சிவபெருமான்
ஆலமர (வெள்ளாலம்) வடிவில் காட்சி அளிக்கும் ஒரே தலமானதும், வருடத்தில் பொங்கல் அன்று மட்டுமே பகலில் நடை திறக்கப்படும் தலமான
#தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#பரக்கலக்கோட்டை
#பொது_ஆவுடையார் என்ற #மத்தியபுரீஸ்வரர்
திருக்கோயில் வரலாறு:
பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது.
மூலவர்: பொது ஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)
தல
விருட்சம்: வெள்ளால மரம்
ஆகமம்: சிவாகமம்
ஊர்: பரக்கலக்கோட்டை
மாவட்டம்: தஞ்சாவூர் (பட்டுக்கோட்டை)
மாநிலம்: தமிழ்நாடு
#தல_வரலாறு:
வான்கோபர், மகாகோபர் என்ற இரு முனிவர்களிடையே இல்லறம் மற்றும் துறவறம் தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. அவர்கள் தில்லை நடராசப் பெருமானிடம் தம் வாதத்தை முன்வைத்தபோது, அவர் அவர்களை தென்திசை நோக்கிச் சென்று இரண்டு புளிய மரங்கள் இருக்கும் இடத்தில் காத்திருக்கும்படி கூறினார். இறைவன் வந்து இருவரும் ஏற்கும்படி இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவை என்று தீர்ப்பு கூறியதாகக் கூறுவர். இவ்வாறாகத் தீர்ப்பு வழங்கியதால் மத்யபுரீசுவரர் என்றும் பொதுவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இரு முனிவர்களும் அமர்ந்திருக்கும் சிலைகளுக்கு அருகே உள்ள புளிய மரங்கள் உறங்கும் புளி, உறங்காப் புளி என்றழைக்கப்படுகின்றன.
ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (இலிங்கம்) வழிபடப்பெறும் சிவன், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.
எனவே, இங்கு இலிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, ஆடைகள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காணமுடியாதபடி சுற்றிலும் வெண்ணிறத் துணியால் மறைத்துவிடுகிறார்கள். நமக்கு இலிங்க உருவம் மட்டுமே தெரிகிறது. கருவறையில் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவன், முனிவர்களுக்கு காட்சி தந்ததன் அடையாளமாகப் பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
இங்குள்ள இறைவன் பொதுவுடையார் ஆவார். மிகப்பெரிய ஆல மரத்தின் கீழ் லிங்கத்திருமேனியாக சந்தனக் காப்பிட்டு இறைவனுக்கு பூசை நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பொங்கல் திருநாளன்று விடியற்காலம் முதல் மாலை வரை இவருடைய தரிசனம் பகலில் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடை அடைபட்டிருக்கும் சமயங்களில் ஆல மரத்தின் முன்னதாக அமைக்கப்பட்டுள்ள கதவுகளுக்கு பூசை செய்யப்படுகிறது. ஆல இலைகளை பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.
இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து, அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.
மரமே மூர்த்தி
சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம், திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.இறைவடிவங்கள்
முகப்பில் அழகான பித்தளை தகட்டினால் செய்யப்பட்ட தோரண வாயிலில் இறை வடிவங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மரத்தின் முழுவடிவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில் திருவாட்சி ஒளி செய்ய, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமானின் திருமுகம் “லிங்கம்” போன்ற வடிவத்தைக் காட்டி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிலைப்படியும், திருக்கதவும் பித்தளை தகடுகளால் அழகுபடுத்தப்பட்டு ஒளி வீசுகின்றன. அதன் எதிரே நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார்.சோமவாரவழிபாடு கார்மேகம் திரண்டு வந்து கனமழைப் பொழியும் கார்த்திகை மாதம் தான் இந்த ஆலயத்தின் திருவிழாக் காலமாகும். கார்த்திகை மாதத் திங்கட்கிழமை (சோமவாரம்) ஒவ்வொன்றும் சிறப்பு வழிபாட்டிற்கு உரிய நாட்கள் ஆகும். பகல் நேரத்தில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதை அறிந்திருந்தும், பெருந்திரளாக வரும் பக்தர்கள் கருவறை கதவிலேயே மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து அபிஷேகம், அர்ச்சனை முதலிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி செல்கின்றனர்.
சோமவார திருவிழாக்காலங்களில் முடிகாணிக்கை, மா விளக்கு போடுதல் என பல்வேறு வகைகளில் தங்களது நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துகின்றனர். ஒவ்வொரு சோமவாரத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுவர். கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது. அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது.
அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும். பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில், நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.
தைப்பொங்கல், கார்த்திகை சோமவாரம் தவிர, சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை. சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது.
பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செயல்கிறார்கள். திருமணத் தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து, அதை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள்.
இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர். கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்கள் என எளிய பொருட்களிலிருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பெரிய பந்தல்கள் போடப்படுகிறது.
சுவாமிக்கென தனி விமானம் எதுவுமில்லை. மரத்தின் வடிவில் அருளும் சிவபெருமானுக்கு, மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே சுவாமிக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். அருகிலேயே இரண்டு யானைகளும் வைக்கப்படுகிறது. சிவனுக்கு பூஜை செய்யும்போது, இவளுக்கும் சேர்த்தே பூஜைகள் நடக்கிறது. இங்கு சிவனே பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு எந்த பரிவார மூர்த்திகளும் இங்கு கிடையாது. கோயிலுக்கு வெளியில் வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் (காவல் தெய்வம்) சன்னதி மட்டும் இருக்கிறது. இந்த விநாயகர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். வான் கோபர் அலங்காரத் துடனும், மகா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர். திங்கட்கிழமையன்று நள்ளிரவில் பூஜை முடிந்து தரிசனத்திற்காக சன்னதி நடை திறந்த பின்பு, சுவாமியை தரிசிக்க வந்த ஊர்க்காரர்களில் யார் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறாரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ரூ.1 மட்டும் காணிக்கையாக வாங்குகிறார்கள். இதனை, “காளாஞ்சி” என்கிறார்கள்.
நள்ளிரவில் சுவாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனம், மற்றும் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. கோயில் சார்பில் பணியாளர் ஒருவர் இவ்வாறு பக்தர்களுக்கு கொடுக்கிறார். அதன்பின், விடிய, விடிய அன்னதானம் நடக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பகலில் நடை திறக்கும் கோவில் பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் பகலில் நடை திறக்காமல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு மட்டும் நடை திறக்கப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. வருடத்தில் தைப்பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரை என நாள் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏
No comments:
Post a Comment