Friday, August 11, 2023

ஆலயதரிசனம்...கோனியம்மன் திருக்கோயில்..கோவை...

#ஆலயதரிசனம்...

கோனியம்மன் திருக்கோயில்..
கோவை...

1. கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள்.

2. தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி ஏந்தி உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.

3. கோனியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து, சிவனைப் போல இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு.

4. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை அம்மன் உணர்த்துகிறாள். அம்மனின் சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது.

5. இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

6. வேறு எந்த அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

7. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.

8. கொங்கு நாடு ஆதியில் அடர்ந்த காடாக இருந்தது; இருளர்களின் தலைவன் #கோவன் சீர்படுத்தி கோவை நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.

9. ஒரு சமயம் இங்கு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். நாட்டில் பஞ்சம், பிணிகள் ஏற்படாமல் இருக்க கல் ஒன்றினை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தான்.

10. அதன் பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். இருளர்கள் அம்மனை தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வணங்கினர்.

11. கோவையின் காவல் தெய்வமாக அம்மன் காத்தாள், அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப் பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். 

12. சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரிடம் இருந்து நாட்டை காக்க கோவன்புத்தூரின் மையத்தில் கோட்டை கட்டி, காக்கும் தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். 

13. அந்த அம்மனே கோனியம்மனாக இன்று வழிபடப்படுகிறாள். கோவை நகரில் இங்கு மட்டுமே தேர் திருவிழா நடத்தப்படுகிறது.

14. மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். 

15. பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர்.

16. அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.

17. நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை செய்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது. 

18. மாசாணியம்மன், சப்தகன்னியர் மற்றும் காவல் தெய்வங்கள் உள்ளனர். அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார். 

19. சாந்த விநாயகர், மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன.

20. நவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் மனைவியருடன் காட்சி தருவது விசேஷம். சூரியன் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வீற்றிருக்கிறார். 

21. தம்பதியர் ஒற்றுமைக்காகவும், சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

22. வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. காமிக ஆகமம் முறைப்படி பூஜைகள் செய்யப்படுகிறது.

23. இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

24. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப் பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

25. மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், பூ, பாக்கு, வெற்றிலை வைக்கின்றனர்.

26. கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டி கொள்கின்றனர்.

27. அம்மனுக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்கின்றனர். துர்க்கைக்கு பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றுகின்றனர்.

28. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர் மாவிளக்கு, பொங்கலிட்டு வேண்டிக் கொள்கின்றனர்.

29. தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

30. ஆலய முகவர் அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், பெரியகடை வீதி, கோயம்புத்தூர்...🙏🌹

No comments:

Post a Comment

Followers

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம் வேதாரண்யேஸ்வரர்

🛕வேதாரண்யேஸ்வரர் கோயில் - வேதாரண்யம் 🌹நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி த...