Saturday, November 12, 2022

அருள்மிகு சங்கர நாராயணர் கோயில்,சங்கரன் கோவில்,தென்காசி மாவட்டம்

அருள்மிகு சங்கர நாராயணர் கோயில்,சங்கரன் கோவில்,தென்காசி மாவட்டம்.🙏🙏🙏
உக்கிர பாண்டியன் என்னும் மன்னரால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022.  இறைவன் சங்கரலிங்கசுவாமி. கோமதி அம்மன்என்ற ஆவுடையம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம்.இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி.
இக்கோயிலில் சிவன் மற்றும் நாராயாணர் பாதிப்பாதி உருவமாக காட்சி அளிப்பது சிறப்பாகும்.

சங்கர நாராயணராக காட்சி தந்து கோவில் கொண்டு அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும்( ஒரே உருவில் வலப்பக்கம் சிவனாகவும் இடப்பக்கம்
நாராயணனாகவும்) , மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாகவும் வீற்றுள்ளனர்

கடவுளர்கள் அனைவரும்  ஒருவரே என்று உணர்த்தப்பட்ட தலம் இது. இந்துப் புராணங்களின்படி,  சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் , பதுமன் தனது விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். 

சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது.

நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். 
பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம்  ஆகும்.

மணிக்ரீவன் என்ற தேவர் பார்வதி தேவியின் சாபத்தால்  புன்னைவனக் காவலனாக இருந்தார். அதனால் அவர் காப்பறையர் என்றும், காவற் பறையர் என்றும் பெயர் பெற்றார். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவர் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவர் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டார்.

காவற்பறையர் ஓடி வந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தார். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும்,வாலிலழந்த பாம்பையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆணைதர,உக்கிரபாண்டிய மன்னர் 947 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை கட்டிச் சங்கரன்கோவில் ஊரையும் தோற்றுவித்தார்.

சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய ராஜ கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது நிலை கொண்ட கோபுரமாகும்.கோபுரத்தைத் தாண்டியதும்  காவற்பறையருடைய திருவுருவத்தை ஒரு தூணில்  இப்போதும் காணலாம்.

ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய்  புன்னை வனத்தில் பார்வதி தேவிக்கும்  நாகர்களுக்கும் காட்சி தந்த தலம் இது.

தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 பிரதான சக்தி பீட இடங்களில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி,  விழுந்த பகுதிதான் ஸ்ரீ கோமதி அம்மன் – மஹா யோகினி சக்தி பீடம் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும்.

பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை அம்பாள் காலடிகளில் தான் இருக்கும். ஆனால் இங்கு கோமதி அம்மன் சன்னிதி முன் பெரிதாக சக்கரம் உள்ளது. பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம்.

 கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும். மருத்துவ குணமுடைய இந்த புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். இந்த புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும். வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது. , செல்வம் செழிக்கும் .

இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும். நாக சுனையில் எப்பேற்பட்ட பாவங்கள் செய்தவர்களும் மூழ்கி எழுந்தால் நற்கதியடையலாம்.

சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும். இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக் கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும்.

 கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கல பொருட்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்களையும்  மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளில் ஆடித் தபசு விழா கொண்டாடப்படுகிறது.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் 8 மணிவரை நடை திறந்திருக்கும்.

இந்த கோவில் செல்ல திருநெல்வேலி புது பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் உண்டு. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டரில் இந்த கோவில் உள்ளது. கோவில் பட்டியில் இருந்து கழுகுமலை வழியாகவும் சங்கரன்கோயிலை அடையலாம். ராஜபாளையம் மற்றும் தென்காசியில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு பாதை உள்ளது.


No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...