#சிதம்பரம்
#நடராஜர்கோவில்
#திருவாதிரை
இன்று மார்கழி திருவாதிரை திருவிழாவின் தொடக்கநாள். சிதம்பரம் நடராஜாக் கோவிலில் கொடியேத்தம் என்றழைக்கப்படும் துவஜாரோஹனம் காலை நடந்தது. சிவன் கோவில்களில் ரிஷபக் கொடி ஏற்றப்படும்.
முதல் நாள் கொடியேத்தத்துடன் தொடர்புடைய "கொடிக்கவி" பற்றி பார்ப்போம். சைவ சித்தாந்த நூல்கள் மொத்தம் பதினான்கு. அவற்றை மெய்கண்ட சாத்திரங்கள் என்றே அழைப்பர்.
" கொடிக்கவி" மொத்தம் நான்கு வெண்பாக்களை மட்டும் கொண்ட சிறிய நூலாகும். இது சாஸ்திரங்களில் பதினொன்றாவதாகக் கருதப் படுகிறது.
சந்தானக் குரவர்களில் நான்காவதாக வருபவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். அவர் நூல்கள் பல கற்று, வேதம் பயின்று ஒழுக்கமான வைதீக வாழ்க்கை வாழ்ந்ததால் பல்லக்கில் போகவும் பகலில் தீவட்டி ஏந்தும் ஆட்கள் வைக்கவும் அதிகாரம் பெற்றிருந்தார். அவ்வாறு அவர் செல்லும் போது மறைஞானசமபந்தர் அதை பார்த்து " பட்டக் கட்டையில் பகல் குருடு காண்" என்றார்.பல்லக்கே பட்டக்கட்டை ஆனது, பகலில் தீவட்டி பிடித்ததால் அவர் பகற்குருடு ஆனார்.
இதை கேட்ட உமாபதி சிவம் பக்குவமடைந்த ஆத்மா ஆதலால் அந்த நொடி ஞானம் கைவரப் பெற்று, மறைஞானசம்பந்தரை குருவாக ஏற்று அவர் பாதம் பணிந்தார்.
ஒருமுறை மறைஞானசம்பந்தர் நெசவு செய்தவர்களிடமிருந்து, துணிக்குப் போட வைத்திருந்த கஞ்சியை கைகளில் வாங்கி குடிக்கும் போது, முழங்கையில் வழிந்த கஞ்சியை உமாபதி சிவம் பிரசாதமாக உண்டார். ஆதலால் தீட்சிதர்கள் உமாபதி சிவத்தை ஜாதியிலிருந்து தள்ளி வைத்தனர். அவர் கொற்றவன்குடியில் மடம் அமைத்து தங்கினார்.
இச்சம்பவத்தில் பின் வந்த திருவாதிரை திருவிழாவின் முதல்நாள் கொடியேத்தத்தின் போது கொடி ஏறவில்லை. அப்பொழுது ஒரு அசரீரி உமாபதி சிவத்தை அழைத்து கொடியேத்த செய்யுமாறு கூறியது.அவ்வாறே அவரை அழைத்து வந்தனர்.அவரும்,
"ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ...."
என்னும் பாடலைப் பாடி கொடியேத்த கொடியும் ஏறியது. மேலும் மூன்றுப் பாடல்களைப் பாட அதுவே கொடிக்கவி என்னும் நூலாக வைக்கப் பட்டது. சிறிய நூலென்றாலும் சைவ சித்தாந்தக் கருத்துகளை தன்னுள் அடக்கி நூலாகும்.
இது நடந்தது பதினான்காம் நூற்றாண்டில்.
No comments:
Post a Comment