Tuesday, June 6, 2023

பாகற்காய் சனீஸ்வரர்...!வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களின் தாக்கத்தை குறைத்து, இனிய வாழ்வு தரும்

பாகற்காய் சனீஸ்வரர்...!
வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களின் தாக்கத்தை குறைத்து, இனிய வாழ்வு தரும் பாகற்காய் சனீஸ்வரர் ,மற்றும் சர்ப்ப தோஷம் , திருமண தடை நீக்கும் ராகு , கேது உருவங்கள் உங்கள் தலைக்கு மேல் உள்ள தூணில்  கோவில்  முழுவதும் இருக்கும்படி அமைக்கபட்டுள்ள
அற்புதமான பரிகார ஸ்தலம்:

ராணிப்பேட்டை , ஆற்காடு , வாலாஜா என மூன்று நகரங்கள் அருகில் இருந்தும் - அங்கு இருப்பவர்களுக்கே அதிகம் தெரியாத ஆலயம். ஆனால், இங்கு ஒரு முறை வந்து பாருங்கள்.

உங்களுக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் ஆலயம் இது. வன்னி மரத்தடியில் சுயம்பாக தோன்றி - அகத்திய முனிவரால் நிறுவப்பட்டு வணங்கப்பட்டவர் அகஸ்தீஸ்வரர். 

அந்த கால சிற்ப சாஸ்திரம் , துளியும் பிசகாது - அற்புதமாக கட்டி இருக்கிறார்கள். மதில் சுவர் , மற்றும் ஆலயத்தின் உள்ளே சில வேலைகள் செய்ய ஒருமுறை  ஸ்தபதி ஒருவரை அழைத்து வந்து காட்ட , அவர் இந்த ஆலயத்தைப் பார்த்து வியந்து போய் , சில தகவல்களை கூறி இருக்கிறார். 

ஆலயத்தில் நீங்கள் எந்த தெய்வத்தின் முன் நின்று வணங்கினாலும், உங்கள் தலைக்கு மேல் - ராகு , கேது உருவங்கள் - உங்கள் தலைக்கு மேல் உள்ள தூணில் இருக்கிறது. கோவில் அமைக்கும் போதே - சர்ப்ப தோஷ பரிகாரம் முழுவதும் கிடைக்கும்படி அமைத்து இருக்கிறார்கள். அம்மன் - பீடமும், ஆவுடையார் மேல் அமைக்கப்பட்டு உள்ளது. 

தல வரலாறு: ஒருமுறை அகத்தியர் வன்னி மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தங்கினார். மணலால் லிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார்.

தன்னை பூஜித்த அகத்தியரின் பெயரால் இத்தலத்து சிவன் "அகஸ்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

குள்ள லிங்கம்: பாலாற்றின் வடகரையில் அமைந்த கோயில் இது. அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் என்பதால், சிவலிங்கம் குள்ளமாக இருக்கிறது. பாணத்தில் கைரேகைகள் தெரிகின்றன. 

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள். 

சிவன் சந்நிதி எதிரில் அகத்தியர் இருக்கிறார். சதயம் நட்சத்திர நாட்களில் இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படுகிறது.

ஆவுடை அம்பிகை: அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். பவுர்ணமியன்று சப்தரிஷிகளும் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, "லகுசண்டி ஹோமம்' நடத்துகின்றனர். 

கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். 

செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் குபேரருக்கு நெய்தீபம் ஏற்றியும், திருமணத்தடை நீங்க அக்னி பகவானுக்கு சிவப்பு 
வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைத்தும், விபத்தைத் தவிர்க்க எமனுக்கு பாலபிஷேகம் செய்தும் வேண்டிக் கொள்கிறார்கள்.

பிரகாரத்தில் ஹனுமான், ஹயக்கிரீவர் , கால பைரவர் , பெருமாள் ஆகியோரும் , அன்ன பூரணியும், காம தேனுவும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்த சந்நிதிகளில் காட்சி தருகின்றனர்.

பாகற்காய் சனீஸ்வரர் 
வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களின் தாக்கத்தை குறைத்து, இனிய வாழ்வு தரும் பாகற்காய் சனீஸ்வரராக வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோயிலில் அருளுகிறார்.

வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்க சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபடுகின்றனர். 

தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சனிபகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்பவர்களும் உண்டு.

வன்னி மரத்தடியில் அமர்ந்து அருள் பாலிக்கும் சனி பகவான் - உங்களுக்கு கஷ்டங்களை தாங்கும் முழு வலிமை தருவார். ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் , ஜாதகத்தில் சனி பகவான்  வலிமை இல்லாமல் இருப்பவர்கள் , அவசியம் வர வேண்டிய ஆலயம்.

நவ கிரகங்களில் , சனி பகவான் - ஒரு காலை உயர்த்தியபடி இருப்பது , இங்கு விசேஷமான ஒரு அமைப்பு. உனக்கு அபயம் அளிக்க நானிருக்கிறேன். கவலைப்படாதே ! என்று ஓடோடி வந்து உங்களுக்கு வரம் அளிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். 

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்குள்ள முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள். 

இதெற்கெல்லாம் சிகரம் போலே - சரபேஸ்வரர் ஆலயத்தினுள் கம்பீரமாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

ஒவ்வொரு ஞாயிறும், ராகு கால நேரத்தில் - சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் , மிக சிறப்பாக நடை பெறுகின்றது. வாழ்வில் நீண்ட கால தடைகள் , பில்லி , ஏவல், சூன்யம் பிரச்னைகள் , கணவன் , மனைவி திருந்தி ஒற்றுமையுடன் வாழ்தல், நீங்கள் நேரடியாக மோதாமல் உங்கள் எதிரிகளை வலுவிழக்க செய்தல், உங்களுக்கு வர வேண்டிய சொத்து  உங்களுக்கு விரைவில் கிடைக்க செய்தல் , நீண்ட காலம் வாரா கடனை உங்களுக்கு விரைவில் திரும்ப கிடைக்க செய்தல், உங்கள் கடன் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்தல், முக்கியமாக ஒழுக்கத்துடன் உங்களை வாழ வைத்து உங்கள் கம்பீரத்தை பறைசாற்றுதல் , - போன்ற பல அற்புதங்களை செய்பவர் சரபேஸ்வரர். முக்கியமாக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு , திருமண தடை நீங்கியவர்கள் அநேகம்.

சிவன் அவதாரங்களிலேயே - துடியான அவதாரம் சரபேஸ்வரர். எங்கெல்லாம் சரபேஸ்வரர் உருவம் தூணிலோ , அல்லது சிலையாகவோ இருக்கிறதோ - அங்கே ஜாலுவேச சித்தரின் ஆத்ம சரீரம் அடங்கி இருக்கிறது என்பது ஒரு பெரிய ரகசியம் .

உங்கள் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றுபவர் இந்த  சரபேஸ்வரர். மிக முக்கியமான விஷயம் - கூட்டம் கட்டுக் கடங்காமல் இல்லாமல் , மிக சொற்ப பேரே இருப்பதால் - நீங்கள் கண் குளிர அபிஷேக / ஆராதனை தரிசனம் செய்யலாம். உங்களுக்கு மூன்றடி / நான்கடி தூரத்தில் - ஒரு சக்தி வாய்ந்த கடவுளுக்கு அபிஷேகம் நடந்தால் எவ்வளவு சந்தோசம் தரும் என்பதை நீங்கள் உணர முடியும். ..

அவருக்கு படைத்த விபூதி , சந்தனம் உங்களுக்கு பிரசாதம் தருகிறார்கள். வழிபாடு முடிந்ததும்  - புளி சாதம், பஞ்சாமிர்தம் , தயிர் சாதம் - பிரசாதமாக அன்ன தானம் செய்கிறார்கள். மாலை , மங்கி இருள் சூழும் நேரத்தில் - சரபேச தரிசனமும், சூழ் நிலையும் - மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது.

நீங்கள் ராகு காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் - கோவிலுக்கு வந்து விட்டு , மற்ற தெய்வங்களை தரிசித்து விட்டு சரபேசர் முன் அமர , அபிஷேகம் ஆரம்பிக்க சரியாக இருக்கும். 

அலங்காரம் செய்ய கிடைக்கும் இடைவேளை நேரத்தில் - வன்னி மரத்தடியில் அமர்ந்து - ஸ்ரீ ருத்ரமோ , லலிதா சஹஸ்ரநாமமோ மெதுவாக சத்தமின்றி சொல்லி முடிக்க , வழிபாடு தொடங்க சரியாக இருக்கும். 

ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை - பிரதோசமும் கூடி வந்தால், சரபேசரை வழிபடும்  இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். !

இருப்பிடம்: வேலூரிலிருந்து 35 கி.மீ., தூரத்தில் வாலாஜாபேட்டை. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 5 கி.மீ., தூரத்தில் கோயில்

திறக்கும் நேரம்: காலை 8- 11மணி, மாலை 5- இரவு 8 மணி.

போன்: 04172 - 270 595, 94422 27867.

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...