🌺 சோழப்பேரரசின் மிகவும் புகழ் பெற்று விளங்கிய மன்னன் ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவியுள் ஒருவரும், ராஜேந்திர சோழனின் தாயாருமான 'திருபுவன மாதேவி" பெயரால் ஒரு ஊரை அமைத்து உள்ளார், ராஜராஜ சோழனாலே கட்டப்பட்ட சில கோயில்களில் முக்கியமான ஒன்று இன்றைய பாண்டிச்சேரி அருகே தற்போது மதகடிபட்டு எனும் ஊரில் அமைந்துள்ள "திருக்குந்தன்குடி மகாதேவர் கோயில்" எனும் கற்றளி ஆகும்.
🌺 இவ்வூரானது கல்வெட்டில் வடகரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து தனியூரான திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலத்து குண்டாங்குழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன்” ஸ்ரீ குண்டாங்குழி மகாதேவர்” என்று அழைக்கப்பட்டுள்ளார்.
🌺 இக்கோயிலுக்கு ராஜராஜன், ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன் மற்றும் பல்வேறு நபர்களும் கொடையளித்து இக்கோயிலை செழுமையாக வைத்திருந்துள்ளனர். இக்கோயிலின் பல்வேறு கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படாமலேயே உள்ளன.இக்கோயில் கோஷ்ட சிற்பங்களாக இருந்த தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கணபதி, துர்கை சிலைகள் தற்போது புதுவை அருங்காட்சியகத்தில் உள்ளது.
🌺 இக்கோயில் ஏக தள விமானமாக ஸ்ரீ வைஜயந்தம் எனும் பேதத்தை கொண்டது. கருவறை அர்த்தமண்டபத்துடன் உள்ள இக்கோயிலின் கோஷ்டங்களில் சிற்பங்கள் ஏதுமில்லை. கபோத பந்த அதிட்டானமும், வலபியில் பூத வரியுடனும், கிரிவ கோஷ்டத்தில் யோகசிவன், பிரம்ம சாஸ்தா , நான்முகன், விஷ்ணு ஆகியோர் உள்ளனர். அதிட்டான கபோத காடத்தில் விசாரசருமர் கதையும், அவருக்கு சண்டேச பதவி அளிக்கும் காட்சியும் குறுஞ்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
🌺 முன்பக்கத்தில் ஒரு மண்டபத்தின் அடிப்பகுதி மட்டுமும் , அம்மனுக்கு தனி சன்னதியும் உள்ளது. முன்னே ஒரு நந்தி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
🌺 இக்கோயிலின் வடிவமானது ராஜராஜனின் தாத்தா பராந்தகன் கட்டியதாக கருதப்படும் திருபுவனை வரதராஜ பெருமாள் அல்லது தோத்தாத்திரி பெருமாள் கோயிலின் அதிட்டானத்தில் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது, அதையே ராஜராஜன் இங்கு பெரியதாக கட்டியுள்ளார்.
#கல்வெட்டு_தானங்கள்
இக்கோயிலில் கிட்டத்தட்ட 48 கல்வெட்டுகள் உள்ளன.
🌺 ராஜராஜனின் 29 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று மெய்க்கீர்த்தி மட்டும் கொண்டுள்ளது. இன்னொன்று பத்தங்கி திருவையாறு தேவ கிரமவித்தன் என்பவன் இக்கோயில் மகாதேவர்க்கு நொந்தா விளக்கெரிக்க தொண்ணூறு ஆடுகள் தந்துள்ளான்.
🌺 ராஜராஜனின் 29 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இவ்வூர் சபையார் 13 பிராமணர்களிடம் இருந்து நிலம் வாங்கி அதை பன்னிரெண்டாக சேரிகளாக பிரித்து அதற்க்கு விஷ்ணுவின் பெயர்களை கொண்டு அமைத்து உள்ளனர்.
கோயில் கருவறை வடக்கு பக்க அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டு இக்கோயில் ராஜராஜனால் எடுப்பிக்கப்பட்ட தகவலையும், இக்கோயில் திருவமுது, திருப்பலி மற்றும் திருவிழாவிற்கு நில தானம் அளிக்கப்பட்ட செய்தியையும் தருகிறது.
மேலும் அம்மன் சன்னதியில் உள்ள ராஜராஜனின் பல்வேறு கல்வெட்டுகள் ஆடுகள் நிவந்தமாக கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.
முதலாம் ராஜேந்திரனின் 3ம் ஆண்டு கல்வெட்டு உத்தம நம்பி என்பவன் 90 ஆடுகள் கொடுத்ததை குறிப்பிடுகிறது.
🌺 முதலாம் ராஜேந்திரனின் 4ம் ஆட்சியாண்டில் காஸ்யபன் மகன் திருஞான சம்பந்த அடிகள் என்பான் 50 நிறையுள்ள மூடியுடன் கொண்ட மலையன் கெண்டி கொடுத்ததையும், தில்லையழகன் கால் நொந்தா விளக்கு வைத்ததையும் குறிப்பிடுகிறது.
🌺 முதலாம் ராஜேந்திரனின் 4ம் ஆட்சியாண்டில் இக்கோயில் திருவுண்ணாழிகையில் திருப்பணி செய்ய நிலம் கொடுத்ததையும்,பூவம் என்பவள் வைத்த நொந்தா விளக்கு பற்றியும் குறிப்பிடுகிறது.
🌺 முதலாம் ராசாதிராஜன் 28ம் ஆட்சியாண்டில் இக்கோயில் இறைவனுக்கு தயிரமுது வைத்ததை பற்றியும் குறிப்பிடுகிறது. மேலும் இவருடைய பல்வேறு கல்வெட்டுகள் துண்டுகளாக உள்ளன.
🌺 முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயிலில் இருந்த ஸப்த மாதர்களுக்கு திருவமுது படைக்க பிராமண பெண்கள் 45 பொற் காசுகள் தந்ததையும்,மற்றோன்று இங்கிருந்த தட்சிணாமூர்த்திக்கு அமுது படைக்க சிவப்பிரமணார் நெல்லை பெற்றுக்கொண்டதையும் குறிப்பிடுகிறது.
🌺 விக்கிரம சோழன் காலத்தில் பொய்யாமொழி எனும் பெயரில் நந்தவனம் அமைக்கப்பட்டதையும், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பல்வேறு நிவந்தங்களும் தரப்பட்டுள்ளன. 12ம் நூற்றாண்டு வரையிலும் பல்வேறு தானங்களும், நிலங்களும், பொன்னும் பெற்று சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது.
🌺 இந்திய தொல்லியல் துறையால் தற்போது நன்முறையில் பராமரிக்கப்படுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது, கால ஓட்டத்தில் எல்லாமே மாறும் என்பதற்க்கு உதாரணமாய்,ஒரு காலத்தில் பொருளாதாரத்தில் செழுமையாகவும், சீரும் சிறப்புமாய் இருந்த இக்கோயில் தற்போது மக்கள் வருகையின்றி காணப்படுகிறது.
பாண்டிச்சேரி செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பொக்கிஷத்தில் இதுவும் ஒன்றே.
ஓம்நமசிவாய
பார்த்து படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment