Sunday, April 23, 2023

ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஶ்ரீகிருஷ்ணரின் திருக்கோயிலே ஜகநாநாதர் ஆலயமாகும்.

#புரி_ஜெகன்நாதர்_ஆலயம் 🙏
    வட இந்தியாவில், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த ஶ்ரீகிருஷ்ணரின் திருக்கோயிலே    ஜகநாநாதர் ஆலயமாகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் ( பலராமர்) மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.  முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், (*கிருஷ்ணர்) பாலபத்திரர்(*பலராமர்)  மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

#புரி_ஜெகன்நாதர்_கோயில்.🙏
      இக்கோயில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது.  இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான இரத யாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடம்   இது நாளை தொடங்குகிறது.
         சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது இராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாவர்.
        உலகப் புகழ் வாய்ந்த புரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும்   ஒன்பது  நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்வார்கள்.
         தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் #சுபத்ராதேவியும் (கிருஷ்ணரின் தங்கை  மற்றும்  #அர்ஜுனனின்_மனைவி, மாவீரன்   #அபிமன்யுவைப்பெற்றவள்) எழுந்தருள்வர்.
         பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் *இரத்ன வீதியைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் *கஜபதி   பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர்(பலராமர்)  தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர்( கிருஷ்ணர்)
எழுந்தருளிய தேர் புறப்படும்.
           குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மௌசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.  புரி ஜெகநாதர் ஆலயத் தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

  #கோவிலின்_தலவரலாறு 🙏
               பல அற்புதங்களையும், மர்மங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆலயம் புரி ஜகன்னாதர் ஆலயம். 
           துவாபர யுகம் முடிவில் கிருஷ்ணர் பூதஉடலில் இருந்து தனது ஆன்மாவை  பிரித்து வைகுந்தம் அடைந்தார். அவரது   உடலுக்கு  இறுதி சடங்குகளை முடித்து உடலுக்கு தீ வைக்கும் போது, உடலில் அனைத்து  பகுதிகளும் சாம்பலானதாம்; ஆனால்   கொப்பூழ்  பகுதி மட்டும் அப்படியே இருந்ததாம்;  மக்களும்  அப்படியே கடலில் கரைக்க, ஆச்சரியம்  என்ன வென்றால்   கொப்பூழ்  பகுதி மட்டும் கடலில் கரையாமல் நீல நிற கல்லாக மாறி பின் கொஞ்சம் கொஞ்சமாக பகவன் விஷ்ணுவின் உருவமாக மாறியதாம். ( யுக முடிவில் விஷ்ணுவின்   கொப்பூழில்  இருந்து ஒரு தாமரைமலர் வர,  அதிலிருந்து  பிரம்மா  தோன்றி மீண்டும்  உலகைப் படைப்பாராம். அத்தகைய மகிமை உடையது பகவானின் கொப்பூழ்)
         அந்த சிலையைக்  கண்ட பழங்குடி இனத்தை சார்ந்த #விஸ்வசனன் அந்தச் சிலையை அங்கு இருந்த காட்டுப். பகுதிக்குக்  கொண்டு சென்று யாரும் அறியாத வண்ணம் காட்டு மலர்களால் தினமும் அர்ச்சனை செய்து வந்தாராம்.  இந்த   தகவல் எப்படியோ அங்கு ஆட்சி செய்த இந்திரதுய்மன்  என்ற  மன்னனுக்குத்    தெரியவந்ததாம். அதைப்  பற்றி    அறிந்து வரும்படி   மன்னர்,  வித்யாபதி என்ற    அந்தணரை அனுப்பி வைத்தாராம்.   அவனும் விஸ்வசனனை சந்தித்தார்;  விஸ்வசனனின்  மகள் மீது காதல் கொண்டு  திருமணமும் செய்துகொண்டார்.   அதன் பிறகு அந்த காட்டுக்குள் இருக்கும் சிலையைக்  காட்டுமாறு வற்புறுத்தி வேண்டினார்  வித்யாபதி.   அவரும்  வித்யாபதியின் கண்களை கட்டி  காட்டிற்குள் அழைத்து சென்றாராம்.
          வித்யாபதியும் வழியெங்கும் கடுகுகளை போட்டுக் கொண்டே சென்றாராம்.  பின்னர்   அதிசய  கிருஷ்ணர்  சிலையைக்  கண்டு வணங்கி  பூஜைகளை முடித்து  இருவரும்    வீடு திரும்பினராம்.   குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அந்த கடுகுகள் துளிர் விட ஆரம்பிக்க, சிலையை   அடையும்  வழி துல்லியமாக தெரியதத்  தொடங்கியது. அதை கண்டு வித்யாபதி,   மன்னனுக்குத்    தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த  #இந்திரத்துய்மன் தன் படையினருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றான்.    
      ஆனால்  ஏழையின் பக்திக்குக்  கட்டுப்பட்ட கிருஷ்ணரோ, மன்னனோடு செல்லவிரும்பாது  மாயமாகிப்  போனார்.  அதை கண்டு மனம் உடைந்த   மன்னரோ  உண்ணாவிரதம் மேற்கொண்டு  ஒரு மண்டலத்தில் அசுவமேத யாகத்தை துவங்குகினாராம். தனக்கு   அருளும்படி   மனமுருகி மன்னன்,  பகவானை    வேண்டினாராம்.. 
            மன்னனின்   கனவில் கிருஷ்ணர் தோன்றி , கடலில் மிதந்து வரும்  ஒரு மரக் கட்டையைக்கொண்டு சிலையைச்  செதுக்குமாறு கூறினாராம்.  அதைப் போல  மறுநாள்    ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்ததாம்.   இந்திரதுய்மனும்  அந்த மரக்கட்டைக்குப்   பூஜைகளை   நடத்தி  தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையை    வடிக்குமாறு  கூறினாராம்.  ஆனால்  யாராலும்    சிலையை வடிக்க  இயலவில்லை.   அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல  தோன்றினார்.   மன்னனிடம்  21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது;  தான் உணவும்  உண்ண மாட்டேன்!  என்றும் கூறினாராம்    முதியவரான   தச்சர்;   அதற்கு  மன்னனும்  ஒப்புக்கொண்டாராம்.   
             பதினைந்து  நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது! என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் அறையிலிருந்து  சத்தமே கேட்கவில்லை. . இதனால் தச்சருக்கு  என்னவாயிற்றோ   என எண்ணி,  மன்னன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டாராம்.    உள்ளே   யாருமேயில்லை; பெருமாள் மறைந்துவிட்டார். ஆனால்  ஓர் அசரீரி  குரல்  கேட்டது.  'மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய்;  எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும்;  அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு; 
இக் கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்! என்ற எண்ணத்துடன் செல்வார்கள்!  என்று பகவான்   அருள்பாலித்தாராம்.   அந்த அறையில் வேலை முடியாத நிலையில் #ஜெகன்நாதர், (ஶ்ரீகிருஷ்ணர்)  #பலராமன், #சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே மன்னரூம்    பிரதிஷ்டை செய்தார். 
           இந்திரத்துய்மனின்  காலத்திற்குப் பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. #ஆலயக்கொடிமரம் "ஏழைகளுக்கு அருள்பவன்" என்னும் பொருளில் #பதீதபவன்பாவனா  என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர்,  ஏழைப் பங்காளன் அல்லவா?   அவரது கோயில்   கொடிமரத்தை   அவ்விதம் அழைப்பது மிகவும்  பொருத்தமே.   இன்னும் எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டது   புரி ஜகன்நாதர்   ஆலயம்.

#பூரி_ஜெகநாதர்_ஆலய_அதிசயங்கள் 
1. கோயிலின் கொடியானது  காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் தான் பறக்கும்.

2.  கோயில் இருக்கும் *பூரி (*புரி)என்ற ஊரின் எந்த இடத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மையே  பார்ப்பது போல இருக்கும் .

3.  பொதுவாக காலையிலிருந்து மாலை வரை கடற் காற்றானது  கடலில் இருந்து நிலத்தை நோக்கியும்,  மாலை முதல் இரவு முழுவதும்  நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசுவதே எங்கும் வழக்கம்.  ஆனால் புரியில் இதற்க்கு நேர் எதிராக நடைபெறுவது ஓர் அதிசயமே.

4. இக்கோயிலின்  கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை.

5.  இக் கோயிலின் மேலே விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை;  கோவிலில் ஒரு பறவை கூட அமர்வதுமில்லை.

6.  இக்  கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு  ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்.
ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை  எத்தனை இலட்சமானாலும் சரி  சமைக்கப்பட்ட உணவு  பக்தர்களுக்குப் போதாமல்  போனதேயில்லை;  உணவு மிகுந்து  வீணாகப் போனதுமில்லை. என்பதும் ஓர் அதிசயமே.

7. இக்  கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் தான் உணவைச்  சமைப்பார்கள்.  அவ்வாறு  சமைக்கும்பொழுது அடியில் உள்ள பானையில் உணவு ,வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடுவதும் ஓர் அதிசயமே.  

8.இந்த ஜெகந்நாதர் ஆலய சமையல் கூடம் தான் உலகிலேயே தினமும் செயல்படும் மிகப்பெரிய சமையல் கூடம் என்பதும் இறைவன் கருணையே.

9.  கடற்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சிங்கத் துவாராவின் முதல் படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்குக்  கேட்பதில்லை.
       ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நாம்  நுழையும் பொழுது கடலிலிருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்குத் தெளிவாகக் கேட்பதும் ஓர் அதிசயமே.
     __இவையனைத்தும் சர்வ வல்லமை மிக்க பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணரின் எல்லையற்ற பராக்கிரமத்தையும், அருளையும் இன்றுவரை உலகிற்கு பறைசாற்றி  கொண்டிருக்கும்  அரிய அதிசயங்கள் நிறைந்த ஆலயமே புரி ஜெகநாதர் ஆலயம். 
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம். 🙏

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...