ஆடி 18
இன்று தமிழர்கள் வாழும் உலகெங்கும் ஆடி 18 என்கிற சிறப்பான ஆற்றில் பொங்கி வரும் நீரை வரவேற்று வணங்கி போற்றும் திருநாள் .
இதை சங்க காலத்தில் தமிழர் மரபில் "புதுப்புனல் விழா" என்று அழைத்தனர் ..
இதை பற்றி சங்க கால இலக்கியங்களில் சொல்ல பட்ட விஷயங்களை காணுவோம் ...
முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்”…………….
– [அகநானூறு 222, பரணர்.]
முழவு முழக்கத்துடன் நீராட்டு விழா.
காவிரி ஆற்றில் கழார் என்னும் ஊரின் துறையில் நீராட்டுவிழா.
ஆட்டன் அத்தி நீச்சல் நடனம் ஆடினான்.
அழகெல்லாம் குடிகொண்டிருந்த மார்பினை உடையவன் ஆட்டனத்தி.
தாழ்ந்த கூந்தலை உடைய காவிரி என்பவளும் அவனுடன் சேர்ந்து நீச்சல்-நடனம் ஆடினாள்.
காவிரி ஆட்டனத்தியை விரும்பினாள்.
தன் கூந்தலில் அவனை மறைத்துக்கொண்டு ஆற்றுநீரோடு கூட்டிச் சென்றாள்.
இது ஒரு பெரும் கதை - இதில் புது ஆற்று பெருக்கு வரும் காலத்தில் வாலிப பிள்ளைகள் புது வெள்ளத்தில் குதித்து விளையாடி வீரத்தை காண்பிப்பார்கள் என்பது கரிகால் சோழன் காலத்தில் இருந்து இருக்கிறது - இன்று திருச்சி காவேரி ரயில் பாலத்தில் இருந்து நீரில் குதிப்பது எல்லாம் அதே கதை தான் !!!
வெள்ளம் ஆட்டனத்தி என்கிற அந்த வீரனை - இவன் கரிகால் சோழன் மகளின் காதலி - காவிரியை அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டன் அத்தி கரையில் ஒதுங்கிக் கிடந்தான். மருதி என்பவள் ஆட்டனத்ததியைக் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்துவந்தாள். அரசன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி.
ஆதிமந்தி ஆட்டனத்தியைக் காதலித்துவந்தாள். வெள்ளத்தில் சென்ற ஆட்டனத்தியைத் தேடிக்கொண்டு, காவிரியாற்றங் கரை வழியே வந்தாள் - நன்றாக இருக்கும் இந்த சரித்திரம் !!!
சிலப்பதிகாரம் :- 7. கானல்வரி
உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி.
உழவர் ஓதை - புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை - நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடை நீர் ஓதை - கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை - புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பல்வகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி - மிக்கொலிக்கச் சென்றாய் ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், வாய காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி - அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக ;
தமிழ் இலகியங்களில் மிக பழமையான பரி பாடல்களில் காவேரி மட்டுமல்லாது - வைகை ஆற்றின் புதுப்புனல் விழா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன !!
===========================================================================
ஆற்றில் நீர் பெருகி ஓடும் பொது மக்கள் தங்கள் வாழ்விலும் புது வசந்தம் பெருக இறைவனை வேண்டிக்கொண்டும் ஆற்று தாயாய் வழிபட்டு .. இறை மூர்த்தங்களை ஆற்றுக்கு எழுந்தருளப்பண்ணி மரியாதை செய்கிற நன்னாள் இன்று !!!
அனைவருக்கும் புதுப்புனல் தினவாழ்த்துக்கள்
No comments:
Post a Comment