Saturday, October 7, 2023

பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யர் கோவில்...!

பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யர் கோவில்...!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியா கோவில்.

இத்திருத்தலத்திலேயே பாம்புகளுக்கு திதி கொடுக்கும் வழக்கம் உள்ளது.

இப்படி திதி கொடுப்பதன் மூலம் முன்னோர் சாபமும்,சர்ப்ப என்னும் நாக தோஷமும் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது.

தலவரலாறு

கஷ்யப முனிவரின் மனைவியான கத்ரு,வினதை ஆகிய இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்தின் காரணமாக சர்ச்சை நிலவியது.

இருவரும் தங்கள் கருத்தே சரியானது என வாதம் செய்தனர்.நிறைவில்,யாருடைய கருத்து சரியானதோ,அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் கத்ரு தோல்வியுற்றாள்.

ஒப்பந்தப்படி கத்ருவும்,அவளது குழந்தைகளான நாகங்களும் வினதைக்கு அடிமையாகின.

வினதையின் மகனான கருடன்,நாகங்களுக்கு துன்பங்களை விளைவித்தான்.

பாதிக்கப்பட்ட நாகங்கள்,வாசுகி என்னும் ஐந்து தலை நாக அம்மையாரின் தலைமையில் குமாரதாரா நதி அருகிலிருந்த குகையில் வந்து மறைந்து கொண்டன.அங்கே தங்களைக் காக்கும்படி சுப்பிரமணியரை வழிபாடு செய்தன.

சுப்பிரமணியரும் நாகங்களைக் காப்பாற்றினார்.இதற்கு நன்றிக் கடனாக வாசுகி,தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு
குடையாக்கியது.

இதன் அடிப்படையிலேயே குமாரதாரா நதிக்கரையில் ஆதி சுப்பிரமணியருக்கு கோவில் எழுப்பப்பட்டது.

சேவல் கொடி வைத்துள்ள இத்தலத்தை ஒட்டி பள்ளுஸ் என்னும் இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.

சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின் குக்ஷி மறுவி குக்கி சுப்ரமண்யா என மாறி,தற்போது "குக்கே சுப்பிரமணியா" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்
கர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது.பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது.

முருகப் பெருமான் தரகாசூரனை அழித்த பின்பு,தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இக்கோவில் அருகே ஓடும் குமாரதாரா நதிக்கு வந்தார் என தல புராணம் கூறுகிறது.

பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்கு நீராடியதாகவும் வரலாற்றில் உள்ளது.

பாம்புகளை காத்து அருள்புரிந்தவர் இத்தல முருகன்.இதனாலேயே ராகு,கேது தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கால சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கே சிறப்பு பூஜையும்,நடத்தப்படுகிறது.

இங்கு பாம்புக்கு திதி கொடுத்தால் பித்ரு கடனைச் செலுத்திய பலனைப் பெறலாம் என்கின்றனர் இத்தலத்தில் உள்ள பெரியவர்கள்.

சர்ப்பதோஷ ஹோமம்

குக்கே சுப்பிரமண்யா கோவிலில் சர்ப்ப தோஷ ஹோமம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் இரண்டு நாள் இங்கேயே தங்க வேண்டும்.

முதல் நாள் சர்ப்ப விக்ரகம்,முட்டை,கோதுமை மாவில் செய்யப்பட்ட இரண்டு பாம்புகள்,கலச தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இரண்டாம் நாள் கங்கா பூஜை செய்து நாகர் சிலைக்கு மஞ்சள்,குங்குமம் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.

குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது.

வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது.மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன.

மேலும்,இக்கோவிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும்,மலை அருவிகளும் காணப்படுகின்றன.இவை இப்பயணத்தை ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி பசுமைச் சூழலைக் கண்டு ரசிக்க ஏற்ற தலமாகவும் இருக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன்

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...