தலத்தின் வித்தியாசமான அமைப்பாகும்.

இத்தல விநாயகர் சங்கம விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றார்

இக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதி மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கோயிலில் உள்ள அமுதலிங்கம் மிகவும் சிறப்புடையதாகும்.

வேறென்ன சிறப்பு?

இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இறைவியின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


இறைவியின் சன்னதிக்கு வலப்பக்கம் சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

மாந்தி (சனி மகன்) கிரகத்தின் ரூபத்தில் சனி பகவான் தனிச்சன்னதியில் உள்ளார்.

இத்தல ஜ்வரஹரேஸ்வரர் தனிச்சன்னதியில் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காட்சி தருகிறார்.

இக்கோயிலின் தென்பக்கம் 63 நாயன்மார்களின் திரு உருவங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இங்கு ஆடிப்பதினெட்டில் நீராடுவதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்

சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, ஆடி அமாவாசை, சித்திரையில் 13 நாட்கள் திருவிழா போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர்

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும், அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

அடிக்கடி காய்ச்சல், தோல் வியாதி மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...