Thursday, November 2, 2023

அஞ்சனை மைந்தனான அனுமனுக்கு ராமர் என்றால் தன் உயிருக்கும் மேலான உயிர்...

அஞ்சனை மைந்தனான அனுமனுக்கு ராமர் என்றால் தன் உயிருக்கும் மேலான உயிர்...

அப்படி ஒரு பக்தி.

தன் உள்ளத்தில் கோயில் கட்டி குடி வைத்துள்ள கோதண்டராமரை, யுகம் யுகமாகத் தனது நெஞ்சில்  சுமக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மீண்டும் ஒருமுறை மண் மீது தரிசிக்கும் ஆசையில் அனுமன் தற்போது ஆந்திராவில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில் ஒரு கருங்காலி மரத்தின் அடியில் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

நீண்ட நெடுங்காலம் தொடர்ந்த அந்த தவத்தை அன்று நிறைவு செய்ய முடிவு செய்தது பரம்பொருள்.

அது மட்டுமா ?

தன் அன்புக்குரிய அடியவனாம் அனுமனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்க்கவும் சித்தம் கொண்டது. 

சூரிய கோடிப் பிரகாசத்துடன் வாயு மைந்தனின் முன் திருக்காட்சி தந்தது.

ஆவலுடன் கண்விழித்தார் ஆஞ்சநேயர். 

மறு கணம் அவர் புருவங்கள் உயர்ந்தன. 

தேவர்களும் ரிஷிகளும் தவமாய் தவம் கிடந்தும் கிடைக்காத பகவானின் தரிசனத்தால் மகிழ்வதற்குப் பதிலாகக் குழப்பத்தில் ஆழ்ந்தார் வாயுவின் மகன் ஆஞ்சநேயர்.

இருக்காதா பின்னே ! 

ஸ்ரீ ராமனைத் தரிசிக்கும் ஆவலுடன் கண் திறந்தால்... 

மிரட்டும் விழிகளும் கோரைப் பற்களும் சிங்க முகமுமாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அல்லவா காட்சி தருகிறார் ?!

ஸ்ரீ ராமனைக் காணாத ஏமாற்றத்தால் அனுமனின் முகம் வாடிப் போனது. 

என் ராமன் எங்கே ?
என்பது போல் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திருமுகத்தை நோக்கினார் ஆஞ்சநேயர்.

இறை மலர்ந்தது.

நானும் ராமனும் ஒருவர்தானே என்று அனுமனிடம் சொல்வது போல் தலையசைத்துப் புன்னகைத்தார்.

அந்த இறைமொழி புரிந்தது என்றாலும், அஞ்சனை மைந்தனுக்கு மனம் ஒப்பவே இல்லை. 

அழகின் உறைவிடமான என் ராமன் எங்கே?

கோரைப் பற்களும் கோர முகமும் கொண்ட இவர் எங்கே !

 கருணை பொழியும் ஸ்ரீ ராமனின் திருமுகம் பகைவரையும் ஈர்க்குமே !

 அவரும் இவரும் ஒருவரே என்பதை எப்படி ஏற்க முடியும் ? 

அனுமனின் மனக் குழப்பம் தீரவில்லை.

அசுரர்களையே குலை நடுங்கச் செய்த தலம் இது. 

அரக்கர் தலைவன் ஹிரண்யகசியுவின் கதை முடித்த தலம். 

இங்கு, உக்கிரமான இந்தக் கோலத்தில் அருள்வதே சிறப்பு என்ற பரம்பொருளின் எண்ணம். 

ராம பக்தியால் அனுமனுக்குப் புரியவில்லையோ !.

ஸ்ரீராமன் எனும் வடிவில் பரம்பொருளை ஆராதித்துப் பழக்கப்பட்ட அவர் மனம், இவரும் அவரும் ஒன்றே என்று ஏற்க மறுத்தது !

விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே !.

அணு முதல் அண்டபகிரண்டம் அனைத்தும் எனது சாந்நித்தியமே !.

இது வேறு, அது வேறு என்ற பாகுபாடு இங்கில்லை என்பதை அனுமனுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் உணர்த்த எண்ணிய இறை, ஒரு காரியம் செய்தது.

 திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தது.

 நன்றாக என்னை உற்றுப் பார் என்று ஆணை இட்டது.

அனுமனும் உற்று நோக்கினார்!.

 ஸ்ரீநரசிம்மரும், ஸ்ரீராமனும் நாராயணரின் அவதாரம்தான் என்பதை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விளக்கும் விதமாக, சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க... 

வலக் கரத்தில் சக்கரமும்,
இடக் கரத்தில் கோதண்டமும்
திகழ அற்புதமாய் அருட்காட்சி
தந்தார் ஸ்ரீநரசிம்மர்.

அனுமனுக்கு உண்மை புரிந்தது.
தான் போற்றும் பரம்பொருளே இவர்தான் என்று உணர்ந்தார்.

 கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார்.
அனுமனுக்கு அன்று காட்சி கொடுத்த ஸ்ரீநரசிம்மரை வில்லேந்திய அதே திருக்கோலத்தில், இன்றைக்கும் நாம் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.

 கருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்தால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றே திருநாமம். 

கரஞ்சை என்றால் கருங்காலி என்று பொருளாம்.

No comments:

Post a Comment

Followers

ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்.

தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான #திருஓணகாந்தன்தளி[237] வரலாறு மூலவர் : #ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் உற்சவர்...