Wednesday, November 22, 2023

உடையார்பாளையம் பயறணீஸ்வரர் (முற்கபுரீஸ்வரர்)நறுமலர்பூங்குழல்நாயகி அம்மன் அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகள்
மிகப்பழமையான சிவத்தலமான #முற்கபுரி என்ற (பயறணீச்சுரம்)
#உடையார்பாளையம்
#பயறணீஸ்வரர் (முற்கபுரீஸ்வரர்)
#நறுமலர்பூங்குழல்நாயகி அம்மன் (சுகுந்த குசும குந்தளாம்பிகை) திருக்கோவில் வரலாறு:
 பயறணீஸ்வரர் திருக்கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணிநாதர் ஆகும். அம்பிகையின் திருப்பெயர் சகுந்தகுந்தளாம்பிகை அல்லது பூங்குழல்நாயகி ஆகும். இத்தலத்தை முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளர்.
மூலவர்: பயறணீஸ்வரர் (முற்கபுரீஸ்வரர்)
அம்மன்: நறுமலர் பூங்குழல் நாயகி
தீர்த்தம்: காண்டீப (வில்வடிவ) தீர்த்தம்
தல விருட்சம்: மகிழ மரம்
புராண 
பெயர்:முற்கபுரி,
பத்ராரண்யம் 
ஊர்:  உடையார்பாளையம்
மாவட்டம்: அரியலூர்
மாநிலம்: தமிழ்நாடு 

பாடியவர்கள்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

#தலச்சிறப்பு : 

தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையமும் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர்பெற்ற பல ஜமீன்தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்பெயரை கொடுத்து உள்ளார்கள். இதன் அதிபர்களாகிய "காலாட்கள்  தோழ உடையார்கள்" தங்கள் படைகளுடன்  தங்கிய இடமாதலின்  இதற்கு உடையார்பாளையம் என்று பெயர் பெற்றது.

இந்த ஊரில் உள்ள திருக்குளம் வற்றியதே இல்லை. உடையார்பாளையத்தில் தெப்ப உற்சவம் அழகு என்பது வாக்கு.

18 நூற்றாண்டில் அன்னியர்கள் படையெடுப்பின் போது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், வரதராஜப் பெருமாள்  கோயில் உற்சவ மூர்த்திகள் உடையார்பாளையத்தில் எழுந்தருளவிக்கப் பட்டு நித்திய பூஜைகள் நடைபெற்றன.
உடையார்பாளையத்திற்கு சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது.

இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம்.

இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாகும்.

#தலவரலாறு : 

இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.  இவ்வூர்  வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப் பட்டதால்  அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்தி விட்டுக் கொண்டு செல்ல,  விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகி இருக்கவே, இத்தல  சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பது உணர்ந்து இங்கு  வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிற்கள் எல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான்.   

இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு  "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன.

மிளகை பயிறாகச் செய்த காரணம் பற்றிச் சிவபெருமானுக்கு பயிறணி நாதர் என்று திருநாமமும்  இந்த ஊருக்கு பத்ராரண்யம், பயறணீச்சுரம் மற்றும் முற்கபுரி என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீஸ்வரர் என்றும்  தமிழில் பயறணி நாதர் என்றும் வழங்கப்படுகிறது.
அம்பாளின் வடமொழி பெயர் சுகுந்த குசும குந்தளாம்பிகை .

முற்கம் என்றால் பயிறு என்று பொருள்.

இங்கே உள்ள “திரு பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று.   சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும்  மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப் பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில்  சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது.  இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார்  அருச்சுனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம்.  இவர் திருக்கரத்தில்  ஒரு வில் உள்ளது.

இந்த இடம் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பிறர் போன்ற பல்வேறு காலங்களில் பல வம்சங்களால் ஆளப்பட்டது. கடந்த நான்கு நூற்றாண்டுகள் உடையார் ஆட்சியில் இருந்ததால் இத்தலம் உடையார்பாளையம் என்று பெயர் பெற்றது.

#தல_பெருமை:

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள்
வனவாசத்தில் இருந்த போது முற்கபுரி என்று அழைக்கப்பட்ட இன்றைய உடையார்பாளையத்தில் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட போது விநாயக பெருமானை வேண்டிக்கொண்டனர்.
விநாயகப் பெருமான் அர்ஜுனனுடைய காண்டீப வில்லை வளைத்து அந்த இடத்தில் ஏரியை உண்டாக்கினார்.அவ்வாறு வில்லை வளைத்த நிலையிலே இந்த ஆலய வாசலில் வில் வளைத்த விநாயகர் என்ற பெயரில் காட்சி தருகிறார்.

ஈசனுடைய திருக்கல்யாண வைபவத்தை காண யாவரும் கைலாயம் சென்றனர்.இதனால் பாரத தேசம் இரண்டாகி தென்கோடி தாழ்ந்து வடகோடி உயர்ந்தது.
இறைவன் குறுமுன அகத்தியனை அழைத்து தெற்கே சென்று நிற்க.பூமி சமமாகும் என்று உத்திரவிட்டார்.
இதனால் அகத்தியர் தென்கோடி செல்லும் போது இந்த ஆலயத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட போது இந்த ஏரியின் தவளைகள் சப்தமிட்டு இடையூறு செய்து கொண்டிருந்தன.
இதனால் அகத்தியர் கோபமுற்று இனி சப்தம் செய்ய கூடாது என்று சாபமிட்டார்.
அன்றிலிருந்து இந்த ஏரியில் தவளைகள் சப்தம் செய்வதில்லை.

#திருவிழா:

பங்குனி பிரம்மோற்சவம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களின் அனைத்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

#நடைதிறப்பு : 

காலை 6.00 மணி முதல் மதியம்12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

#செல்லும்வழி:
  
அரியலூர் –ஜெயம்கொண்டம்  மற்றும் திருச்சி- ஜெயம்கொண்டம்  நடுவே 
உடையார் பாளையம் கோவில் உள்ளது.அரியலூரில் இருந்து 29கிமீ தொலைவில் உள்ளது மற்றும் நேரடி பேருந்துகளும் உள்ளது .ஜெயம்கொண்டதில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...