அநுமனின் சரணாகதி...
பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் துன்பங்களையும் எதிர் கொள்ளாத மனிதனே இல்லை. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிய முடியாது. அவற்றை எதிர் கொண்டு அவற்றிற்கு தீர்வு என்ன என்பதை ஒரு கணம் உட்கார்ந்து அமைதியாகச் சிந்திக்க வேண்டும். வெறுமனே எல்லாவற்றுக்கும் பதட்டப்படுவதில் பலனில்லை.
இதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவன் அநுமன். தன்னை இராமனிடம் முழுமையாக அர்ப்பணித்த பக்தன் அவன். இராமனிடம் அவன் கொண்ட பக்தியும் பிரேமையும் அவனுடைய ஒவ்வொரு காரியத்திலும் ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்தது. ஒவ்வொருவரும் அநுமனைப் போல இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து காரியங்களைத் தொடங்கினால் வெற்றிகரமாக முடிக்க அவன் வழி காட்டுவான்.
அநுமன் இவ்வாறு இராமனிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாலேயே அவன் மேற்கொண்ட ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை நிலை நாட்டினான். இத்தகைய முழு அர்ப்பணிப்பே சரணாகதி ஆகும். பகவானின் பாதங்களைப் பற்றியவனை ஆற்றல் மிக்க மானிடனாக மாற்றுவான் என்பதற்கு அநுமனே நல்ல உதாரணமாகும்.
இந்த சரீரம் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாகும். ஆகவே இதனை தகுந்த முறையில் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. இச்சரீரத்தை வைத்து நம் வாழ்க்கையை ஆனந்தமாக, பிரேமையும் நேசத்தையும் பாசத்தையும் பிறருக்கு அளிக்க வல்லதாக மாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது. ஒரு நாள் இந்த சரீரம் நம்மை விட்டுப் போய் விடும். நாமாகவே அதற்கு முன்னால் இறைவனிடம் நம் சரீரத்தை ஒப்படைத்து வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே அநுமன் நமக்குப் புகட்டும் பாடம்.
இவ்வுலகில் உள்ள எல்லா பொருட்களும் எல்லா உயிர்களும் இறைவனுக்கே உரிமையானவை. படைத்தவன் அவனே. நமக்கு எதிலும் உரிமை இல்லை. எனினும், நம் அறியாமையாலும் மயக்கத்தாலும் நாம் எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுகிறோம். கொடுப்பதும் அவனே. எடுத்துக் கொள்வதும் அவனே. ஈசாவாஸ்ய உபநிஷத் கூறுவதும் இதுவே. இந்நெறியைக் கடைப் பிடித்தவன் அநுமன்.
சுயநலமின்றி இறைவனுக்குச் செய்யும் தொண்டே உண்மையான பக்திக்கு அடையாளம். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பகவானிடம் அன்பு செலுத்துகின்ற பக்தன் நிச்சயமாக மோட்சத்தை அடைய தகுதி பெற்றவன் ஆகிறான். அநுமனின் பக்தி இதற்கு தகுந்த உதாரணமாகும். இராமாயண கதாபாத்திரங்களிலேயே உயர்ந்து நிற்பவன் அநுமன்தான். அவனுடைய ஆழ்ந்த புலமை, பக்தியின் ஆழம் எல்லாம் மகத்தானவை.
தன்னுடைய புத்திக்கூர்மையாலும் தெளிந்த பேச்சாற்றலாலும் இராமனின் உள்ளத்தை கவர்ந்தவனாகி விட்டான். அது மட்டுமல்லாமல் தன் தேகக வலிமையையும் நிரூபித்துக் காட்டினான். கடலைக் காற்றினும் வேகமாய்க் கடந்து சீதையை இலங்கையில் அவளை இராமனிடம் சேர்த்து வைத்த பெருமை அவனையே சாரும். சஞ்சீவி மலையைக் கொணர்ந்து போரில் மாண்ட இலக்குவனையும் வானரப் படைகளையும் உயிர்ப்பித்தான். இப்படி மாபெரும் சக்தி படைத்திருந்தும் அவனுடைய பணிவும் தன்னடக்கமுமே அவன் பெருமையைப் பன்மடங்கு உயர்த்தின. எத்தகைய அகங்காரமுமின்றி எல்லா வெற்றிகளையும் இராமனுக்கே அர்ப்பணித்தான். நான் என்ற கர்வமின்றி ஒரு சிறந்த பக்தன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவன் அநுமன். எத்தகைய எதிர்ப்பார்ப்புமின்றி எல்லாப் பணிகளையும் வெற்றிகரமாக முடித்தான். உண்மையான கர்மயோகி அவனே. உண்மையான பக்தனும் பரிபூர்ண ஞானியும் அவனே.
பட்டாபிஷேகம் முடிந்த தருணம் சீதை அநுமனுக்கு அன்பளிப்பாக தன் கழுத்திலிருந்த முத்து மாலையைப் பரிசாக அளிக்க எண்ணி இராமனைக் கடைக்கண்ணால் நோக்கினாள். இராமன் சரி என மௌனமாய் அனுமதிக்க அந்த முத்து மாலையை அநுமனுக்கு அணிவிக்கிறாள் சீதா பிராட்டியார். இராமனையே சரணாகதி எனப் பணிந்த அநுமனின் ஆழ்ந்த பக்திக்கு இதை விடப் பெரிய பரிசு என்ன இருக்கப் போகிறது?
தன்னையே இராமனிடம் ஒப்படைத்த அனுமன் வழியை நாமும் பின்பற்றுவோம். இதுவே சரணாகதிக்கு இலக்கணமாகும். இதன் மூலம் நம் கவலைகள், ஏக்கங்கள், மன அழுத்தம், துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நாம் அவனைச் சரணடைந்தால் அவன் பாதுகாப்பில் நாம் இருப்போம். அதன் பின் இன்பமே. எந்நாளும் துன்பமில்லை.
கீதையில் பகவான்,
தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத
தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம் (18-62)
என்கிறான். எவ்வகையேனும் அவனையே சரணடைவாய். அவனருளால் சாந்தியையும் அழிவில்லாத பதவியையும் அடைவாய் என்பது கண்ணன் வாக்கு.
அநுமனை வணங்கி வாழ்த்தி வாழ்வில் வளம் பெறுவோம்!
No comments:
Post a Comment