Monday, December 5, 2022

பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும்

#திரு_பட்டீஸ்வரம்
#தேனுபுரீஸ்வரர்
#ஞானாம்பிகை
#துர்க்காம்பிகை
திருக்கோயில்
பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23ஆவது சிவத்தலமாகும்.

மூலவர்:பட்டீசுவரர்
அம்மன்/தாயார்:பல்வளைநாயகி, ஞானாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:ஞானவாவி
புராண பெயர்:மழபாடி, பட்டீஸ்வரம், பட்டீச்சுரம்
ஊர்:பட்டீஸ்வரம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் துறவியெனும் உள்ளமுடை யார்கள் கொடி வீழியழ காயதொகுசீர் இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலாய் நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவரே.

தல சிறப்பு:

பட்டிக்கன்று மணலினால் ஓர் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அளித்து முத்துப்பந்தல் நிழலில் வரும் அழகைக்காண நந்தியை விலகி இருக்கும்படி பணித்த தலம். இங்கு துர்க்கை சாந்த சொரூபியாக , மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன்,இடப்புறம் நோக்கிய சிம்ம வாகனத்துடன் அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.விசுவாமித்திர முனிவருக்கு காயத்திரி மந்திரம் சித்தி பெற்று பிரம்மரிஷி பட்டம் பெற்றதும் இத்தலத்தில் தான் என்கின்றனர். மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி , நவராத்திரி எனவும் போற்றப்படுகிறாள்.

தலபெருமை:

மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள் அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட அம்பிகை இவளே. ஒரு நூற்றாண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தின் வடபுறம் அமைந்திருந்த சோழன் மாளிகையில் சோழ மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வமாக அருள் பாலித்து வந்த தெய்வம். அரண்மனையின் வாயில்களில் முறையே விநாயகரும் முருகரும் பைரவரும் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த தேவியின் அருள் வாக்கு பெற்ற பின்னரே செயல்படுவர்.

சோழ ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த பின்னர் துர்க்கையம்மனை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த துர்க்கை மற்ற தலங்களில் இருப்பது போல் அல்லாமல் சாந்த சொரூபியாக இருக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்மவாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும்.ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள்பாலிக்கிறாள்.

*திருஞான சம்பந்தர் முத்துப்பந்தல் பெற்றது: திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் தோறும் சென்று வழிபட்டு வரும் நேரத்தில் திருச்சத்திமுற்றத்தில் வழிபட்ட பின் இத்தலத்துக்கு வந்தார்.அப்போது வெயில் காலமாதலால் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்தன.

வெயிலின் கொடிய வெப்பத்தை தணிக்க இத்தலத்து பட்டீசர் பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார். ஞானசம்பந்தர் இறைவன் அருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலில் வந்தார். ஞானசம்பந்தர் நடந்து வந்த அழகிய காட்சியை காணவும், திருஞானசம்பந்தர் தன்னை தரிசிக்கவும் பெருமான் நந்தி தேவரை விலகி இருக்க கட்டளையிட்டார். நந்தியும் விலகியது.

ஞானசம்பந்தர் பரவசத்தில் இறைவனை வணங்கி ஆனந்தப்பெருவெள்ளத்தில் பாடல் மறை எனத்தொடங்கும் பாமாலையை பாடி தலத்தில் தங்கினார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டு தோறும் ஆனிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

* காமதேனுப்பசுவின் புத்திரி பட்டி பூசித்ததால் பட்டீச்சரம் என்று பெயர் ஏற்பட்டது.

*ராமருக்கு சாயகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம்.

*பராசக்தியே தவம் செய்து வழிபட்ட தலம்.

*மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞான வாவியின் துளி பட்டமையால் சாபம் நீங்கப் பெற்றது இத்தலத்தில்தான்.

துர்க்கையம்மன் மிகவும் சக்தியுள்ள தேவதையாய் விளங்குவதால் வெளியிடங்களிலிருந்தும் பலர் தங்கள் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.

*நாயக்கர் கால கலை அம்சம் பொருந்தியகோயில் இது.

*மராட்டியர் கால ஓவியங்கள் கோயிலில் காணப்படுகின்றன.

*மிகவும் பழமையான கோயில் இது.

தல வரலாறு:

பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள் மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள் செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக் கபர்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்க விரும்பி மணலினால் ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது. தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக் கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய் அமர்ந்தருளினார். பட்டிக்கன்று வழிபட்டதால் இவ்வூருக்கு பட்டீச்சரம் என்றும் பெருமானுக்குப் பட்டீச்சரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

வரலாற்றுத் தொடர்பு :

பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி எப்படி குலதெய்வமாக விளங்கினாளோ அவ்வாறே சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசி தேவியாரும், ராஜராஜ சோழனுக்கு மதியூகி ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியாரும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...