Monday, February 27, 2023

எட்டு குணங்களை உடையவன் :எட்டு குணங்களை உடைய இறைவனை வழிபடாதவர்களின் உடலில் ஐந்து பொறிகள் செயல்படக் கூடிய நிலையில் இருந்தும், அந்த பொறிகள் செயல்படுவதாக கருதப்பட மாட்டாது

#சைவ_சமயத்தில்_எட்டு
சிவபெருமான் விரும்பி அணிகின்ற மலர்கள் எட்டு. அவை...
1. புன்னை,
2. வெள்ளெருக்கு,
3. சண்பகம்,
4. நந்தியாவட்டை,
5. குவளை,
6. பாதிரி,
7. அலரி,
8. செந்தாமரை.
-------    ---------    --------
எட்டு மூர்த்தியாக (அட்ட மூர்த்தி) விளங்குபவன். அவை...
பூதங்கள் ஐந்து.
1. நிலம்,
2. நீர்,
3. தீ,
4. காற்று,
5. ஆகாயம்,
6. சூரியன்,
7. சந்திரன்,
8. ஆன்மா.
-------    ---------    --------
எட்டு மந்திரங்கள் :
1. ஓம் பவாய தேவாய நம ( பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவன்)
2. ஓம் சர்வாய தேவாய நம (அனைத்து தேவர்களுக்கும் தலைவன்)
3. ஓம் ஈசானாய தேவாய நம (அனைத்து தேவர்களையும் ஆள்பவன்)
4. ஓம் பசுபதே தேவாய நம (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்)
5. ஓம் ருத்ராய தேவாய நம (எவராலும் வெல்ல முடியாதவன்)
6. ஓம் உக்ராய தேவாய நம (அனைவரும் நடுங்கக்கூடிய தோற்றமும், வல்லமையும் கொண்டவன்)
7. ஓம் பீமாய தேவாய நம (மிகவும் அதிகமான வல்லமை படைத்தவன்)
8. ஓம் மஹதே தேவாய நம (அனைத்துத் தேவர்களிலும் உயர்ந்தவன்).
-------    ---------    --------
எட்டு குணங்களை உடையவன் :
எட்டு குணங்களை உடைய இறைவனை வழிபடாதவர்களின் உடலில் ஐந்து பொறிகள் செயல்படக் கூடிய நிலையில் இருந்தும், அந்த பொறிகள் செயல்படுவதாக கருதப்பட மாட்டாது என்பது வள்ளுவர் வாக்காகும்.

கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

இந்த குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் எட்டு குணங்களாக...
1. தன்வயத்தன் ஆதல்,
2. தூய உடம்பினனாக இருத்தல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல்,
6. பேரருள் உடைத்தல்,
7. முடிவில்லாத ஆற்றல் உடைமை,
8. வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். ஆகியவற்றை கூறுகின்றார்.

மேற்குறிப்பிட்ட இவைகளையே சிவபெருமானின் எட்டு குணங்களாக சைவ சித்தாந்தமும் கூறுகின்றது.
-------    ---------    --------
எட்டு வீரட்டான தலங்கள் :
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்டவை அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. அவை...

1. திருக்கண்டியூர் - பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழித்த தலம்

2. திருக்கோவலூர் - அந்தகாகரனை வதம் செய்த தலம்.

3. திருவதிகை - திரிபுரத்தை எரித்த இடம்.

4. திருப்பறியலூர் - தக்கன் தலையைத் தடிந்த தலம்.

5  திருவிற்குடி - சலந்தராசுரனை வதைத்த தலம்.

6. திருவழுவூர் - கஜமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்திய தலம்

7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்த தலம்.

8. திருக்கடவூர் - மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
-------    ---------    --------
மேலும் இவற்றிற்கு மகுடம் வைத்தாற்போன்று திருவாரூர் தலத்தில் பெருமான் தோன்றிய காலம் எப்போதோ என்று வியந்து அப்பர் சுவாமிகள் அருளிய "ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ" பதிகத்தின் ஒரு பாடலில் 9ம் பாடலில்...

புகை எட்டும் போக்கெட்டும் புலன்கள் எட்டும்
பூதலங்கள் எட்டும் பொழில்கள்  எட்டும் 
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல்
சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம்
சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே.

புகை எட்டும் 
போக்கெட்டும் 
புலன்கள் எட்டும்
பூதலங்கள் எட்டும் 
பொழில்கள்  எட்டும் 
கலை எட்டும் 
காப்பு எட்டும் 
காட்சி எட்டும் 
கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் 
நாள் எட்டும் 
நன்மை எட்டும் 
நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளோ என்று வியந்து பாடுகிறார். அவைகளை விரித்து காண்போம்.

புகை எட்டும் - உயிர் புகக் கூடிய எட்டு பிறவிகள்.
மிகு, நகு என்பவை ஐகாரம் பெற்று மிகை, நகை என வருதல்போல "புகு" என்பது ஐகாரம் பெற்று "புகை" என பயின்று வந்துள்ளது. 
பொதுவாக உயிர்கள் ஏழு வகையான பிறவிகளை எடுப்பதாக கூறுவர். ஆனால் இங்கே அப்பர் சுவாமிகள், ஏழு வகையான பிறப்புகள் அல்லாமல் நரகர் என்ற நிலையையும் ஒரு பிறப்பாக கருதி எட்டு பிறவிகள் என்று கூறுகின்றார்.
"நரகரைத் தேவுசெய்வானும்..." (4-4-2)

எட்டு பிறவிகளாவன - தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன.
-------    ---------    --------
போக்கு எட்டும் - போக்கு - குற்றம்.
எட்டு வகையான குற்றங்கள். அவை
1. அறியாமை,
2. மயக்கம்,
3. யான் என்கிற அகங்காரம்,
4. எனது எனப்படும் மமகாரம்,
5. விருப்பு,
6. வெறுப்பு,
7. நல்வினை மற்றும் 
8. தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும்.

நல்வினை குற்றமாக கருதப்படுவதன் காரணம், நல்வினை அடுத்த பிறப்புக்கு வழி வகுப்பதால் தீவினையை இரும்புச் சங்கிலிக்கும் நல்வினையை பொன் சங்கிலிக்கும் ஒப்பிட்டு பொன்னாக இருப்பினும், இரும்பாக இருப்பினும் இரண்டின் தன்மையும் ஒன்றாகும்.
-------    ---------    --------
புலன்கள் எட்டும் - ஐந்து புலன்கள் முதலாய இருபத்து நான்கு தத்துவங்களை ஆன்ம தத்துவம் என்று ஒரு கூட்டமாக சொல்வார்கள். இந்த இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம். அப்பர் பிரான், புலன்கள் முதலாக உள்ள இந்த எட்டு தொகுப்புகளை, புலன்களின் முதன்மை கருதி புலன்கள் எட்டு என்று இங்கே கூறுகின்றார். 

எட்டு புலன்களாவன: 
புலன் முதலிய கருவிகள். அவை உணரும் போது புலன் முதலாக கொண்டே உணரப்படுவதினால் அவையும் புலன்கள் ஆகும்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.
குறள் - 27.
என திருவள்ளுவ நாயனாரும் புலன்களையே எடுத்து இயம்பினார்.

ஆன்மதத்துவம் - 24.

1. ஐம்பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

2. கன்மேந்திரியங்கள் 5 - வாய், கை, கால், எருவாய், கருவாய்.

3. ஞானேந்திரியங்கள் 5 - மெய், வாய், கண், மூக்கு, செவி.

4. தன்மாத்திரைகள் 5 - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

5. அந்தக்கரணங்கள் 4 - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
-------    ---------    --------
பூதலங்கள் எட்டும் - மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள், கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள் ஆகும். "கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் அண்டகோசப் படலத்தில் இதனை விவரித்து அருளியுள்ளார்."

பூமிக்கு மேலே உள்ள 7 உலகங்கள் :

1) சத்தியலோகம் - பிரம்மன்,
2) தபோலோகம் - தேவதைகள்,
3) ஜனோலோகம் - பித்ருக்கள்,
4) மஹர்லோகம் -முனிவர்கள்
5) சுவர்லோகம் சொர்க்கம்-இந்திரன் மற்றும்
தேவர்கள்
6) புவர்லோகம்-கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்,
7) பூலோகம் மனிதர்கள், விலங்குகள்.

பூமிக்கு கீழே 7 உலகங்கள் :

1) அதல லோகம், காமுகர்கள்
2) விதல லோகம் அரக்கர்கள்
3) சுதலலோகம் - மகாபலி,
4) தலாதல லோகம் - மாயாவிகள்
5) மகாதல லோகம் - அசுரர்கள்
6) ரஸாதல லோகம் - அசுர ஆசான்கள்.
7) பாதாள லோகம் - வாசுகி முதலான பாம்புகள்.
-------    ---------    --------
பொழில்கள்  எட்டும் - இறைவன் படைத்தும், காத்தும், அழித்தும் கரந்தும் விளையாடும் இடமாகவும், உயிர்கள் போக்கும், வரவும் புரிவதற்கு இடமாகவும் திகழ்பவை.
பொழில்கள் - தீவுகள். அவை எட்டு ஆகும்.
நாவல், சாகம், குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.
-------    ---------    --------
கலை எட்டும் - மேலே குறிப்பிட்ட எட்டு பொழில்களைச் சுற்றி அமைந்துள்ள கடல்கள் அந்த தீவுகளுக்கு ஆடை போன்று அமைந்திருப்பதால், கடல் என்று கூறாது கலை என்று கூறினார்.
எட்டு கடல்களாவன - உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல் தேன் கடல், நன்னீர்க்கடல், மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள பெரும்புறக் கடலோடு எட்டாகும்.
-------    ---------    --------
காப்பு எட்டும் - காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.
-------    ---------    --------
காட்சி எட்டும் - பொழில்கள் எட்டிலும் காணப்படும் எட்டு வேறு வேறு வகைப்பட்ட இயல்புகள் நிறைந்த காட்சிகள்.
-------    ---------    --------
கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும் - 
இறைவனின் திருக்கழல் சேவடி அடைந்தார் பெறும் பயனை களைகண் என்றருளியுள்ளார். அப்பயன்கள் புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம் ஆகும். இவையெல்லாம் அவ்வுயிர்கள் பெரும் பதங்கள் ( பதவிகள் ) எனப்படும் புண்ணிய லோகங்கள் ஆகும். மீண்டும் வாரா பெருநிலையான வீட்டுலகம் என்னும் சிவலோகம் இவையனைத்திலும் மேலானதாக திகழ்வதாகும்.
-------    ---------    --------
நகை எட்டும் - நகை என்பது ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். இராகு, கேது கிரகங்கள் சுயமான ஒளிர்வதில்லை என்பதால் அவை இரண்டையும் தவிர்த்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவை நகை எட்டு ஆகும்.
-------    ---------    --------
நாள் எட்டும் - காலத்தின் கூறான நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் ஆகிய எட்டும் ஆகும். 
-------    ---------    --------
நன்மை எட்டும் - அறம், பொருள், இன்பம். வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும், அவற்றிற்கு மறுதலையாக (எதிர் பொருளாக) உள்ள மறம், இன்மை, துன்பம், பிறப்பு என்னும் நான்கும் கூடிய எட்டுமாகும்.
-------    ---------    --------
நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் - 
நலம் சிறந்தார் மனத்தகத்து எட்டு மலர்கள் என்று நம்மிடம் இருக்க வேண்டிய எட்டு குணங்களை அப்பர் பிரான் கூறுகின்றார். இவற்றை அகமலர்கள் என்று கூறுவார்கள். அவை 
கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியன அந்த எட்டு மலர்கள் ஆகும்.
-------    ---------    --------
திகை எட்டும் - திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு.
நேர்த்திசைகள் நான்கும், கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு ஆகும். அவை கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு ஆகிய எட்டு திசைகளாகும்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...