Tuesday, February 21, 2023

சிவனுக்கு சீடர்களான #சப்தரிஷிகளின் சரித்திரம்

சிவனுக்கு சீடர்களான #சப்தரிஷிகளின் சரித்திரம்! 
" பிரிட்டனில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சான்றாதாரங்களைக் காண்கையில் சிவனின் வடிவமாகிய #ருத்ரன்தான் உலகின் பழமையான இறைவடிவம் என்று தெரிகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவம் அது."

சத்குரு:
சிவன் என்று சொன்னால், அந்தச் சொல் பலருக்கும் பலவிதமான பொருள்களைத் தருகிறது. பல்விதமான பரிமாணங்கள் கொண்ட ஒருவருக்கு அப்படி விதம் விதமான வர்ணனைகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஞானத்தின் உச்சமென்று கருதப்படுகிற சிவன்தான், பெருங்குடிகாரராகவும் கருதப்படுகிறார். அழகின் உச்சமாய், சுந்தரமூர்த்தியாய் விளங்குகிற சிவன்தான், அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகிறார். இப்படி வெவ்வேறு எல்லைகளின் வடிவமாகவும் விளங்குபவர் சிவன்.

ஆனால் ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்களுக்கு சிவன் என்பவர் ஒரு யோகி. வெறும் யோகியல்ல. அவரே ஆதியோகி. மனிதனாகப் பிறந்தவன், தன் எல்லைகளுக்குள் நின்று போக வேண்டியதில்லை என்றும், அதனைக் கடந்த ஒரு பரிமாணத்தை உணர முடியுமென்றும் உணர்த்தியவர் சிவன்தான். உடல் என்ற எல்லைக்குள் இருந்தபடியே இந்த உடலுக்குள் மீண்டும் வரவேண்டிய தேவையை உடைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கித் தந்தவர் சிவன்தான்.

உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான்.

யோகா என்றால் இணைதல் என்று பொருள். ஒரு மனிதன் இந்தப் பிரபஞ்சத்துடன் தன்னை இணைப்பதன் மூலம், மனிதன் என்ற குறுகிய எல்லையைக் கடந்து பிரபஞ்சம் என்னும் எல்லையின்மையை உணர்ந்து, படைப்புக்கும் படைத்தவனுக்கும் பேதமில்லாத நிலையை உணர்த்தும் அருங்கலையாகிய யோகா சிவபெருமானால் வழங்கப்பட்டது.

வெவ்வேறு பிணைப்புகளுக்கும் எல்லைகளுக்கும் ஆட்பட்ட மனிதன் எல்லையின்மையை உணர்வதுடன் நில்லாமல், எல்லை எல்லையின்மை இரண்டின் பயன்களையும் ஒரே நேரத்தில் நுகர முடிந்தால் அதுவே யோகா. சிவம் என்ற சொல்லுக்கு, “எது இல்லையோ, அது” என்று பொருள்.

வெற்றிடமும் சூன்யமுமே சிவம். வெற்றிடம் என்பதை நீங்கள் சரியான பொருளில் புரிந்து கொள்வது அவசியம். இரவு நேரத்தில், ஆகாயத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், கோடிக்கணக்கான விண்மீன்களும் கோள்களும் இருப்பது போலத் தெரியும். ஆனால், உண்மையில் அத்தனை பிரபஞ்சங்களும் இருளென்னும் வெற்றிடத்தின் மடியில் சின்னஞ்சிறு துகள்களே ஆகும். படைப்புகளின் மூலமாகிய இந்த வெற்றிடமே, பிரபஞ்சத்தின் 99% ஆகும். தன்னுள் எல்லையின்மையை உணர்ந்ததாலேயே தானும் எல்லையில்லாத் தன்மையை எய்தியவர் என்பதால் சிவம் எனும் சொல் எல்லையின்மையையும் குறிக்கும். ஆதியோகியையும் குறிக்கும்.

தன்னுடைய உச்சத்தை ஆதியோகி தொட்டபோது, பலரும் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்ட ஏழு முனிவர்கள். ஆதியோகியின் புரிதலையும் ஞானத்தையும் பெற்று பூமி முழுமைக்கும் விநியோகிப்பதற்கான பாத்திரங்களே அவர்கள்.

" அகத்திய முனிவர், அத்ரி முனிவர், அங்கிர முனிவர், பிருகு முனிவர், கௌதம முனிவர், காச்யப முனிவர், வசிஷ்ட முனிவர் ஆகிய எழுவரே அந்த சப்த ரிஷிகள். "

அவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். அந்த யுகத்தின் நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தார்கள்.

அவர்களில் மூவர், தென்னிந்தியா முழுமையிலும் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களில் மிக முக்கிய பங்களிப்பை ஆற்றியவர் அகத்திய முனிவர். சித்த வைத்தியம், ரசவைத்தியம் ஆகியவற்றின் தந்தையென்று கருதப்பட்டவர் அவர். ஞானமடைந்த பிறகு தன்னுடைய ஞானத்தை தென்னகத்துடன் பகிர்ந்துகொள்ள வந்தவர் அவர்.

அனுசூயாவை மணந்து கொண்ட அத்ரி, குருஷேத்திர யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவர். துரோணாச்சாரியார் என்னும் மாவீரர், இலட்சக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருந்த யுத்தத்தில் சுற்றிச் சுழன்று வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த போது அவரைத் தடுத்து நிறுத்தி அவருடைய தர்மத்தை நினைவூட்டியவர் அத்ரி மௌனிவர். அதன்பின் துரோணர் தியானத்தில் அமர்ந்து தன் உடலை உதறினார்.

கௌதமர் என்றதும் பலரும் கௌதம புத்தர் என்று நினைக்கிறார்கள். ஆனால் சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதமர், அகல்யையை மணந்தவர். த்ரயம்பகேஸ்வர் என்னும் இடத்தில் ஒரு சிறிய ஆசிரமத்தில் மனைவியுடன் வசித்தார். அவருடன் பல சீடர்களும் வசித்தனர். ஒருநாள் அவருடைய ஆசிரமத்தில் நுழைந்த பசுவொன்று அங்கிருந்த அரிசியைத் தின்றது. கௌதம முனிவர் அதனை விரட்ட முனைந்த போது, அது தவறி விழுந்து இறந்தது. பசு இறந்ததும் குற்றவுணர்வில் வருந்தினார் கௌதமர். சிவன் அவர் முன் தோன்றி, “உணவுப் பஞ்சத்தினாலேயே நீ அந்தப் பசுவை விரட்டினாய். அதனால் வேண்டுமளவு அரிசியை நீ விளைவித்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தருகிறேன்” என்று சொல்லி, திரியம்பகேஸ்வரில் ஒரு நதியை உருவாக்கினார். கௌதமி என்ற பெயரில் உருவான அந்த நதிதான் கோதாவரி என்ற பெயரில் ஆந்திராவிலும் ஒரிசாவிலும் நெற்பயிர்களை விளைவித்து வருகிறது.

தங்கள் காலத்திலேயே பெரிதும் போற்றப்பட்ட இந்த யோகியர் கயிலாயத்தில் ஆதியோகியின் சீடர்களாயினர். தான் உணர்ந்த ஞானத்தை சிவன் இவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். 
ஒருவர் #மத்திய_ஆசியாவுக்கு சென்றார். இன்னொருவர், தற்போது #எத்தியோப்பியா என்றும் #எகிப்து என்றும் அழைக்கப்படும் #மத்திய_கிழக்கு பகுதிக்குச் சென்றார். இன்னொருவர் #தென்னமெரிக்காவுக்கும், மற்றொருவர் #தென்மேற்கு_ஆசியாவுக்கும் சென்றார். இன்னொருவர் கயிலாயத்தில் சிவபெருமானுடனே தங்கிவிட்டார். இன்னொருவர் இமயத்தின் கீழ்ப்பகுதிக்கு வந்தார். அவர்களில் தென்னகம் வந்தவர்தான் அகத்திய முனிவர். அவர் வெள்ளியங்கிரி மலை வரை வந்திருக்கிறார். தென்னக ஞான மரபின் தந்தையென்று போற்றப்படுபவர் அகத்திய முனிவர்.

இந்த உலகில் எத்தனையோ ஞான மரபுகள் உண்டு. அவற்றில் எல்லாம் தனித்தன்மையும் பெருஞ்செறிவும் கொண்டது தென்னிந்திய ஞானமரபு. ஞானிகள் எதையும் கண்டுணரவும் பரிசோதனை செய்து பார்க்கவும் தேவையான சூழல் இங்கே இருந்து வந்துள்ளது. உலகின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அமைப்பு இது.

உலகின் பல பகுதிகளிலும் இந்த ஏழு முனிவர்கள் உருவாக்கிய இந்த ஞான மரபு, இன்றும் கண்கூடாகத் தெரிகிறது. #கிரீஸ், #லெபனானின் #பால்பெக் ஆலயங்கள், #எகிப்தின் சில கோயில்களில் எல்லாம் யோக முத்திரைகள் இன்றும் காணப்படுகின்றன. 16 மூலைகளில் குருபூஜைக் கற்கள் காணப்படுகின்றன. ஆதியோகியின் நேரடி தீட்சை பெற்றவர்களைத் தவிர பிறரிடமிருந்து இவை வந்திருக்க வாய்ப்பில்லை.

சிவனுடன் எப்போதும் இருந்தவை கணங்கள். அவை வடிவற்றவையாக புராணங்களில் சித்தரிக்கப்படுகின்றன. எலும்பில்லாத முழங்கைகளும் முழங்கால்களும் கொண்டிருந்தன. யானையின் தலையை சிறுவனின் உடலில் பொருத்தியதாக சொல்லப்படும் விநாயகர் கதை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. அது ஒரு கணத்தின் தலை. எனவேதான் அவர் கணபதி என்றழைக்கப்பட்டார். கணபதி என்றால் கணங்களின் தலைவர் என்று பொருள். வடிவற்ற கணங்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் திரிபவராக சிவன் கருதப்படுகிறார்.

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால், பலராலும் ஏற்க முடியாத காரியங்களுக்குரிய கடவுளாக அவர் கருதப்படுகிறார். ஆனால் உலகம் அவரை மகாதேவன் என்று கொண்டாடுகிறது. பிரிட்டனில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் உள்ள சான்றாதாரங்களைக் காண்கையில் சிவனின் வடிவமாகிய ருத்ரன்தான் உலகின் பழமையான இறைவடிவம் என்று தெரிகிறது. 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வடிவம் அது.

8000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் படையெடுத்தபோது, அவர்கள் இந்திரனை வழிபட்டனர். அவர்களால் இங்கிருப்பவர்களைத் தோற்கடிக்க முடிந்தது. ஆதிக்கம் செலுத்தவும் அடிமை கொள்ளவும் முடிந்தது. ஆனால் தோற்றவர்களின் கடவுளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். படையெடுத்து வருபவர்கள் தங்கள் கடவுளரைத் திணிப்பதுதான் வழக்கமாக நடக்கும். ஆனால் இங்கு வந்தவர்கள் தோற்றவர்களின் கடவுளை ஏற்றுக் கொண்டனர். அத்தனை சக்தியும் வாய்ப்புகளும் சிவனிடம் இருந்ததே அதற்குக் காரணம். ஆதியோகியின் ஆற்றலை விளக்க இதனினும் ஆதாரம் வேண்டுமோ!

#Shiva #MahaShivRatri☘️

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....