Friday, December 9, 2022

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும்.

#திருக்குவளை என்னும் #திருக்கோளிலி
#பிரம்மபுரீஸ்வரர்
#வண்டமர்_பூங்குழலம்மை
திருக்கோயில்
இக்கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது. 

மூலவர்:பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்
அம்மன்/தாயார்:வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை
தல விருட்சம்:தேத்தா மரம், தேற்கு மரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை :காரண ஆகமம்
புராண பெயர்:திருக்கோளிலி, திருக்குவளை
ஊர்:திருக்குவளை
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:

பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவும் கங்கையும் திங்களும் ஒண்சடை குவினான் குளிரும் பொழில் கோளிலி நிலவினான் தனை நித்தல் நினைமினே.

___திருநாவுக்கரசர்

தல சிறப்பு:

இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 187 வது தேவாரத்தலம் ஆகும். 

தலபெருமை:

சப்தவிடத்தலங்கள்: டங்கம்’ என்றால் “கல் சிற்பியின் சிற்றுளி’ என்று அர்த்தம். “விடங்கம்’ என்றால் “சிற்பியின் உளி இல்லாமல்’ என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்’ தானே உருவான இயற்கை வடிவங்களை “சுயம்பு’ அல்லது “விடங்கம்’ என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 லிங்கங்கள் சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன. ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்? என இந்திரன் கேட்க,””தாங்கள் பூஜை செய்து வரும் “விடங்க லிங்கத்தை’ பரிசாக தாருங்கள்” என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த லிங்கத்தை தர மனதில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே6 லிங்கங்களை செய்து அவற்றை தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் “செங்கழுநீர் பூவின் வாசம் உடைய’ உண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார். 

இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற லிங்கங்களையும் முசுகுந்தனுக்கு பரிசாக தந்து விடுகிறார். ஏழு லிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடத்தலங்கள் எனப்பட்டன.அவை திருவாரூரில் “வீதி விடங்கர்’, திருநள்ளாறில் “நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில் “சுந்தர விடங்கள்’, திருக்குவளையில் “அவனி விடங்கர்’, திருவாய்மூரில் “நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில் “புவனி விடங்கர்’, திருக்காரவாசலில் “ஆதி விடங்கர்’ என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் “வண்டு நடனம்’ ஆடி தரிசனம் தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் “திருக்குவளை’ ஆனது. சுவாமி, அம்மன் சன்னதி இரண்டும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களில் பீமன் பகாசூரனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தலத்தில் நீங்கியது. சுந்தரர் குண்டையூர் எனும் தலத்தில் பெற்ற நெல்மலையை திருவாரூர் பரவையாளர் மாளிகைக்கு கொண்டு செல்வதற்காக ஆள் வேண்டி இத்தலத்தில் பதிகம் பாடினார். பிரம்மா, தாமரைக்கண்ணன், வலாரி, அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகிரகங்கள், ஓமகாந்தன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தின் அருகே ஓடும் சந்திரநதி கங்கையைப்போல் புனிதமானது என புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு:

சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. எனவே பிரம்மா இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி மணலால் லிங்கம் அமைத்து இத்தலத்தில் பூஜை செய்து சாபம் நீங்க பெறுகிறார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நவகிரகங்களும் தங்களது தோஷம் நீங்கப்பெற்றன. இதனால் இத்தலம் “கோளிலி’ ஆனது. இங்கு நவகிரகங்கள் நேர்கோட்டில் இருப்பது மிகவும் சிறப்பு.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய aற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

சிறப்பு :

குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.
நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன. 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.

இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)

இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.

ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார். இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.

வழிபட்டோர் :

பிரமன், திருமால், முசுகுந்த சக்கரவர்த்தி,பஞ்ச பாண்டவர்கள், அகத்தியர், நவக்கிரகங்கள்

ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்🙏

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...