Sunday, November 5, 2023

பெண்ணுக்குச்_சமஉரிமையைத்_தந்த_இறைவன்🙏#அர்த்தநாரீஸ்வரர் 🙏

#பெண்ணுக்குச்_சமஉரிமையைத்_தந்த_இறைவன்🙏
#அர்த்தநாரீஸ்வரர் 🙏
       "அர்த்தம்" என்றால் பாதி; *நாரி என்றால்  பெண். சிவபெருமானின் ஆண் உருவம் பாதியும், பார்வதிதேவியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவமே அர்த்தநாரீஸ்வரர்.  சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை! என்பதனை விளக்குகின்ற வடிவமே இது. பெண்ணுக்குச் சம உரிமையைத் தந்த இறைவன் சிவபெருமான். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானமே என அகிலத்தோருக்கு அறிவித்த வடிவமே #அர்த்தநாரீஸ்வரர்.
           உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், மாதொரு பாகன் எனவும் கூறுவதுண்டு.  பிருங்கி முனிவர்,   பெண் தெய்வங்களை வழிபடாது பகவானை மட்டுமே  வழிபடும் தீவிரபக்தர். இவர் எப்பொழுதும் வண்டாக மாறி வந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றுவிடுவாராம். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, சிவனாரிடம் வேண்டி, அவரது இடப்பாகத்தில் தான் இடம் பெற வரம் பெற்றாராம். அந்தவடிவமே  மாதொருபாகனான  சிவனாரின் வடிவம்.
             அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி  சங்க இலக்கியங்களிலேயே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்று கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது.
        தேவார பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனான அர்த்தநாரீஸ்வரரைக் குறிப்பதேயாகும்.   
            காஞ்சி கைலாசநாதர் கோயிலில் உள்ள அர்த்தநாரீசுவரர் வடிவம் தென்னிந்தியாவில் காணப்படும் பழைய வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு உமாதேவி வீணையுடனும்,  சிவபெருமான் காளையில் ஏறிய கோலத்திலும் காணப்படுகின்றனர்.
     திருச்செங்கோடு சிவனார் கோயிலில் மூலவர் அர்த்தநாரீசுவரராக அமர்ந்துள்ளார். இங்கு உமாதேவியார்,   #அர்த்தநாரீசுவரி, #பாகம்பிரியாள் என்ற பேர்களில்  அருளுகிறார்.  இங்குள்ள  அர்த்தநாரீசுவரர்,    "மாதொருபாகன்"  என்றும் அழைக்கப்படுகிறார் .🙏
   #ஓம்நமசிவாய  #ஓம்சக்தி  🙏
__கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...