Friday, December 9, 2022

ஹனுமன் கூறியபடி அந்த எட்டு சித்திகளையும் அடியார்களுக்கு அருள்வதால், திருமால் ‘ஸித்தித:’ என்றழைக்கப்படுகிறார்

ஜெய் ஸ்ரீராம் 🙏🏻🙏🏻
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்தது. 

பின், ஒருநாள் அரண்மனையில் உள்ள தனது அறைக்கு ஹனுமனை அழைத்த ஸ்ரீராமன், “ஹனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! 

இலங்கையில் நீ செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினார். 

அப்போது இடையே குறுக்கிட்ட சீதை, “ஸ்வாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? 

உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும் தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்திருக்கிறதல்லவா ? 

அதுபோலத் தான் ஹனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். 

பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. 

அதன் அரங்கேற்றத்தின் போது தான் இலங்கையில் ஹனுமன் செய்த சாகசங்களை நீங்கள் கேட்டறிய இயலும்!” என்றாள் சீதை.

“அவ்வளவு நாட்கள் என்னால் காத்திருக்க இயலாதே!” என்றான் ஸ்ரீராமன். 

“ஸ்வாமி! ஹனுமனின் வீர தீரச் சாகசங்களை அசோக வனத்திலிருந்த எனது தோழிகளான சரமாவும், திரிஜடையும் கூற நானும் கேட்டிருக்கிறேன். 

நானும் சிலவற்றைக் கண்ணால் பார்த்திருக்கிறேன். 

அவற்றை எல்லாம் ஒன்று விடாமல் பட்டியலிட்டு நானே உங்களுக்குச் சொல்கிறேன். 

ஆனால் இங்கு அயோத்தி அரண்மனையில் அவற்றைச் சொல்வது சரியாக இருக்காது. 

காவிரிக் கரையிலுள்ள ஏகாந்தமான ஸ்தலமாகிய வடுவூருக்குச் சென்று விடுவோம். 

அங்கே நான் அனுமனின் மேன்மையைச் சொல்ல, நீங்கள் புன்னகையோடு அவற்றைக் கேளுங்கள்!” என்றாள் சீதை.

அதனால் சீதையையும் லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வடுவூருக்கு எழுந்தருளினான் ராமன். 

ஹனுமனும் அங்கு வந்து ஸ்ரீராமன் முன்னே கைகூப்பியபடி நின்று கொண்டான். 

அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம் ஆகிய எட்டு மகா சித்திகளையும் பயன்படுத்தி அரக்கர்களை அனுமன் எதிர்கொண்ட விதத்தைப் பற்றிச் சீதை கூற, அதை ஹனுமனும் கேட்டான். 

அப்போது லக்ஷ்மணன், “ஹனுமனே! தற்பெருமை பேசுவது உனக்குப் பிடிக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். 

ஆனால் இப்போது உன் பெருமைகளைக் கேட்க நீயே வந்து விட்டாயே!” என்று கேட்டான்.

 “இலங்கையில் நான் எட்டு மகா சித்திகளைப் பயன்படுத்திப் பல சாகசங்களை நிகழ்த்தியதாக அன்னை சீதா தேவி சொல்கிறார். 

ஆனால் அந்த எட்டு சித்திகளையும் அடியேனுக்குத் தந்தது ஸ்ரீராமனின் பரிபூர்ண அருளும் ஸ்ரீராம நாமமுமே ஆகும். 

எனவே, அந்த சித்திகளைப் பயன்படுத்தி நான் நிகழ்த்திய சாகசங்களில் எதுவுமே எனது பெருமையைப் பறைசாற்றாது. 

அந்த சித்திகளை எனக்கு அருளிய ராமனின் பெருமையையே பறைசாற்றும். என் பிரபுவின் பெருமைகள் பேசப்படும் இடத்தில் நான் இல்லாமல் இருப்பேனா? 

அதனால் தான் இங்கே ஓடி வந்து விட்டேன்!” என்று சொல்லின் செல்வனான அனுமன் விடையளித்தான். 

இன்றும் வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோவிலில் ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் நால்வரும் முகத்தில் முறுவலோடு தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

(எட்டு விதமான அமானுஷ்ய திறமைகளை அஷ்ட மஹா ஸித்திகள் என்று சொல்வார்கள்)

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை கரிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

1. அணிமா - அணுவைப் போல் சிறிய தேகத்தை அடைதல்
2. மஹிமா - மலையைப் போல் பெரிதாகுதல்
3. லகிமா - காற்றைப் போல் லேசாக இருத்தல்
4. கரிமா - எடையை மலையளவு அதிகரித்தல்
5.  ப்ராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப்படுத்துதல்
6. ப்ராகாம்யம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்
7. ஈசித்வம் - அனைத்துலகிலும் ஆணையைச் செலுத்துதல்
8. வசித்வம்  அனைத்தையும் வசப்படுத்துதல்)

ஹனுமன் கூறியபடி அந்த எட்டு சித்திகளையும் அடியார்களுக்கு அருள்வதால், திருமால் ‘ஸித்தித:’ என்றழைக்கப்படுகிறார். ‘த’ என்றால் கொடுப்பவர் என்று பொருள். 

ஸித்தியைக் கொடுப்பவர் ‘ஸித்தித:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 255-வது திருநாமம்.“ஸித்திதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து விதமான
வெற்றிகளையும் ஸ்ரீமந் நாராயணன் தந்தருள்வார்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...