Tuesday, October 3, 2023

திருவஹிந்தபுரம் தேவநாதப் பெருமாள் திருக்கோயில், கடலூர்

தினம் ஒரு திவ்யதேசம்

72 - திருவஹிந்தபுரம்
தேவநாதப் பெருமாள் திருக்கோயில், கடலூர்

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை 
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து 
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த 
பாவு தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.
- திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களின் அமுத பாசுரம் பெற்ற திருமாலின் 108 திவ்ய தேசங்களுள் நடு நாட்டுத் தலம் என்பவை இரண்டு. அவற்றில் இது முதலாவது; இரண்டாவது திருக்கோவிலூர் திருவிக்கிரமன் கோவிலாகும்.

கடலூருக்கு சுமார் ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்திருத்தலம் சிறு குன்றின் மீது ஹயக்ரீவரையும், அடிவாரத்தில் தேவநாப் பெருமாளையும் குடி கொண்டுள்ள சிறப்புற்றது. 

தலபுராணம்

தேவர்களுடன் போர் புரிந்த அசுரர்களிடம் பிரமன் சிவனாரை துணை கொள்ளுமாறு கூற, திருமால் தன் சக்ராயுதத்தை ஏவி அசுரர்களை அழிக்க, அசுரர்கள் அவரிடமே தஞ்சமடைய, எம்பெருமான் தாமே மும்மூர்த்தியாகவும் அருள் பாலிப்பதாக உரைத்து தன் மேனியில் சிவன், விஷ்ணு, பிரமன் எனற மூன்று உருவங்களையும் காட்டிய சிறப்புடைய தலமாகும் இது.

தேவர்களைக் காத்தவன் என்பதால், அண்ணல் இங்கு தேவநாதப் பெருமான் என்னும் பெயர் பெற்றவனானான். யுகம் கண்ட பெருமாள் என்றும் சொல்வர்.  உற்சவரின் பெயர் அச்சுதன்.

தாயாரின் திவ்ய நாமம் செங்கமலம். வடமொழியில் ஹேமாம் புஜவல்லி என்பர். 

பெருமாள் இங்கு நித்ய வாசம் செய்வதை அறிந்து ஆதிசேஷன் இங்கு ஒரு நகரத்தையே நிர்மாணித்தான். அதுவே திரு அஹிந்த்ர (ஆதிசேஷன்) புரம் என்றாயிற்று. மற்றொரு சிறப்பு இங்கு பெருமாளுக்கு தாகம் எடுக்கையில், ஆதி சேஷன் தன் வாலால் பூமியில் அடித்து வரவழைத்தது என்னும் சிறப்புப் பெற்றது இங்குள்ள சேஷ தீர்த்தம்.

தலச்சிறப்பு

மும்மூர்த்தியாகவும் இங்கு காட்சியளிக்கும் தேவநாதப் பெருமான், ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலுக்கும் கர்த்தாவாக இருந்து தன்னை அண்டி வருவோருக்கு அபயம் அளித்து வாழ்வில் குறையா வளம் அளிப்பவராகிறார். வாழ்வில் எத்தகைய துன்பங்களினால் தொல்லையுற்றாலும், இங்கு வந்து தரிசித்தால் அவை நீங்கப் பெறலாம்.
கோயிலின் உள்ளே உள்ள ஆதிசேஷனின் சேஷ கிணற்றில் உப்பும் மிளகும் போட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
ஆதிசேஷன் நிர்மாணித்த தலம் என்பதால் அனைத்து விதமான நாக தோஷங்களையும் போக்கும் பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. தங்களது ஜாதகத்தில் ராகு கேது அமைந்திருக்கும் இடத்தால் அவதியுறுவோரும், அவற்றின் பெயர்ச்சியால் இன்னல் அடைவோரும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.
இலங்கையிலிருந்து அனுமன் சஞ்சீவி மலையைக் கொணரும்போது அதிலிருந்து ஒரு பகுதி விழுந்து இம்மலையானது என்பர். இதனால், இம்மலையே ஔஷதாசலம் எனப்படுகிறது. இங்கு பல நூல்களை இயற்றிய வேதாந்த தேசிகர்,  இம்மலையில் தவம் செய்து ஆதிசேஷனையும், ஹயக்ரீவரையும் கண்ணாரக் கண்டார். ஹயக்ரீவருக்கு என்று தனியே கோயில் உருவானது இம்மலையில்தான். இங்கு வந்து ஹயக்ரீவரை வணங்குவோர் கல்வி கேள்வியிற் சிறந்து விளங்குவர் என்பது திண்ணம்.
தேவநாதப் பெருமாளை வழிபடுவோருக்கு செல்வம் பெருகும்; மக்கட்பேறு  உண்டாகும்; ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...