Friday, August 11, 2023

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயிலாகும்.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். 

இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது

தலபெருமை:

சித்திரகுப்தர்: 

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. இவரது 12ம் வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார்.

அவரைத்தேற்றிய சித்திரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி எமனைத் தடுத்தார்.

அவள் எமனிடம், "சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' என கட்டளையிட்டாள். எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக்கொண்டார். சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது.

ஆயுள்விருத்தி தலம்: 

சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது.

அர்த்த ஜாமத்தில் சித்திரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தருக்கு விசேஷ அபிஷேகத்துடன், பூஜை நடக்கும். ஆயுள்விருத்தி பெற இவருக்கு தயிர் சாதம் படைத்து வணங்குகிறார்கள். மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம்.

அறுபது, எண்பதாம் திருமணங்களும் செய்து கொள்கிறார்கள்.ஞானம், மோட்சம் தரும் கேதுபகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தர். எனவே இவையிரண்டும் கிடைக்க சித்திரகுப்தரை வணங்கலாம்.

கடல் தீர்த்தவாரி: 

மாசி மகத்தன்று சுவாமி, வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் வைபவம் நடக்கும். 

வருணன் மழைக்குரிய தெய்வமென்பதால், சிவனுக்கு தீபாராதனை செய்தபின், ஆகாயத்தை நோக்கி தீபாராதனை காட்டுவர். தை அமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களிலும் தீர்த்தவாரி உண்டு.

சூரிய பூஜை: 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில் இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். 

அம்பிகை சிலையின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.

துர்க்கையை வலம் வரலாம்: 

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது.

திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம்.

ஒரே கல்லில் செய்யப்பட்ட சுண்ணாம்புக் களஞ்சியம் என்னும் பாத்திரம் இங்கு அவசியம் காண வேண்டியதாகும். கோயிலுக்கு வெள்ளையடிக்க இந்த பாத்திரத்தில் சுண்ணாம்பு கலக்குகின்றனர்.

மரண பயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம். ஞானம், மோட்சம் கிடைக்க இங்குள்ள சித்திரகுப்தரை வணங்கலாம்.

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

இருப்பிடம் :

சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்திலுள்ள பரங்கிப்பேட்டையில், சேவாமந்திர் பஸ்ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...