அ
சிவாயநம
நமசிவாய
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம்.
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருப்பாண்டி கொடுமுடி மகுடேஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்
ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 47 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,
கொங்குநாட்டு தலங்களில் 6 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 210 வது தலமாகவும் விளங்குகிறது கொடுமுடி சிவாலயம்.
ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன.
இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.
இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம். மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.
அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வ திக்கும் தனி சந்நிதி உள்ளது. இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
இப்படி பல சிறப்புகளை கொண்ட மூவரால் பதிகம் பாடப்பட்ட இந்த அற்புதமான
திருத்தலத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்தார்.
மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த பெருமானை வழிபாடு செய்து இவரின் பரிபூர்ண திருவருளை பெற வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment