Saturday, October 7, 2023

ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே மயிலாடுதுறையின் பெருமையைக் காட்டுகிறது.

♥ மயூரநாதர்  அபயாம்பிகை. திருக்கோயில், மயிலாடுதுறை   ♥
                       ♥  காவிரிக் கரையில் உள்ள 1. மயிலாடுதுறை, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு,  6. திருவையாறு   ஆகிய  6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. 
                       ♥  ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே மயிலாடுதுறையின்  பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவன்  மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.
                       ♥  சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக, அறிவுரை  கூறச்சென்று ,   கொண்டு அவமானப்பட்டு,  தட்சனின் சிவநிந்தனையை பொறுக்கமுடியாமல் தட்சனின் யாகசாலையிலேயே யோக தீ உருவாக்கி அதில் தன் உடலை தியாகம் செய்த பார்வதியை சிவன் சபித்து விடுகிறார். பார்வதிதேவி சாபவிமோட்சனம் வேண்டியபோது காவிரிக்கரையில்  தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு சிவன் கூறினார். 
                       ♥  உடலை இழந்துவிட்ட நிலையில்   அம்பாள் மயில் வடிவம் கொண்டு சிவனை வேண்டி  வெகுகாலம் தவமிருந்தாள். அம்பாளுக்கு   அருள்புரிய  சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார்.  கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், "மாயூரநாதர்' என்று பெயர் பெற்றார்..
                       ♥  வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் தனியாக  சன்னதி  கொண்டுள்ள   அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன்,  வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.
                       ♥  மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இத்தலம் மயிலாடுதுறை எனப்பட்டது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு நலன் பெற்றனர்.
                       ♥  மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்ட  மற்றொரு  ஸ்தலம்   மயிலாப்பூர்.  
                       ♥  ஒருமுறை கண்ணுவ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும் போது எதிரில்  வந்த   மூவர்   கண்னுவ முனிவரை வணங்கி தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்)    காவிரியின் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர். 
                       ♥  துலா மாதத்தில்   தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர் மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர். ஆகையால் துலா மாதத்தில்மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
                       ♥  துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராடும்  உறுதியுடன்  அதிதீவிர  சிவபக்தர்களான    நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர்  மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் நீராடல் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே  அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல் நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.
                       ♥  >> நாதசர்மா, அனவித்யாம்பிகை  தம்பதியருக்கு  சிவன்   முக்தி  அளித்ததால்  இக்கோயிலில் லிங்கங்களாக   ஐக்கியம்  ஆனார்கள்.   நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் "அனவித்யாம்பிகை' என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். 
                        ♥  "அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.
                       ♥  துலா நீராடலைக் கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகி விட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை   நீட்டி  வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு" என  கார்த்திகை மாதத்தின் முதல் நாள்  கொண்டாடப்படுகிறது. 
                       ♥  இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு   2022 -ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.  கோயில் முழுவதும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.,  கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து தீர்த்தங்கள் மயிலாடுதுறைக்கு  கொண்டுவரப்பட்டு துலாக்கட்ட காவிரியில் இருந்து யானை மீது அவற்றை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆலயம் வந்தடைந்தது. புனிதநீர் அடங்கிய கடங்களில் கருவறையில் உள்ள சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் ஆவாஹனம் செய்யப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கடங்களை தலையில் சுமந்து வந்து,    123 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலையில் பிரவேசம் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டன 
                       ♥  அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக  யாகசாலை பூஜை,   சிவநெறி சொற்பொழிவுகள், இன்னிசை மற்றும் பரதநாட்டிய கச்சேரி, 82 மணி நேரம் தொடர்ச்சியாக அகண்ட பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று,   திருவாவடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில்  , மகாபூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. 
                       ♥  சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க  கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்து,  அங்கு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத    3 - 9 - 2023 ம்   தேதி காலையில்   மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.    இந்த கும்பாபிஷேகத்தை  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.  
                       ♥  இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். 
                       ♥  துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.
                       ♥  இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி ( குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில்  ஒரு பாடல் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். 
                       ♥  >> இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் "ஜுவாலை சனி'யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் கெடுதல்  குறையும் என்பது நம்பிக்கை..
                       ♥  >> அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம்உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது....
                       ♥  மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர்  சமாதி உள்ளது.
                       ♥  >> பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு  ‘குதம்பை சித்தர்’    ஆடி மாதம் : விசாகம்  நட்சத்திரத்தில்  :பிறந்தவர் என  சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது..குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது  அவரை  சந்தித்த மா தவர் ஒருவர்  அவருக்கு ஞான உபதேசம் செய்தார். 
                       ♥  மாதவர் “குதம்பை நீ போன பிறவியில் கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பு  அடித்த  புயல்  காரணமாக  மரம்  முறிந்து   தவத்தில்  அமர்ந்திருந்த  உன்  மீது விழுந்ததில்   உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய்.   இந்தப்பிறவியில்   அந்தத் தவத்தை தொடர்ந்து  செய்து  வெற்றி பெறுவாய்” என்றார்.
                       ♥  >> ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து  காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார் . அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. 
                       ♥  ஒரு முறை தவத்தில் ஆழ்ந்த குதம்பையாருக்கு உலக நன்மைக்காக பரந்தாமனால் வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது.  இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் என   கூறப்படுகிறது. ..
                       ♥  >> யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம்  கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகள்     அவர்களுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்
                       ♥  குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 
                       ♥  >> துலாம்  ராசியில்   பிறந்தவர்களுக்கு விசேஷமாக  அருள்புரியும்  இந்த குதம்பைச் சித்தரை   வழிபட   வெள்ளி கிழமை  உகந்த நாள்  ஆகும்.    
                       ♥  >> மயிலாடுதுறை   மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில்  உள்ள குதம்பை சித்தர் சமாதியின் மேல் விநாயகாரின் திருவுருவம் உள்ளது மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், மழை பொழியும் என்பது நம்பிக்கை .. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, "அகத்திய சந்தன விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள்..
                       ♥  >> குதம்பை சித்தரின் சமாதி கொண்ட அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்பட்ட  மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 கிலோமீட்டரும் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டரும் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, பல சித்தர்களின் சமாதிகள் மற்றும் நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...