Thursday, August 10, 2023

பிரம்மா கோவில் சென்றுருக்கிறீர்களா...!!

நம் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும்
பிரம்மா கோவில் சென்றுருக்கிறீர்களா...!!
'ஹூம்... எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்!

கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா.

இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!

'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான்.

இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன...?

'இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். 

அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!

தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!

நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்று பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள் மற்றும் அங்குள்ள சிறப்புக்களை தெரிந்து கொண்டு பயனடையுங்கள், ; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!

நன்றி விகடன்

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...