Friday, December 9, 2022

_மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்_

_மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்_


தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம். 

மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும். 

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்

முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன. 

இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். 

அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். 

ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியைத் தளர்த்த வேண்டினார்கள்.

ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.

மரகத லிங்கத்தின் வரலாறு :

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். 

இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.

இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். 

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது).

அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்.  அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். 

தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். 

மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.

ஓம் நமச்சிவாய.!

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...